வியாழன், 24 பிப்ரவரி, 2011

மியான்மர் வல்லரசுகளின் வேட்டைக்களம்

தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான மியான்மர் ஒன்றிய குடியரசு கடந்த சில நாட்களாகப் பத்திரிகை செய்திகளில் தொடர்ந்து அடிபடுவதை வாசகர்கள் அறிவார்கள். கடந்த நவம்பர் 7 ஆம் நாள் அந்நாட்டை ஆட்சி செய்து வரும் இராணுவ ஆட்சியாளர்கள் கண் துடைப்பாக தேர்தல் நடத்தியதே ஊடக கவனத்திற்கு காரணமாகும். இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை. முடிவுகள் என்னவாக இருந்த போதிலும் போட்டியிட்ட இரண்டு முதன்மை கட்சிகளும் இராணுவ ஆட்சி சார்பானதே என்பதால் எந்த பெரிய மாற்றமும் நடைபெற்று விடப் போவதில்லை. அந்நாட்டில் சனநாயகத்திற்காக போராடி வந்த ஆங்சன் சூசி அவர்களை தேர்தலில் பங்கேற்க இராணுவம் தடை விதித்த காரணத்தினால் அவரது கட்சியினர் இத்தேர்தலை புறக்கணித்துள்ளனர். 1990 இல் இராணுவத்தால் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் முழு வெற்றி பெற்றவர் சூகி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்சாங் சூகி 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 1990 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தவர். இப்போதுதான் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். ஆங்சாங் சூசியை முன்னிட்டும் மனித உரிமை நோக்கிலும், மேலை நாடுகளின் பரப்புரை ஊடாகவும் உலகக் கொடுங்கோலாட்சிகளில் ஒன்றாக மியான்மர் அறியப்பட்டு இருக்கிறது.
இந்திய துணைக்கண்ட ஊடகங்களில் மியான்மர் பற்றிய செய்திகளில், மேற்கத்திய ஊடகங்களின் பார்வையிலேயே வெளியாகின்றன. இதன் காரணமாக உண்மைக்கு வெகு தூரமாக அதன் விபரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து வேறுபட்ட தேசிய இன நல பார்வையிலான பதிவு இது.
இப்போது மியான்மர் என அழைக்கப்படும் பர்மா நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்தமானது. பர்மாவுக்கும், தமிழகத்துக்குமான உறவும் கூட தொப்புள் கொடி வகைப்பட்ட நெடிய வரலாறு உடையது. 1853 முதல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் கையகப்படுத்தப்பட்டு 1948 வரை அவர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது.
1948 ஜனவரி 4ம் நாள் சுதந்திர குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட பர்மா இந்தியாவைப் போலவே தரகு முதலாளிகளின் ஆளுகையில் இருந்தது. இந்த புதிய ஆட்சி மக்களுக்கு எந்த சுதந்திரத்தையும் கொண்டு வந்திடாத நிலையில் வெகு மக்கள் அதிருப்தியுற்றவர்களாக காலம் தள்ளினர்.
மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்ட இராணுவம் 1962ல் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. மக்களின் தேசிய அபிலாஷைகளை ஓங்கி ஒலித்த இந்த ஆட்சி புத்த மதத்தையும், மார்க்சியத்தையும் கலந்து கட்டிய பர்மிய பாணி சோசலிஸத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லிக் கொண்டது. 26 ஆண்டுகள் இராணுவ ஆட்சியை நடத்திய இராணுவத் தலைவர் நீவின் அடுத்த 14 ஆண்டுகள் பர்மிய சோசலிச திட்டக் கட்சி என்பதன் பெயரால் ஒரு கட்சி ஆட்சி முறையை வழங்கினார். இந்த ஆட்சி காலத்தில் அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேசிய மயமாக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சியும் எதிர்ப்புக்கு இடமில்லாத ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டது.
இன்றைய உலக அரசியலை ஒற்றை வரியில் சொல்வதானால் இனங்களை அழிப்போர்க்கும், இன நலன்களை காக்க முயல்வோருக்குமான முரண்பாடும் இயற்கையை அபகரிக்க முயல்வோருக்கும் அதனை பாதுகாக்க போராடுபவர்களுக்கமான முரண்பாடுமே ஆகும். தேசிய இன அரசியலை பொறுத்தவரை அதனை முன் வைக்கிற கட்சி அல்லது ஆட்சி நல்லதா கெட்டதா என்பதை அளவிட 5 கூறுகளை உள்ளடக்கிய அளவுகோலை பயன்படுத்தலாம். அவை
1.     குறிப்பிட்ட தேசிய இன அமைப்பு/ ஆட்சி உலக வல்லரசிய அதிகார மையங்களோடு என்ன வகையான உறவைப் பேணுகிறது?
2.     சொந்த தேசிய இனத்திற்குள் இருந்து வரும் எதிர்ப்பை அல்லது துரோகத்தை எப்படி எதிர்கொள்கிறது?
3.     தனது இனத்தோடு வரலாற்றுப்பூர்வமாய் இணைந்து இருக்கும் இனச் சிறுபான்மையினரை எவ்வாறு கையாள்கிறது?
4.     அண்டை இனங்களோடு என்ன விதமாக உறவையும் பகையையும் பேணுகிறது?
5.     தனது இனத் தலைமையை கட்டமைப்பதில் எத்தகைய ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுகிறது?
என்பனவே அந்த அளவுகோல். ஒரு தேசிய இன அமைப்பு அல்லது ஆட்சி இனநல செயல்பாடுகளில் உறுதிபட ஈடுபட்டாலும் தலைமையை உருவாக்குவதில் ஏதேச்சதிகாரப்போக்கும் சொந்த இனத்திற்குள் இருந்து வரும் எதிர்ப்பை சகிப்புத்தன்மையற்று ஒடுக்குதலும் வரலாற்று பூரவமாக இணைந்து இருக்கும் இனச் சிறுபான்மையினரோடு பகைமையை பேணுதலும் சண்டை இனங்களோடு தொலைநோக்கற்ற உறவும், பகையும் வல்லரசுகளிடம் அடிபணிதலும், ஆன அணுகுமுறையை கொண்டிருந்தால் நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் விளைவு கேடானதாகவும், சொந்த இனத்திற்கு அழிவானதாகவுமே முடியும் என்பதற்கு இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மியான்மர்.
பர்மாவைப் பொறுத்தவரை அந்நாட்டு அரசாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் அங்கு வாழ்கிறார்கள். பாமர் என்கிற இனமே அவற்றில் பெரும்பான்மையானது. ஷன், காய்ன் என்கிற சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் ஊடாகவே பர்மா தன் பேராண்மையை நிலைநாட்டிக் கொள்கிறது. மக்களின் தேசிய இன அபிலாஷை சார்ந்த ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றிய படையினர் அந்த மக்களை பார்வையாளராகவும் பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் கருதி கையாண்டதன் விளைவே இன்றைக்கு அவர்கள் எதேச்சாதிகாரிகாய் இழித்துரைக்கப்படுகிறார்கள். எதிரிகளுக்கு அஞ்சி சொந்த குடிமக்களையும் இனச்சிறுபான்மையினரையும் ஒடுக்கியதன் விளைவு உலக பேட்டை ரவுடி அமெரிக்காவின் முன் கை கட்டி நிற்க வேண்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அஞ்சி ஈழத்திலும், திபெத்திலும் இன அழிப்பில் ஈடுபட்ட சீனாவின் பாதுகாப்பைப் பெற வேண்டி இருக்கிறது.
சொந்த நாட்டு மக்களின் ஆதரவை பெற முடியாததால் உள்நாட்டு உற்பத்தியை இழந்து போதைப் பொருள் கடத்தல் நாடுகளின் முக்கோணப் புள்ளியின் முதல் புள்ளியாய் திகழ வேண்டி இருக்கிறது. இயற்கை வளமிக்க பர்மா வறுமையில் வாட வேண்டியுள்ளது. இதன் விளைவாக 1998 இல் நடைபெற்றது போன்ற சொந்த மக்களின் கிளர்ச்சி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் உலகின் 12வது மிகப் பெரிய இராணுவமாக 4 லட்சத்து 88 ஆயிரம் துருப்புகளோடு தனது படைபலத்தை ஊதிப் பெருக்கி கொள்ள வேண்டி இருக்கிறது. இவையெல்லாவற்றுக்குமான நாம் முன் சொன்ன ஐந்து உறவுகளில் தொடங்கிய முதல் கோணல்தான் முற்றும் கோணலாக முடந்திருக்கிறது.
உள்ளபடியே 1962ல் தரகு முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிந்தபோது படையினர் சொந்த மக்களையும் இனச் சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டு அவர்களின் குடிநாயக உரிமைகளுக்கு குறைவு வராமல் பார்த்துக் கொண்டு இருந்தால் இன்றைக்கு அமெரிக்காவிற்கு அஞ்சி சீனாவிடம் சரணாகதி அடைந்திருக்க வேண்டிய தேவை இல்லை. குடிமக்களுக்கஞ்சி இராணுவத்தை ஊதிப் பெருக்கி இருக்க வேண்டிய தேவை இல்லை.
உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதி வளத்தை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உலகின் 75 விழுக்காடு தேக்கு மரங்களை உற்பத்தி செய்த காட்டு வளம் காணாமல் போயிருக்காது. இப்படி இப்படி ஏராளமாய் சொல்லிச் சொல்லலாம்.
தேசிய இன அரசியல் என்பது இன்றும், என்றும் இன மக்களின் நலவாழ்வு உறுதி செய்வதற்காகவும், பாரம்பரியமாய் தான் பெற்றிருந்த இயற்கை வளத்தை அறிவுச் செல்வத்தை பண்பாட்டு விழுமியங்களை புதிய உலகத் தேவைக்கேற்ப புணரமைத்து பாது காத்துக் கொள்வதற்காகவும்தான். இவற்றையெல்லாம் பறிகொடுத்துவிட்டு உதட்டில் வீரமும், உள்ளங்கைகளில் கருவிகளும் சுற்றிலும் மரண ஓலமாய் எஞ்சியிருப்பதில் என்ன பயன்? தேசிய இன அரசியலில் ஈடுபடுவோர் இப்படியாக எண்ணிப் பார்த்து பயின்று கொள்ள மியான்மரும் ஒரு பாடம்.
நிறைவாக மியான்மர் விடயத்தில் வழக்கம் போல் இந்தியா எவ்வாறு கேவலமாக நடந்து கொண்டது என்பதை விசுவாசமான இந்தியனான அமர்த்தியா சென் சொன்னது இது: (நன்றி: பாடம் 18) நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் ஜான் ஹாப்கின் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்திய உரையின்போது, சீன அரசின் கொள்கையைப் போன்றே, இந்திய அரசின் மியான்மர் (பர்மா) தொடர்பான கொள்கையும், மிகக் கேவலமாக உள்ளது என வருந்தியுள்ளார். கடந்த 48 வருடங்களாக, பர்மா, ராணுவ அதிகாரிகளின் முரட்டுத்தனமான அடக்குமுறையினால் அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஜனநாயகப் போராளியும், கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான "ஆங் சான் குக்யி', கடந்த 20 வருடங்களாக வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார்.
"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக