புதன், 23 பிப்ரவரி, 2011

டி.ஆர்.பாலுவே பொறுப்பு!: தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு


கொழும்பு, பிப். 22: கடலில் எல்லை தாண்டிச் சென்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட படகு உரிமையாளர்களே காரணம் என்று அண்மையில் இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 136 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அண்மையில் பிடித்துச் சென்றனர். அங்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டபிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், படகு உரிமையாளர்கள் வற்புறுத்தியதால்தான் தாங்கள் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் கூறினார்கள் என்று இலங்கை மாடக்கால் பகுதி அருள்தந்தை ஆனந்த குமார் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபரிடம் தெரிவித்திருக்கிறார்.அவர் மேலும் கூறியது:இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, வலையைச் சேதப்படுத்தும் வகையிலான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தங்களை படகு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாகவும், படகுகளில் பெரும்பாலானவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.எவ்வளவு மீன் பிடிக்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு (தமிழக மீனவர்கள்) கூலி கிடைக்கும். குறைந்த அளவு மீன் பிடித்தால், படகு உரிமையாளர்கள் அவர்களுக்கு குறைந்த கூலிதான் தருவார்கள். இந்திய கடல்பகுதியில் குறைந்த அளவு மீன்களே கிடைக்கின்றன. அதனால்தான் இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் வருகிறார்கள். எல்லை தாண்டி மீன் பிடிக்குமாறு படகு உரிமையாளர்களும் வற்புறுத்துகிறார்கள்.தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்களால் யாரையும் வெளிப்படையாகக் குற்றம்சாட்ட முடியவில்லை.அண்மையில் 136 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகும், அவர்கள் எல்லை தாண்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த திங்கள்கிழமைகூட சுமார் 50 படகுகளில் தமிழக மீனவர்கள் மாடக்கால் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.இலங்கை மீனவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு,அந்தத் தமிழக மீனவர்களை சிறைபிடித்ததை நான் அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னிடம் வந்தபோது, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை போலீஸôரிடம் ஒப்படைத்துவிடும்படி கூறினேன்.இந்த சம்பவத்துக்கு இலங்கை கடற்படை எந்த வகையிலும் காரணமில்லை. தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதற்காக அவர்கள் இலங்கை மீனவர்களுக்கு உதவவுமில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரும் திமுகவினரும்தான் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருக்கிறார்கள்.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வருவதால் தனது அரசியல் எதிரிகளைத் தோற்கடிப்பதற்குத்தான் மீனவர் பிரச்னை திமுகவுக்கு உதவியிருக்கிறது. அதேபோல், இங்குள்ள அரசியல் தலைவருக்கும் இந்தப் பிரச்னை பயன்பட்டிருக்கிறது. இந்த அரசியல் தலைவர் தன்மீது தமிழகத்திலுள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக திமுக அரசுக்கு உதவி வருகிறார்.இந்த இரு தரப்பு அரசியல்வாதிகளிடமும் சிக்கி மீனவர்கள்தான் அல்லல்படுகின்றனர் என்றார் அருள் தந்தை ஆனந்த குமார்.இதனிடையே, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவமே, இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து நடத்திய நாடகம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக