திங்கள், 14 பிப்ரவரி, 2011

இந்திய கடற்படையே தமிழகத்தை விட்டு வெளியேறு!

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்காப் படையினர் கட்டவிழ்த்து விட்டு வரும் கொலை வன்முறையின் தொடர்ச்சியாக தமிழக மீனவர் கொல்லப்பட்டு வருகிறார்கள். இப்போது ஜெயக்குமார் எனும் தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனும் செய்தி நம்மை யெல்லாம் கடும் கோபத்திலும் பெருந்துயரத் திலும் ஆழ்த்தியுள்ளது. சிறிலங்காப் படையினரின் இக் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டனம் செய்வதுடன், கொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.
உலகில் எந்தப் பாகத்திலும் தமிழர்கள் மீதுஎவரால் இன்னல் இழைக்கப்பட்டாலும், கொடுமைகள் நிகழ்த்தப்பட்டாலும் அவற்றை எதிர்த்து அனைத்துலக ரீதியாகக் குரல் கொடுக்க யாரும் நமக்கு இல்லை. உலகில் தமிழர்களுக்கென்று ஒரு அரசும், அதற்கான அரசாங்கமும் இதுவரை அமையாத சூழலில், உலகத் தமிழ் மக்களின் நலன்களுக்காகவும், தன்னால் இயன்றவரை போராட வேண்டிய கடமை தமிழர்களுக்கு இன்று அதிகரித் துள்ளது.
தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்களப் படையினரின் தொடர்ச்சியான வன்முறைகள் தற்செயலான நிகழ்வுகளல்ல. இதன் பின்னணியில் தமிழர்களுக் கெதிரான இனவாதமும், சிங்கள இனவாதத்தின் தமிழர் குரோத மனப்பாங்கினதும் ஒரு வெளிப்பாடா கவே நாம் உணர வேண்டும். தமிழக மீனவர்களுக் கெதிரான கொலை வெறியினை நோக்க வேண்டும். இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள், தமது படையினர் மத்தியில் பெரும் இனவாதத்தை ஊட்டியே ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பெரும் கொடும் போரை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சி யாகத் தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் வேட்டை யாடப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி, ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களை சிங்கள அரசு எதிர் குறியீடாகத்தான் நோக்குகிறது.
தமிழக மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படை யால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு “அரசியல் கட்சிகள், தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.'' பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சோமாலி யாவில் கடற் கொள்ளையர்களை ஒடுக்க இந்தியப் படை அனுப்பப் படுகிறது. ஆனால், நமது கடலில் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப் படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்கினால் மட்டுமே இப் பிரச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அவர் கூறியுள் ளார், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். அவர் மேலும் கூறுகையில், வங்கக் கடலில் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீது சிங்கள கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இலங்கைக் கடற்படையைத் தவிர, உலகில் வேறு எந்த கடற்படையோ அல்லது ராணுவமோ செய்வதில்லை.
இதற்கு மேலும் இந்திய அரசோ, தமிழக அரசோ அல்லது தமிழக மக்களோ பொறுமை காக்க முடியாது. கச்சத் தீவை மீட்பதும், இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதும்தான் இப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.
இலங்கையிலுள்ள இந்தியத் தூதரை திரும்பப் பெறுவதுடன், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இதைத் தவிர வேறு வழியில்லை.
இலங்கைப் படையினரின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, ஒவ்வொரு படகிலும் ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஏந்திய கடலோர காவல் படை வீரரையோ அல்லது காவலரையோ அனுப்ப வேண்டும். இது சாத்தியமில்லை எனில், ஒவ்வொரு படகுக்கும் ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி வழங்குவதுடன், அதை இயக்குவதற்கான பயிற்சியை யும் வழங்க வேண்டும் என்றார் பா.ம.க. நிறுவனர் ராமதாசு. அடுத்து,
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள், தமிழக மீனவரை கயிற்றால் இறுகக் கட்டி கடலில் தூக்கி எறிந்து இலங்கை கடற்படை கொலை செய்திருக்கிறது. இதுபோன்ற மனிதநேயமற்ற கொடிய செயல்கள் அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெற்றதாக தெரியவில்லை.
இலங்கை ராணுவத்தால் இதுவரை 500க்கும் மேற் பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,000 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயப்படுத்தப் பட்டுள்ளார்கள். மத்திய அரசாங்கத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மீனவர்கள் மீது நடை பெறும் துப்பாக்கி சூட்டை நிறுத்திக் கொள்ளுமாறு இலங்கை கடற்படைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இந்தப் பின்னணியில் இத்தகைய மென்மையான வேண்டுகோளை விடுவது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது.
இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பது, வேண்டு கோள் விடுவது ஆகிய நாடகங்களை மத்திய அரசு உடனே நிறுத்தி விட்டு, இலங்கை அரசாங்கத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கான நிர்ப்பந்தங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு தர வேண்டும் என்றார் தா.பாண்டியன்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படுவது ஆகியவை குறித்தும், இதனைத் தடுத்து நிறுத்தாமல் இந்திய கற்டபடை வேடிக்கை பார்ப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இந்திய கடற்படையும், இந்திய அரசும் தமிழக மீனவர்களை காக்கும் கடமையைச் செய்யவில்லை.
இல்லையெனில், தமிழக மீனவர்கள் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதை வேதனையோடு சுட்டிக் காட்டுகிறேன். தமிழக கட்சிகள், தலைவர்கள் கொடுக்கும் அறிக்கைகள் ஏதோ ஒரு வகையில் இந்தியா மீதும் இந்திய அரசு மீதும் ஒரு வித பற்றும் மயக்கமும் உண்டு. தேர்தல் என்ற மாய சூன்யத்தில் மாட்டிக் கொண்டவர்கள் அவர்களிடம் இதைத் தாண்டி எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
நமது மீனவரையும், அவர்களின் வாழ்வாதாரங் களையும் பாதுகாக்க இந்திய அரசுக்கும் துப்பில்லை. தமிழக அரசுக்கும் துப்பில்லை. விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் இன்று இருந்திருந்தால், இதுபோல நம் மீனவனை சுட்டுவிட்டு எக்காளமிடும் தைரியம் சிங்களக் கடற்படைக்கு வந்திருக்குமா?
நம் தேசத்தில் பிறந்து, மீன் பிடித்தலை தொழிலாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக, தமிழக மீனவர் கொல்லப்பட வேண்டுமா? எம் மீனவரை பாதுகாக்காத, இந்தியக் கடற்படைக்கு எமது மண்ணில் இடம் எதற்கு? எமது வரிப்பணம் எதற்கு? இந்தியக் கடற்படையை நம் மண்ணை விட்டு விரட்டியடிப்போம். தமிழனைக் காக்க வேண்டும் என்றால், தமிழக மக்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்.
நமது மீனவர்களை நாம் பாதுகாத்துக் கொள்ளு வோம். தமிழக மீனவரை பாதுகாக்கத் துப்பில்லாத இந்திய கடற்படை தமிழகத்தை விட்டு வெளியேற்ற அணி திரள்வோம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக