செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Posted Image

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த போதே தெற்குச் சூடானிலும் விடுதலைப்போர் ஆரம்பமானது. 25 ஆண்டுகளுக்கு மேலான காலம் தொடர்ந்த அந்தப் போராட்டம் தற்போது வெற்றியின் விளிம்பை எட்டிப் பிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களில் தென் சூடான் தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுவிடும்.

தென்சூடானில் கடந்த இருபத்திரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு விடுதலைப் போராட்டம், வெற்றியைத்தொட்டு நிற்கிறது. பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் எல்லாம் மறந்து உண்மை யான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தென் சூடானியர்கள் தயாராகி நிற்கிறார்கள். 2005 ஆம் ஆண்டில் கென்யாவின் மத்தியஸ்தத்துடன் வட சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தனிநாட்டுக் கோரிக்கைக்கான விருப்பு வாக்கெடுப்புவரை கொண்டு வந்துள்ளது. முழுச்சுதந்திர தேசமாகத் தென்சூடான் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள இன்னும் சில படிகளே இருக்கின்றன. நடந்து முடிந்த கருத்துக் கணிப்பில் இதில் தென்சூடானிய மக்களும், வடசூடானில் வாழும் தென்சூடானிய மக்களும் உலகம் முழுதும் புலம்பெயர்ந்து வாழும் தென்சூடானிய பூர்வீகக் குடிகளும் ஆர்வம் காட்டினர். வாக்கெடுப்பில் 97.5% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் குழுத் துணைத்தலைவர் டிமோன் வான் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார்.வடக்கு சூடானில் நடத்தப்பட்ட ஆதரவு வாக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 116,857 வாக்காளர்களில் 67,597 பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 41% ஒருங்கிணைவுக்கும், 55% தனிநாட்டுக்கும் ஆதரவாகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் பெப்ரவரி இடைப் பகுதியில் வெளியிடப்படும். அத்தேர்தல் முடிவுகளின்படி ஜூலை நடுப்பகுதியில் தனி நாட்டு பிரகடனம் மேற் கொள்ளப்படும். வெகுவிரைவில் ஆபிரிக்கா கண்டத்தின் ஐம்பத்து ஐந்தாவது தேசம் உதயமாகும்.

தென்சூடானின் உருவாக்கம்

இன்றைய சூடான் தற்போது இருக்கும் இடத்தில் முன்னர் எகிப்திய நாகரிகங்களுக்குச் சவால் விடும் வகையில் எழுச்சி பெற்றிருந்தது நூபியா என்ற ஆபிரிக்கப் பேரரசு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பேரரசு நிலை பெற்றிருந்தது என்று கூறப்பட்டாலும் ஆபிரிக்கா வில் நாகரிக உருவாக்க காலம் அதையும் கடந்து செல்வதை ஆராய்ச்சிகள்தெரிவிக்கின்றன. இந்தப் பேரரசு பல்வேறு தாக்குதல்களினால் மெல்ல மெல்ல நலிவுற்றுச் சிதைந்தது. இந்தப் படையெடுப்பாளர்களில் பெரும் பகுதியினர் இஸ்லாமியராக இருந்தனர். அவர்கள் வடசூடானில் வாழ்ந்த நூபியா பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். இதனால் சூடானிய அரேபியர்கள் என்ற புதிய இனம் வடசூடானில் உருவாகியது. அரேபிய யர்கள் வணிகத்தையும் கடல்சார் பயணங்களையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தமையால் பொருளாதார மற்றும் படை பலமுடையவர்களாக வடசூடானிய அரேபியர்கள் விளங்கினர்.வடசூடான் வெளியாள்களின் படையெடுப்புகளுக்கு உட்பட்ட அளவிற்கு சூடானின் தென்பகுதியானது, ஆரம்பம் முதலே அதிகளவான படையெடுப்புகளால் தாக்கப்படவில்லை. எப்போதும் தனது பழங்குடிப் பண்பாட்டுத் தனித்துவத்தை இழக்காமல் அது இருந்தது. தென்சூடானியப் பிராந்தியத்தில் இன்னும் பண்டைய மக்களது பல்வேறு வாழ்வியல் கூறுகளை அவதானிக்கலாம். இந்தப் போக்கு சூடானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பெருமளவு வெவ்வேறுபட்ட கலாசாரங்கள் தழைத்தோங்கி வளர்வதற்கான உந்துதலைத் தந்தது. இவ்வாறு ஒரு தேசத்திற்குள்ளேயே வடக்கு தெற்கு என இரு வேறு திசைகளில் பயணித்தவர்களை ஆங்கிலேயரது காலனித்துவம் வெகுவாகப் பாதித்தது. ஆங்கிலேயர் தமது நலன் சார்ந்து செயற்பட்ட வடசூடானில் அதிகளவு அபிவிருத்திகளை மேற்கொண்டனர். தென்சூடான் அடிமைகளை உற்பத்தி செய்யும் நிலமாகவே அவர்களால் பார்க்கப்பட்டது. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தென்சூடான் புறக்கணிக்கப் பட்டது. ஆங்கிலேயர்கள் தமது மதம் சார் அமைப்புக்களுக்கூடாக தென்சூடானில் மக்களை நாகரிகப் படுத்துவதாக அவர்கள் கூறிய பணியை மட்டுமே மேற்கொண்டனர். இறுதியில் நேரடிக் காலனித்துவத்தை ஆங்கிலேயர்கள் உலகத்தி லிருந்து கைவிடும்போது அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் வடசூடானிடம் வழங்கிவிட்டுச் சென்றனர். ஆட்சியை ஏற்றுக் கொண்ட வடசூடானிய அரேபியர்கள் மொழி, மதம், கலாசார விழுமியங்கள் என்ற விடயங்களில் தென்சூடானியர் மீதான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். 1969 ஆம் ஆண்டில் இருந்து சதிப்புரட்சி மூலம் வடக்கில் ஆட்சிக்கு வந்த கேணல் நிமேரி பல்வேறு அடிப்படைவாத ஒடுக்குமுறைகளைக் கடைப்பிடித்தார். இஸ்லாமிய ஷரியாச் சட்டம் தென்சூடானிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது தென்சூடானியர்களை மத, இன,கலாசாரரீதியாகப் புண்படுத்தியது. இதனால், அதிருப்தியுற்ற தென்சூடானியப் பழங்குடியினர் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் குதித்தனர்.

சூடான் மக்கள் விடுதலைப் படையும் ஆயுதப் போராட்டமும்

தென்சூடானியர்கள் அரசுக்கு எதிராக ஆரம் பித்த வன்முறைப் போராட்டங்கள், கிளர்ச்சிகள் நீடித்துப் பெருகின. 1983 ஆம் ஆண்டளவில் பெரியளவிலான வன்முறையாக அது வெடித்தது. இதனை அடக்குவதற்கு வடசூடானில் இருந்து படையினர் அனுப்பப்பட்டனர். இப்படையினருக்குத் தலைமை வகித்து வந்த ஜோன் கரெங் தென்சூடானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் சொந்த மக்களுடன் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார். இவரைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே சூடானிய விடுதலை இயக்கம். இந்த இயக்கமானது இராணுவத்துறை, அரசியல் துறை, வெளியுறவுத்துறை என்ற அமைப்பு வடிவில் போராட்டத்தை முன்னெடுத்தது.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே வடசூடானின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைச் சூடான் மக்கள் விடுதலைப் படையினர் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்களுக்கான ஆயுத வழங்கலை அமெரிக்கா கென்யாவூடாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. சூடானிய விடுதலை இயக்கத்தின் வெளியுறவுத்துறை யானது அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய வல்லரசுகளுடனும், உலகம் தழுவிய ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடனும் பரஸ்பர நல்லு றவைப் பேணுவதில் கவனம் செலுத்தியது.எப்படித்தான் கட்டுக்கோப்புடைய இயக்கமாக அது இருந்தாலும் அமெரிக்கா சார்புடைய ஒரு விடுதலைப் போராட்டக் குழுவாகத் தான் மாறுவதை அதனால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. இயக்கத்துக்குள் உட்பிளவுகள் பலவும் சிக்கல் கள் பலவும் இருக்கின்றன. பிரதேசரீதியான, இனரீதியான தன்னாதிக்கத்தையே இந்தப் பிளவுகள் காட்டுகின்றன என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தென்சூடான் அந்தச் சவாலையும் வென்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக