புதன், 23 பிப்ரவரி, 2011

தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்கம் - தழிழீழ விடுதலைப் புலிகள்.

தேசத்தின் அன்னைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் வீரவணக்கத்தை தெரிவித்துள்ளது.
தேசத்தின் அன்னைக்கு வீரவணக்கம் செலுத்தும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு...
21.02.2011
தமிழீழம்.

தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்கம்.
அகவை 81 வரை பெருவாழ்வு வாழ்ந்த திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா பெப்ரவரி 20ம் நாள் (2011) காலை 6.10 மணியளவில் காலமானார். அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இறுதி நாட்களைக் கழித்த அவர் கடும் நோய்வாய்பட்டு உயிர் நீத்தார்.
பண்பாலும் அரவணைத்துச் செல்லும் சிறப்பாலும் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான அவர் ‘தேசத்தின் அன்னை” என்று போற்றிப் பாராட்டப்படுகின்றார். அவருடைய பிரிவு ஏற்படுத்திய இடைவெளியை நிரப்புவது மிகவும் கடினம் அவரைப் போன்ற பெரியோர்கள் ‘தேசத்தின் அன்னை” என்று அழைக்கப்படுவதற்கு வரலாற்றில் உறுதியான காரணங்கள் இருக்கின்றன.
அவருடைய மரணம் சாதரணமானதல்ல. அது ஒரு யுக மாற்றத்தின் அறிகுறி. வாழ்வாங்கு வாழ்ந்த இந்த மூதாட்டியின் வாழ்வு வாய்மை, மனவுறுதி, இனப்பற்று என்பனவற்றின் வடிவமாகத் திகழ்ந்தது. காலத்தால் மறக்க முடியாத இந்த மூதாட்டியின் பிரிவால் அவர் விட்டுச் செல்லும் தமிழுறவுகள் கடுந்துயர் கொண்டுள்ளனர்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த இந்த வீரத்தாயின் மரணம் சாதாரணமானதல்ல. வாழ்வாங்கு வாழ்ந்த ‘தேசத்தின் அன்னையின்” சாவு எம்மினத்தின் பெரும் துயராகும்.
அவருடைய பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் இந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.
தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக