இன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 55 ஆவது அகவை காணும் புனித நாள்.
இறுதிக்கட்ட பொரின்போது வீரமரணமடைந்தார் என்று வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்பதற்கு இன்று பல ஆதாரங்கள் உண்டு. யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை இறுதிக்கட்ட போரின்போது நின்ற போராளிகளில் பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை தமிழீழ மண்ணையும், தமிழீழ விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட வாழ்வைப் படித்து போர்க்களத்தில் நுழைந்த பிரபாகரனின் வரலாறும் நேதாஜியின் கடைசிக்கால வரலாறு போலவே ஆகியிருப்பது ஆச்சரியம் தரும் உண்மையே.
அவருடைய 55 வது பிறந்த தினத்தில் அவர் மறுபடியும் மக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையே எங்கும் மேலோங்கி நிற்கிறது. அவர் வரவேண்டும் தமிழினம் மகிழ வேண்டும், தமிழீழம் மலரவேண்டும் என்ற அனைத்துத் தமிழ்மக்களினதும் விருப்பையே நாமும் அவரது பிறந்தநாள் வேண்டுதலாக வேண்டிநிற்கிறோம்.
பிரபாகரன் என்பவர் முந்தோன்றித்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஒருவரல்ல. அவருடைய சக்தி தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்துள்ளது. ஆகவே மாவீரர்நாளில் பிரபாகரன் உரையாற்றவில்லையே என்று மக்கள் கவலையடைதல் கூடாது. அவர் சிங்கள இனவாதத்தை மட்டுமல்ல, உலக இனவாத வெறுப்பையும் எதிர்கொண்டது மட்டுமன்றி உலகத்தமிழருக்கும் அதை அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரபாகரன் மக்கள் முன் என்றோ ஒருநாள் நிச்சயம் தோன்றுவார். அவர் இறந்ததிற்கான எந்த தடயங்களோ, சாட்சியங்களோ இன்றுவரை இல்லை. இன்றுவரை இந்தியா கேட்ட சாட்சியங்களையோ அன்றி ஆதாரங்களையோ காட்டமுடியாது தடுமாறி திகைத்து நிற்கிறது சிங்கள அரசு.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அவசர அவசரமாக கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டின் புலனாய்வுத்துறையினர் குழு ஒன்று. தலைவர் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வைத்திருந்தவேளை அவரிடமிருந்து பெறப்பட்ட கைரேகையை கையோடு எடுத்துச்சென்றிருந்த அந்த குழு பிரபாகரன் என இலங்கை அரசு காட்டிய உடலிலிருந்து அந்த கைரேகை மாறுபடுவதால் அதை உறுதிப்படுத்த முடியாமல் திரும்பிச்சென்று மெளனமாக இருந்தது. அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததான செய்தியை இந்திய அரசு அமத்தி வாசித்தது.
தர்க்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் தலைவர் பிரபாகரனின் மரணம் எந்தத் தரப்பாலும் இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை. கண்கட்டு வித்தைகளுடனும் பல மோசடிகளுடனும் அவரது மரணம் ஒரு கனவு போலவே விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்கட்டு வித்தைகளையும் மோசடிகளையும் பல தரப்பாலும் கூறப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உருவி எடுத்துவிட்டால் அவர் உயிருள்ள மனிதனாக உலாவுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.
குறைந்தபட்சம் மரணமடைந்ததாகக் கூறப்படும் அவரது பிள்ளைகளின் மரமபணுக்களுடனும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரது பெற்றோரின் மரபணுக்களுடனும் அவரது மரபணுக்களை சர்வதேச மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து (சிறீலங்கா -இந்திய நிபுணர்களின் ஆய்வு ஏற்றுக்கொள்ள முடியாதது) சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாம் அரவது மரணத்தை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கலாம்.
தன்னால் மட்டுமே இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என்று இறுக்கமாக நம்பிய ஒருவராக அவர் இருந்தார். அவர் யாரையுமே நம்பவில்லை. அதனால் தனது உயிர் குறித்து பெரும் அக்கறை கொண்டிருந்தார். தனக்கு ஏதும் நேர்ந்தால் இனம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதை அவர் தன்னளவில் உணர்ந்தே செயற்பட்டார். இது எமது போராட்டம் சார்ந்து மிக முக்கியமான விடயம். போராட்டம் தொடர்பான சரி, தவறுகள் மேலெழுந்த புள்ளி இங்குதான் மையம் கொண்டுள்ளது. இதை நாம் கவனமாக உள்வாங்கியிருந்தால் தலைவர் பிரபாகரன் குறித்த சச்சரவுகளுக்கு இடமே இருந்திருக்காது.
ஒருவர் தன்னால்தான் இந்த இனத்திற்கு தலைமை தாங்கமுடியும், தன்னால்தான் இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும், அதற்காக எந்த பெயரையும் தாங்கத் தயாராக இருக்கிறேன் என்ற உளவியலோடு யாரையும் நம்பாமல் ஒரு படையணியைக் கட்டியமைத்து அதைக் கொண்டு அந்த விடுதலையை அடைய எத்தனித்தது என்பது எவ்வளவு பெரிய விடயம். இப்படி ஒரு தலைமை கிடைப்பது அபூர்வம். இப்படி ஒரு தலைமை இனி எமக்கு கிடைக்ப்போவது இல்லை. எனவே இதைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்வதில்தால் எமது அடுத்த கட்ட அரசியலே இருக்கிறது.
எனவே கொஞ்சம் பொறுங்கள்! அவசர அவசரமாக வரும் செய்திகளை கேட்டு நீங்கள் குளப்பமடைவது மட்டுமன்றி மற்றவர்களையும் குளப்புவதானது தேச விடுதலைப் போராட்டத்தையும், மக்களின் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கும். இங்கு ஒவ்வொரு தரப்பும் தமது எதிர்த் தரப்பாகக் கருதி சில போராளிகள் மீது வசைபாடும் அவலம் அரங்கேறி வருகிறது. செ.பத்மநாதன், கஸ்ரோ, தமிழ்ச்செல்வன், பானு, ராம், நகுலன் என்று பட்டியல் நீளமாகக் கிடக்கிறது. உடனடியாக இதை நிறுத்தி ஒருமித்த கருத்திற்கு வருவதற்கு சம்பந்தப்ட்டவர்கள் முயற்சிக்கவேண்டும்.
இல்லையேல் தமிழர்களாகிய நாம் அழிவைநோக்கி நகர எதிரியானவன் இலகுவாக எம்மை அழித்துக்கொள்வான்.பிரபாகரன் தேடப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நடமாடிய ஒருவரல்ல. எதிரிகளும், ஆதரவாளரும் அவரைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே தேடக்கிடைக்காத வைரம் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. வருடத்தில் ஒரு தடவை மாவீரர்நாள் நிகழ்விற்கு அவர் மக்கள் முன் தோன்றிப் பேசுவார். அடுத்த வருடம்வரை அதுதான் அவருடைய பிரதான பிரசன்னமாக இருக்கும். அவருடைய உரை சிங்கள ஆட்சியாளராலும், இந்திய ஆட்சியாளராலும், சர்வதேச சமுதாயத்தாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகத்தில் அவருடைய உரையைப் போல உன்னிப்பாக நோக்கப்படும் வருடாந்த உரையை நிகழ்த்தும் உலகத் தலைவர்கள் எவருமே இருந்தாக சரித்திரமே கிடையாது. அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொண்ட உலகின் ஒரேயொரு தலைவராக அவர் இருந்தார். இருக்கிறார்.
பிரிட்டனின் பிரபல ஊடகமான பீ.பீ.சி உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப்படை வீரனாக அவரையே தேர்வு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்களத்தில் இருந்த ஒரு படையணி பெருந்தொகையான கப்பல்கள், விமானப்படை, கரும்புலிகள் அணி, காவல்துறை பிரிவு, நீதிநிர்வாக பிரிவு, விசேட தாக்குதல் படையணிகள், பெண்புலிகள் என்று கட்டமைத்த இராஜ்ஜியம் உலகத் தலைவர்களின் தன்மானத்திற்கே ஓர் அடியாக இருந்தது.
ஓயாத அலைகள் 3ன்போது அவர் சிறீலங்கா படைகளை பலாலி முகாமிற்குள் முற்றாக முடக்கி முழுமையான வெற்றியை எட்டித் தொட்டிருந்தார். மற்றய நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமானத்தோடு 40.000 சிங்களப் படைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார்.
ஆனால் இன்று சிங்களப் படைகள் தமிழ் மண்ணில் செய்த செயல்களை உற்றுநோக்கினால் எமது தேசியத்தலைவரின் மனிதாபிமானமும், மாசற்ற போர்த்திறணும் தெளிவாக அனைவருக்கும் புரியும்.
இறுதிக்கட்ட போரின்போது காயப்பட்ட பொராளிகளையும் மக்களையும் புல்டோசர்களை ஏற்றி நெரித்து. குற்றுயிராய் கிடந்த அத்தனை உயிர்களையும் குளிதோண்டிப் புதைத்தது. இப்படி வன்னியில் நடந்த மனித அவலங்கள் சொல்லிலடங்கா. இன்று சிங்களப் படைகள் செய்த செயலை அவராலும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதாபிமானத்திற்காகவும் உலக சமுதாயத்திற்காகவும் அதைத் தவிர்த்தார்.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் தனி ஒரு மனிதனாக உலகத்தின் 32 நாடுகளை (வல்லரசுகளை) எதிர் கொண்டார். சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, கடைசிச் சோழனோ எதிர் கொள்ளாத பெரும் சவால் இதுவாகும். கடந்த 2000 வருட வரலாற்றில் உலகப்போரை தனிமனிதனாக சந்தித்த ஒரேயொரு வீரத்தமிழனாகவும் எமது தேசியத் தலைவர் விளங்கியுள்ளார்.
அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார் என்பது தவறான கருத்தாகும். சென்ற ஆண்டு மாவீரர்நாள் உரையைப் பார்த்தால் அவரே இதைச் சொல்லியிருப்பதை உணரலாம். ஒரு சிறிய மக்கள் குழுவை எதிர்க்க இவ்வளவு பெரிய வியூகத்தை உலகநாடுகள் அமைப்பதா என்ற கேள்வியை ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டிருப்பார். அன்றே அவருக்கு யாவுமே தெரிந்துவிட்டது, அவருடைய மெல்லிய நமட்டு சிரிப்பிற்குள்ளேயே அது பொதிந்து கிடந்தது.
பிரபாகரன் தனது பிள்ளைகள், பெற்றோர், குடும்பம், தான் என்று அனைவரையும் களத்தில் வைத்தே அவர் போரை நடாத்தியிருக்கிறார் என்ற உண்மையை இப்போது நயவஞ்சக எதிரிகள் தெரிந்து கொண்டு மௌனமாக சிந்திக்கிறார்கள். எதிரிகள் மட்டும் பிரபாகரனுக்கு எதிராகப் போராடவில்லை. ஈழத் தமிழரே பல பிரிவுகளாகப் பிரிந்து அவருக்கு எதிராகப் போர் நடாத்தினார்கள். நடாத்தியும் வருகிறார்கள்.
பிரபாகரன் துரோகிகள், மற்றும் வஞ்சகர்கள் பலரை வெளியில் விட்டால் ஆபத்தென அருகில் வைத்திருந்தார் என்பதை இப்போது அனைவரும் உணர்கிறோம். சென்ற மாவீரர் நாள் உரையில் அவர் அதிகமாக பாவித்த சொல் ஆப்பு வைத்தல் என்பதுதான். உள்ளிருந்து ஆப்பு வைத்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். இப்படியாக உள்ளிருந்து ஆப்பு வைத்தவர்கள் பற்றிய கதைகள் மேலும் வரும். காலம் அந்தக் கதைகளின் உண்மையை விடுவிக்கும்.
ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட. இதை நாம் தெளிவாகப் புரிந்திருந்தால் நாம் பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுபட்டிருக்கவும் மாட்டோம்.
நேற்று மட்டுமல்ல இன்றும்கூட ஏன் நாளையும் கூட ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளும் போராட்ட சக்திகளும் தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இதை தற்போதைய யதார்த்தம் கேள்விக்குள்ளாக்கலாம் ஆனால் பிரபாகரனின் அந்த இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது.
எனவே தலைவர் பிரபாகரனின் இருப்பு பல துயரங்களினூடாக அழிவுகளினூடாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – அது உறுதிப் படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதை யார் புரிகிறார்களோ இல்லையோ தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எமது விடுதலையின் ஆதாரம் இதில்தான் தங்கியுள்ளது.
இனிவரும் தமிழர் வரலாற்றில் பிரபாகரன் : இல்லாமை என்பதே இல்லை – அவரது இருப்பே அதிமுக்கியமாகிறது. இதை புறந்தள்ளும் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் எமக்கு விடுதலையை பெற்றுத்தராது. மாறாக அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட இனமாகவே மீதிக்காலத்தை இந்த பூமிப்பந்தில் கழிக்க வேண்டியிருக்கும். இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் அதிதேவையாகிறது. எனவே நாம் முரண்பாடுகளை களைந்து ஒருமித்து ஒரு குரலாக போராடவேண்டும் என்பதே உண்மை.இன்று அவர் பிறந்தநாள் விழாவை அவர் இறக்கவில்லை என்ற உறுதியுடன் அனைவரும் கொண்டாடுவோம். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடாத்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம். தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போருக்கு தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய எமது போராட்டங்களை முன்நெடுப்போம். அதுவே நாம் அவருக்கு கொடுக்கும் சிறந்த பிறந்த நாள் பரிசாகும்
many more happy returns of the day.I salute the Hero,his ideals. Long live Tamileelam
பதிலளிநீக்கு