1938 இல் தந்தை பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம், மேலும் ஆகஸ்டு 15, 1947 தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்தது. 1960 இல் தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடம் எதிர்ப்புப் போராட்டம் என பல போராட்டங்கள் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடிப்படையை தந்தது. இதுவே தமிழ்நாடு விடுதலை என்ற புரட்சி இலக்கு நோக்கி முன்னேறியிருக்கிறது.
பெரியாரைக் கடந்து தமிழ் மொழி, இனம், பண்பாடு, மீட்சி சிந்தனையாளர்களின் செயல்பாடும், தேசிய விடுதலை நோக்கில் சிந்தித்த மார்க்சிய சிந்தனையாளர்களின் செயல்பாடுகளும், தமிழினத்தின் தனித்த தேசிய அடையாளத்தை உறுதிபடுத்தி விட்டது.
இதுநாள் வரை நம் தமிழகத்தை மேலாண்மை செய்து கொண்டிருக்கின்ற இந்தியச் சிந்தனையும், இடைச் செருகலான திராவிட சிந்தனையும் முடிவுரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் இந்தியம். திராவிடம் இரண்டுமே உண்மைக்கு புறம்பானது என்பதுதான். தேசிய வரையறைக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவற்றை "இந்தியன்' "திராவிடன்' என்ற தேசிய இன அடையாளத்தோடு நிறுவ வலிந்து முயற்சி செய்தது இதன் தோல்விக்கு காரணமாகும். இதனால் இக் கருத்துக்கள் அரை நூற்றாண்டு காலம் கூட பற்றுதியுடன் நீடிக்க முடியவில்லை.
சமூக எதார்த்தத்திற்கு பொருந்தாத இக் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டு இயற்கையான தமிழ்த் தேசியம் முன்னுக்கு வந்துள்ளது. யார் விரும்பினாலும், யார் விரும்பாவிட்டாலும் யார் ஆதரித்தாலும், ஆதரிக்கா விட்டாலும் தமிழ்த் தேசியம் அதற்கான அடையாளத்தை உலக அரங்கில் அது நிறுவிக் கொள்ளும். இது சமூக இயங்கியல் விதி.
தமிழ்த் தேசியம் யாருக்கானது? போரின் நலனை முன்னிலைப்படுத்துகிறது? என்பதெல்லாம் நாம் வடிவமைப்பதில்தான் இருக்கிறது. தமிழ்த்தேசியம் முற்போக்கானதா? பிற்போக்கானதா? உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிலைப் படுத்தக் கூடியதா? அல்லது ஆதிக்கர்களின் நலனை முன்னிலைப்படுத்தக் கூடியதா? என்பது தமிழ்த் தேச விடுதலை அரசியலின் நிலைப்பாட்டைப் பொறுத்தது. தமிழ்த்தேச விடுதலையை நிறுவக் கூடிய இயக்கங்களின் செயல் நோக்கங்களைப் பொறுத்தது.
இந்நிலையில் நாம் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிவிட முடியும். அதாவது தமிழ்நாடு விடுதலையை யாராலும் தடுக்க முடியாது. அது நிகழ்ந்தே தீரும். இதற்கான அகபுறக் காரணிகள் இன்றைய நிலையில் கூர்மையடையத் தொடங்கி விட்டது. திரை விலக்கப்பட்டு எதிரியும் தெளிவாக தெரிகிறது. தமிழீழத்தில் நடத்திய தமிழினப் படுகொலையும், தமிழகத்தின் மீதான உரிமை மறுப்பு நிகழ்வுகளும், இந்தியாதான் எதிரி என்பதை சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே, இந்தியாவுக்கு எதிராக தமிழ்த் தேசிய விடுதலையை உயர்த்திப் பிடிக்க வேண்டியது தமிழ்த் தேசிய இயக்கங்களின் கடமையாக இருக்கிறது. இதில் எவ்வகையான சுற்றி வளைப்பும் இல்லாமல் இந்தியாவே நமது முதன்மை எதிரி என்பதை பட்ட வர்த்தனமாக அறிவிக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதாவது நம்முடைய எதிரியைப் பொறுத்தவரை நாம்தான் எதிரிகள் என்பதை இந்திய அதிகார வர்க்கம் முடிவுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. இருந்த போதிலும் முன்பை விட இப்போது அசுர வேகத்தில் நமக்கு எதிராகஅரசு எந்திரங்கள் செயல்படத் தொடங்கி விட்டது. மற்ற எந்த அச்சுறுத்தலையும் விட பிரிவினைவாதமே பயங்கரமானது என்றும் இப்பிரிவினை வாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அதிகார வெறியில் ஆணையிடுகின்றனர் ஆட்சியாளர்கள். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசங்களின் மீது இந்தியாவின் கோர தாண்டவத்தை நாளும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த நிலைமைதான் தமிழகத்திலும் தமிழீழ ஆதரவாளர்களையும் தமிழக விடுதலைச் சிந்தனையாளர்களையும், தன்னுடைய எடுபிடியான மாநில அரசின் துணை கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது. இனிவரும் காலங்களில் இவ் ஒடுக்க முறைகள் அதிகரிக்கவே செய்யும். இந்தியாவுடனான அமெரிக்காவின் நெருக்கம், உலகமயமாக்கலின் நடவடிக்கை என அனைத்தும் தேசிய விடுதலைக்கு எதிரானவைதான்.
எனவே எதிரிகள் நம்மை எதிர்த்து ஒன்று திரளும்போது நாம் மட்டும் ஒற்றுமையை பேணாமல் இருப்பது சிறந்ததல்ல. நம்முடைய இன்றைய தேவை என்பது இந்தியாவுக்கு எதிரானப் போராட்டத்தில் நாம் கரம் கோர்க்க வேண்டியதுவே உடனடி தேவையாகும். தமிழ்நாடு விடுதலை என்ற ஒற்றை முழக்கத்தில் அனைத்து தமிழ்த் தேசிய இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். ஒன்று சேருவோம்! ஒன்றுபடுவோம்! தமிழ்நாடு விடுதலை பெறுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக