சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.
கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.
இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி AMK என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.
1975-ல் அரசு இவரை அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து தப்ப முயன்று பிடிபட்டார். பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.
1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.
மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர். திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.
இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.
1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.
டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.
தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” எனும் பெயரில் இயக்கம் கட்டி இயங்கத் தொடங்கினார். சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.
தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.
பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.
அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இவரது இறப்பிற்குப் பின் தோழர் பொழிலன் உள்ளிட்ட சில தோழர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட்டனர்.
இதனால் கொல்லிமலை கூட்டத்தில் பிரிந்து சென்ற தோழர் சுந்தரம் ”தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி” எனும் பெயரில் செயல்பட ஆரம்பித்தார்.
தமிழக மக்கள் விடுதலைக்கான போரில் தனது உயிரை ஈந்த தமிழரசன் உள்ளிட்ட தோழர்களின் முகாமைக் குறிக்கோளான சாதியொழிப்பை நெஞ்சிலேந்திப் போராட அனைவரும் சூளுரைப்போம்!
தோழர்களே
சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!
சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக