புதன், 12 ஜனவரி, 2011

கவிஞர் தீபச்செல்வன் – நேர்காணல்

குழந்தைகளின் புன்னகைகளை நிலங்களின் அடியில் புதைத்து வைத்துவிட்டு நாம் நசுங்கிய எதிர்காலத்தோடு அமர்ந்திருக்கிறோம்”  – தீபச்செல்வன்
கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டு வருகிறார். ஈழத்தின் போர்ச்சூழலில் வாழ்ந்து கொண்டு அந்த வாழ்வை இந்த மண்ணோடு மண்ணாக அநுபவித்து பதிவாக்கி வருபவர். தீபம் இணைய இதழின் மூலம் தன்னை தமிழ்ச்சூழலில் அடையாளப்படுத்தி வருபவர். இவரின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவர உள்ளது.
தற்கால போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் மக்களின் அவலமும் அழிவும் நிறைந்த வாழ்வை, இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நிகழ்த்தி வரும் மிகப் பெரும் இனஅழிப்புக் கொடூரத்தை, தமிழ் மக்களின் அடையாள அழிப்பை, திறந்த வெளிச்சிறைச்சாலையில் வாழும் யாழ் மக்களின் அச்சமும் அறியப்படாத கொலைகளும் பலவீனமும் நிறைந்த வாழ்வை, இரத்தமும் சதையுமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறார்.
‘கிளிநொச்சி’, ‘யாழ் நகரம்’,’முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி’, ‘கிணற்றினுள் இறங்கிய கிராமம்’, ‘குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள்’, ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’, ஆகிய கவிதைகள் முக்கியமானவை. ஈழத்தின் பத்திரிகை சஞ்சிகைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. தமிழின் அதிகமான இணைய சஞ்சிகைகளில் எழுதி வருபவர்.
இவரின் தீபம் இணைய இதழில் ‘கீறல் பட்ட முகங்கள்’, ‘பல்லி அறை’, ஆகிய தளங்களில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கவிதைகள் தவிர, விமர்சனம், பத்தி எழுத்து, ஓவியம், என்பவற்றிலும் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். அவருடன் மின்னஞ்சல் ஊடாக ஒர் உரையாடலை நிகழ்த்தினோம்.
01.
சித்திராங்கன்:
எங்கள் அடையாளம் இருப்பு தொடர்ந்தும் களவாடப்படுவதாக நான் உணர்கிறேன். இதன் பின்னணியில் உங்களின் சில கவிதைகள் அமைந்துள்ளன. எங்கள் கிராமங்கள் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்வும்  எங்கள் அடையாளமும் அழிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து யாது ?
தீபச்செல்வன்:
எங்களுடையவை எல்லாமே களவாடப்பட்டு வருகின்றன. நாம் அறியாதபடி களவாடப்படுகின்றன. அடையாளம் இருப்பு என்பதற்கப்பால் மனிதர்களும் மனங்களும் களவாடப்படுகின்றன. அதிகாரம் எல்லாவற்றையும் நன்கு திட்டமிட்டு பெரியளவில் களவாடிக் கொண்டிருக்கிறது. இனத்தின் இருப்பு கனவு எல்லாவற்றையும் சிதைத்து விடுகிற பசியில் இந்தக் களவு நடைபெறுகிறது. எல்லோரும் அறிந்திருக்க எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் களவாடுகிறார்கள்.
அதனடியில் எல்லாமே அழிகின்றன. உண்மையில் கிராமம் ஒன்று அழிகிறபோது அங்கான நமதாயிருந்த வாழ்வும் விட்டுவந்த சுவடுகளும் அழிக்கப்படுகின்றன. நாம் கிராமங்களை இழக்கிற வலியில் வாழ்வும் அடையாளமும் அவசரமாக பிடுங்கியியெடுக்கப்படுகிறது. உலகத்திடம் ஆயுதங்களிடம் அதிகாரத்திடம் நம்முடையவை எல்லாமே இரையாகின்றன. அதனை அல்லது அதன் பின்னணிகளை எழுதுகிற பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. மிகவும் ஆத்திரமாக எழுதவேண்டியிருக்கிறது.
02.
சித்திராங்கன்:
இலங்கை அரசு வன்னிநிலப்பரப்பில் நிகழ்த்தி வரும் யுத்தத்தினால் மக்கள் எவ்வாறான அவலங்களை எதிர்கொள்கிறார்கள்.?
தீபச்செல்வன்:
வன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என்று மக்கள் எல்லோருமே அரச நோக்கங்களால் பலிவாங்கப்படுகிறார்கள். தமிழ் மக்களின் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிற திட்டத்துடன் விடாப்பிடியான போரை நடத்துகிறது.
வன்னியில் போர் தருகிற அவலங்களுக்கு முகம் கொடுத்தபடி அலைந்தபடி தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாழிடங்களை ஒடுக்கி அவகாசங்களாலும் தடைகளாலும் அரசு மிரட்டிக் கொண்டிருக்கிறது. பெரியளவில் சூழுகிற இந்த அவலங்களிலிருந்து வாழ்வுக்கான போராட்டத்தை மிகவும் துணிவுடன் நம்பிக்கையுடன் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நிலங்களை அபகரித்துக்கொண்டு ஆயுதங்களால் எச்சரித்துக்கொண்டு அடிமைப்படுத்த முனைகிறது அரசு. வன்னியின் போர்த்துயரம் உலகம் எங்கிலும் வாழுகிற மனிதர்களை கடுமையாக வதைக்கிறது. ஈழத்துக்கு பொறுக்க முடியாத சோகத்தை வலியை வரலாற்று துயரத்தை வன்னியில் பல முனைகளில் பல கோணங்களில் அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப்போர் ஒட்டு மொத்த ஈழமக்களது கனவுகளையும் குறிவைத்து அதனை அழிக்க நடக்கிறது என்பதிலிருந்து இது வன்னியை கடந்து எல்லாரையும் துயர் படுத்துகிற ஒரு பெரிய அவலமாயிருக்கிறது.
03.
சித்திராங்கன்:
உங்களின் ‘பல்லி அறை’ தளத்திலுள்ள கவிதைகள் தொடர்பாக ‘மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கடிகளை வடித்திருக்கிறேன்’ என்றும் ‘அறைக்கு உள்ளும் வெளியும் காணும் மனிதர்கள் பற்றியவை’ என்றும் கூறியிருக்கிறீர்கள். இக்கவிதைகளில் அகம் பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். அக்கவிதைகள் பற்றிக் கூறுங்கள் ?
தீபச்செல்வன்:
உண்மைதான் மனிதர்களை விலத்திச் செல்லுகிறபோதிருக்கும் புரிதல்களில் மனம் துடித்துக்கொண்டேயிருக்கிறது. எத்தனை மனிதர்கள் அவர்களுக்கு எத்தனை முகங்கள் சிலவேளை வந்து விடுகிற நமது தவறான புரிதல்கள் முரண்பாடுகள் எல்லாமே மனதை அலைத்துக் கொண்டிருக்கிறது. அறைகளில் ஏற்படுகிற மனிதர்களுடனான முரண்பாடுகள் வெளியில் அலைய வைக்கின்றன. வெளியில் எச்சரிக்கின்ற மனிதர்களால் அறைகளில் பதுங்கி வாழுகிற நிர்பந்தம் இரண்டுக்கும் இடையிலாக சொற்களை தவிர எனக்கு எதுவும் ஆறுதலாய்படவில்லை.
போர்க்கவிதைகள் மட்டுமே எழுதுகிறேன் என்று நிறையப்பேர் கூறுகிறார்கள். போர் மனிதர்களை அலையவைக்கிறது. ஆனால் மனிதர்களின் புரிதல்களின் குழப்பங்களால் மனிதர்கள் அகத்தில் துடிக்கிறார்கள். அந்த குழப்பம் புரிதலின்மை பலிவாங்குகிற மனது மற்றவர் பற்றிய கருத்து இவற்றிலிருந்தே போர் உற்பத்தியாகிறது. நமக்கிடையில் எரிந்து கொண்டிருக்கிற இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று முயன்று கொண்டிருக்கிறேன். மனிதர்களாக நாம் வாழுகிறோமா? மனித குணங்கள் மிகவும் ஆபத்தை தருகின்றன. பக்கத்தில் இருப்பபவரை முதலில் புரிவது நேசிப்பதை சாத்தியப்படுத்த வேண்டும். பல்லியறையில் அதற்கான அலைச்சலை எழுத முற்படுகிறேன்.
04.
சித்திராங்கன்:
‘செலவு’ என்ற கவிதையும் முக்கியமானது. பலர் தாங்கள் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே. பல வேளைகளில் முகமூடிகளைப் போட்டு தங்களை மூடிவிடுகிறார்களே?
தீபச்செல்வன்:
அது வெளியில் சந்தித்த ஒரு சிறுவனை பற்றி எழுதியது. அவன் எனக்கு கூறிய செலவு விபரம் பற்றி இருக்கிறது. அவனின் வார்ததைகளில் வாழ்வின் பொறுப்பும் சமூக அனுபவமும் இருந்தன. எனினும் அவன் இன்னும் சற்று வளர அவனை உள்ளிளுக்கிற இந்த சமூகத்தின் போக்குகள் குறித்துத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அவன் பின்னர் பார்க்கிற கணக்குகள் நம்மைப்போலாகி விடுகின்றன. எவ்வளவுதான் அனுபவமும் துயரமும் இருந்தாலும் சிலவேளை பாதை பிழைத்து விடுகிறது. ஆனால் சிறுவர்களது அந்த அனுவபங்கள் குறிப்புகள் எமக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன. வாழ்வை உணர்த்துகின்றன.
05.
சித்திராங்கன்:
‘கிளிநொச்சி’  என்ற கவிதையில் ‘நானும் பிரகாசும் மெலிந்து விட்டோம்…..’ என்றவாறான மொழிக் கையாளுகை கவிதையாக அல்லாமல் கதையாகக்கூட விரியக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருக்கிறதே..?
தீபச்செல்வன்:
கிளிநொச்சியின் வாழ்வு அதன் பங்கு அது மீதான கவனம் எல்லாவற்றையும் பேசுதல் மிக முக்கியமானதாக இந்த நகரத்தில் வாழுகிறவன் என்ற அடிப்படையில் எனக்கு இருக்கிறது. சமாதானம் இதற்கு ஏற்படுத்திய கதிகளை அப்படியே எழுத வேண்டும் போலிருந்தது. 2006மற்றும் 2007களில் இருந்த சூழல் மிகவும் துன்பமானது. கிளிநொச்சி சமாதானத்திடமிருந்து போரிற்கு பழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பதுங்குகுழியிலிருந்து நிறைய நாளுக்கு பிறகு பிரகாஷ் என்ற நண்பனை கண்டு மீளவும் அதற்குள் அடங்க நேர்ந்த பிறகு எழுதியது. அது அவன் மீதான சொற்களாயிருக்க  கதையாக விரிவதுபோல உங்களுக்கு படுகிறது.
06.
சித்திராங்கன்:
‘ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது’ கவிதையில் ‘பதுங்குகுழிச் சனங்கள்’ என்ற புதிய சொற்சேர்க்கை வருகிறது. இது வாழ்வனுபவத்தின் வழியானதா? படைப்பனுபவத்தின் வழியானதா?
தீபச்செல்வன்:
எனக்கு நெருக்கமான கமராப்போராளி அன்பழகன் வீரமரணம் எய்தியபொழுது அதை எழுதியிருந்தேன். போராளிகள் சனங்களிடமிருந்துதானே உருவாகிறார்கள். அவர்கள் சனங்களாக களத்தில் முகம் கொடுக்கிறார்கள். அன்பழகனுக்கும் சனங்கள்மீது தீராத பற்றிருந்தது. சனங்கள் வாழுகிற சூழலால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். நமது சனங்கள் கடந்த முப்பது வருடங்களால் பதுங்குகுழிகளில்தானே வாழுகிறார்கள். அதற்குள் எமது  வாழ்வு வடிவமைக்கப்பட்டதாயிருக்கிறது அதற்குள் முடிகிறது திட்டமிடப்படுகிறது. எனவே பதுங்குகுழிச்சனங்களாக நாம் வாழ்து கொண்டே இருக்கிறோம். அதனால்தான் எமது அடையாளம் மிஞ்சியிருக்கிறது.
அந்த குழியிலிருந்து மீள்வதற்கான மனதுடன் போகிறவர்களாக அன்பழகன் போன்ற போராளிகளை கருதுகிறேன். நமது அடையாளத்திற்காக அவன் கமராவையும் துப்பாக்கியையும் எடுத்திருந்தான். அவற்றை அவர்கள் தூக்கியின் பின்னணியில் பதுங்கு குழிச்சனங்களின் வாழ்வுக்கனவு கண்ணீர் போன்றன இருக்கிறது எனவே அது வாழ்வனுபவத்திலிருந்து வந்திருக்கிறது.
07.
சித்திராங்கன்:
படைப்புக்களில் வட்டாரத்தன்மை, எம்மை எமது வாழ்வை, எமது அடையாளத்தை, பதிவு செய்வதாக அமைகின்றது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் உலகு நோக்கிய பொதுமைப்பட்ட படைப்புக்கள் என்று வருகின்றபோது ஓர் அளவுக்கு அப்பால் இவற்றை எடுத்துச் சென்ற படைப்புக்கள் மிகக் குறைவு. இந்த இடைவெளிகளை நாம் எப்படிக் கடக்கலாம்?
தீபச்செல்வன்:
இன்று பொதுமைப்பட்ட மொழியால் எழுதப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. வட்டாரத்தன்மையுடன் எழுதுவது பொதுமைக்கு உலகளவிலான கருத்தாடலுக்கு சிக்கலானது என்றில்லை. அங்கு குறித்த வாழ்வின் அடையாளத்தின் தனித்துவம் கொண்டு பேசப்படுகிறது. மொழிபெயர்பில் இது சிக்கலைத்தரலாம். அவற்றுக்கு மாற்றான சொற்கள் வேற்று மொழியில் இல்லாதிருக்கும். தமிழ்நாட்டில் எமது சில வழக்காற்று சொற்களை புரிவதில் சிக்கலிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு வழக்காறுகளை நாம் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறோம்.
எனினும் அங்கு அநேகமானவர்கள் பொதுமைப்பட்ட மொழியினை கையாளுகிறார்கள். நமக்கும் அப்படியொரு பாதிப்பு அல்லது எழுத்து பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வட்டாரம் சார்ந்த எழுத்துக்கள் பொதுமைப்பட்ட எழுத்துக்கள் என்பன சூழல் மனநிலை தேவை முதலியவற்றை பொறுத்து நம்மிடம் இயல்பாக வருகின்றன.
08.
சித்திராங்கன்:
‘நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்’ கவிதையில் காணாமற்போன பிள்ளைகளின் அன்னையர் துயர் சொல்லப்படுகிறது. இது ஆஜென்ரீனாவிலும் சரி, இலங்கையிலும் சரி, ஒரு பொதுமைக்குள் வந்து விடுகின்றன. இவ்வாறான படைப்புக்கள் தேசம் கடந்த பிரச்சனைகளாக விரிகின்றன. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
தீபச்செல்வன்:
அதிகாரங்கள் உலகில் எங்கும் தனக்குரிய வகையில்தான் இயங்குகிறது. அர்ஜன்ரீனாவில் இடம்பெற்ற அந்த செய்தியை வாசிக்கும்பொழுது எங்கள் நகரங்களில் கடத்தப்படுகிற சைக்கிள்கள் பற்றிய ஆதங்கம் ஏற்பட்டது. அங்கு தமது பிள்ளைகளை மீட்க அன்னையர்கள் கடதாசிச் சைக்கிளை வைத்து போராட்டம் நடத்தினாhர்கள். அந்த அன்னையர்களில் பலர் பிறகு காணாமல் போயிருந்தார்கள்.
இதே மாதிரி இங்கும் நிலமையிருக்கிறது. நம்மைப்போலவே அர்ஜன்ரீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் அதிகாரங்களினால் கொண்டு செல்லப்படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிற நமது நகரங்களிலும் கடதாசிச் சைக்கிள்களில் செல்கிறவர்கள் சாம்பலாகிப்போகிறார்கள். அந்த பயங்கரத்திலும் நான் வாழுகிறேன். எனது சைக்கிளும் நொருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் கருதுவதுபோல அதிகாரங்கள் உலகெங்கிலும் நம்மை விரட்டி வருகிறது என்பது பொதுமைப்பட்டதாயிருக்கிறது.
09.
சித்திராங்கன்:
இந்தப் போரின் வலியும் மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் உங்களின் அதிகமான கவிதைகளில் பதிவு பெற்றுள்ளன. ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை மீண்டும் மீண்டும் வித்தியாசமாக படைப்பாக்குவதில் உள்ள அனுபவ வெளிகள் பற்றிக் கூறுங்கள் ?
தீபச்செல்வன்:
போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. போர் பற்றி எழுதுவதில் தொடர்ந்து எழுவது எனக்கு சிக்கலாக படவில்லை. ஆனால் நிறையப்பேர் இப்படித்தான் கேட்கிறார்கள். அதிலும் முப்பது வருடமாக தொடருகிற போர் பற்றி எழுதியிருக்கிறார்கள் எனவே அதிலிருந்து வித்தியாசமாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கடந்த தசாப்தத்தில் அதாவது ஈழத்தின் மூன்றாவது கட்ட போரின் பொழுது கருணாகரன், நிலாந்தன் போன்றவர்கள் அதனை எழுதியவிதம் என்னை பாதித்தது.
ஆனால் தற்போதைய போர் காலம் சூழல் என்பவற்றிற்கு ஏற்ப குரூரமடைந்திருக்கிறது. எங்கள் இனத்தை அழித்துவிட எங்கள் நகரங்களை கைப்பற்றிவிட அது வகுத்திருக்கிற வியூகங்கள் மிகவும் வித்தியாசமாயிருக்கிறது. முன்னைய போர்களிடமிருந்து அது வேறு வியூகங்களை வகுத்திருக்கிறது. பல முனைகளில் ஒரு நகரத்தை முற்றுகையிடுகிற படைகள் போலவே அவை இருக்கின்றன. இந்தப்போர் மக்களையும் உணர்வுகளையும் நுட்பமாக அழித்துக்கொள்ள முயலுகிறது. அதன் தீவிரத்தை மக்கள் நன்கு உணருகிறார்கள். போரின் கொடுமைகள் என்னை பல முனைகளில் பாதிக்கிறது. அதை எழுதும்போது கடந்தகாலங்களிலிருந்து வேறுபட்டெழுத முடிகிறது.
10.
சித்திராங்கன்:
தற்கால யாழ்ப்பாணத்து நெருக்கடி மிகுந்த வாழ்வைப் பதிவு செய்தவற்றுள் முன்னர் ‘முரண்வெளி’ யில் வெளிவந்த (மூன்றாவது மனிதனிலும் வந்தது) ‘யாழ்ப்பாண நாட்குறிப்பு’ எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது கவிதையோ கதையோ அல்லாத வடிவம். இப்போ உங்களின் கவிதைகளும் முக்கியமானவை. இவற்றை விட உங்கள் வாசிப்பில் வேறு படைப்புக்கள் ஏதாவது அகப்பட்டதா?
தீபச்செல்வன்:
மிகவும் நெருக்கடியான யாழ்நகரத்தின் காலத்தில் ஹரிகரசர்மாவின் யாழ்ப்பாண நாட்குறிப்பு எழுதப்பட்டது. அந்த நெருக்கடி இன்றும் தொடருகிறது. மிக முக்கியமானதொரு பதிவு என்னையும் பாதித்திருந்தது. 2006இல் போர் மீள தொடங்கியபொழுது எழுத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நிறைப்பேர் எழுதுவதை கைவிட்டார்கள். இது ஈழம் எங்கும் நிகழத்தொடங்கின. ஆனால் யாழ்ப்பாணத்தின் மரணவீதிகளை பின் தொடருகிற அச்சுறுத்தல்களை எழுதியவர்களில் சிலரே குறிப்பிடக் கூடியவர்கள். சித்தாந்தன், ஹரிகரசர்மா, துவாரகன், த.அஜந்தகுமார், வினோதரன், த.ஜெயசீலன் போன்றவர்கள் உணர்வுபூர்வமாக எழுதினார்கள்.
இதே நிலமை வன்னியிலும் காணப்பட்டது. அங்கு எழுத்துச் சூழல் சற்று பாதிப்புற்றுள்ளது. வன்னியின் போர் மற்றும் அரசியற் சூழல் குறித்தான எழுத்துகள் பெரியளவில் எழுதப்படவில்லை. கருணாகரன், பொன்காந்தன், த.அகிலன்  போன்றவர்களுடன் போராளிகளான ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, கு.வீரா, செந்தோழன், த.ஜெயசீலன் போன்றவர்கள் எழுதினார்கள்.
கிழக்கிலும் இந்த நிலமை ஏற்பட்டது. அங்கு முன்பிருந்த எழுத்துச் சூழல் சுருங்கத்தொடங்கியது. அலறி, மலர்ச்செல்வன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
11.
சித்திராங்கன்:
இந்த நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் ஓவியம், புகைப்படம், குறும்படம் ஆகியன பற்றி கூறுவீர்களா ?
தீபச்செல்வன்:
படைப்புத்துறை மிகவும் பாதிப்புற்றிருக்கிறது. எழுத்து சுருங்கியிருந்தாலும் ஓரளவு நெருக்கடிகளை பேச முடிகிறது. கருத்தாடல்களும் இடம்பெறுகிறது. ஆனால் புகைப்படம், குறும்படம் முதலிய துறைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன. ஓவியத்துறையின் வளர்ச்சி திருப்தி தருகிறது. சனாதனன், நிலாந்தன், ஆசை.ராசையா, சஞ்ஜித், கோ.கைலாசநாதன், க.செல்வன், விஜிதன் ரமேஸ் போராளி நவீனன் போன்றவர்களின் ஓவியங்கள் சமகாலத்தின் நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. வன்னியில் நெருக்கடிகளை பிரதிபலிக்கிற புகைப்படங்கள் கலைஞர்களாலும் போராளிக்கலைஞர்களாலும் பிடிக்கப்படுகின்றன. இன்று உலகளவில் வன்னிப்புகைப்படங்கள் கவனத்தை ஏற்படுத்துகின்றன.
ஈழத்தின் குறும்படங்கள் நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. ஈழத்துக்குறிய தனித்துவமான இயல்புகளுடன் அவை வருகின்றன. தற்போதைய ஈழத்து குறும்படங்களில் முல்லை.யேசுதாசனது படங்கள் முக்கியமானவை. துடுப்பு, ஒரு நாட்க் குறிப்பு, கனவு போன்ற அவரது படங்கள் தனித்துவமான இயல்புடையது. போராளிகளான நிமலா, திலகன், நவநீதன் போன்றவர்களின் படங்களும் சமகால நெருக்கடிகளை பேசுகின்றன. போராளி நிமலாவின் வேலி என்ற பெண்ணியம் சம்பந்தமான குறும்படம் என்னை மிகவும் பாதித்திருந்தது.
ரதிதரனின் வெட்டை, கால்கள் முதலியனவும் மிக அண்மையில் வந்த குறும்படங்கள். அவையும் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால் மீளவும் போர் காரணமாக இந்தத்துறை மிகவும் பாதிப்புற்றுள்ளது.
12.
சித்திராங்கன்:
கவிதைகளில் பன்முகத்தன்மையை எல்லாக் கட்டங்களிலும் உங்களால் பேண முடிகிறதா?
தீபச்செல்வன்:
இப்படித்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. எழுதுகிற சூழல் மனம் நெருக்கடிப்படுகிற நேரம் இடம் என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. என்னால் எழுத முடிகிற மாதிரி நான் எழுதுகிறேன். வலிந்து கொள்ளவதில்லை. மொழியை சரியாக கையாள வேண்டும் என்ற கவனம் இருக்கிறது. கூடுதலாக போர் பற்றி தொடர்ந்து எழுகிறபோது சொற்கள் போர் மூள்கிற இடங்கள் பற்றி அவதானித்து எழுதுகிறேன். எந்நேரமும் அது அச்சுறுத்திக் கொண்டிருக்க அதனிலிருந்து பெறப்படுகிற அனுபவங்களை அப்படியே எழுதிகொண்டிருக்கிறேன்.
13.
சித்திராங்கன்:
பின்நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற ஏற்றதொரு கோட்பாடாக உணர்கிறேன். அல்லது குறியீடுஇ மற்றும் சர்ரியலிச உத்திகள் பயன்படும் என்று நினைக்கிறேன். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
தீபச்செல்வன்:
பின்நவீனத்துவ எழுத்துக்களை வாசிக்கிற பொழுது அதன் தாக்கம் நமது எழுத்தில் நுழைந்து விட்டது. மனிதர்கள் கருத்துக்களால் தேடப்படுகிற அடக்குமுறைச் சூழலில் பின்நவீனத்துவ எழுத்து மெல்லிய உரையாடலுக்கு இடம் தருகிறது. அதைப்போலகுறீட்டுப் பாங்குகளும் எழுதும்போது வருகின்றன. சாரியலிச உத்திகளும் வருவதை சுட்டிக் காட்டப்படுவதை உணருகிறேன்.
சேலைக்கிளி கூறியதுபோல கோட்பாடுகளுக்காக நாம் கவிதைகளை எழுதுவதில்லை. எழுதுகிற கவிதைகளில் வாழ்வின் கோட்பாடுகளும் சூழ்நிலைகளும் வந்து விடுகின்றன. வாழ்வு பதுங்குவது போல பின் நவீனத்து எழுத்து புழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாமே குறியீடுகளாகிவிட்டன. வாழ்வை தீவிரமாக சித்திரிக்குமளவில் எழுத்து பெருத்து நிற்கிறது.
14.
சித்திராங்கன்:
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஈழத்துச் சஞ்சிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?
தீபச்செல்வன்:
ஏற்கனவே வெளிவந்த சில சஞ்சிகைகள் இன்னும் தம்மை எவ்விதத்திலும் வளர்க்காத விதத்தில் வருவது சங்கடமாயிருக்கிறது. சில சஞ்சிகைகள் தனியாள் அதிகாரத்திள் வருகிறது. அரசினது அச்சுறுத்தல் தணிக்கை என்பனவற்றால் சிலது இடைவெளிகளுடன் வருகின்றன. எனினும் மறுகா, கலைமுகம், வெளிச்சம், பெருவெளி, தாயகம் போன்றவை தொடர்ந்து வருகின்றன. மூன்றாவது மனிதன், சரிநிகர், தெரிதல் போன்றவை நின்று போனது எழுத்தை பாதிக்கிறது. மல்லிகை, ஞானம் என்பவை வளர்ச்சியற்று தமது தனியாள் கொள்கைகளுள் முடங்கியிருக்கின்றன. பெருவெளி போன்றவை முஸ்லீம் தமிழ் எழுத்தை உரையாடல்களை மேற்கொள்ளுகிறது. அனுராதபுரம் வஸீம்அக்கரம் தொடங்கியிருக்கும் படிகள் இதழ் நேர்தியுடன் வருகிறது.
நிறையவற்றில் எழுதப்பட வேண்டிய விடயங்கள் இல்லாதிருக்க அவைகளில் இடைவெளிகள் இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் அவை மீது தொடருகின்றன. சஞ்சிகைச் சூழலும் சற்று பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
15.
சித்திராங்கன்:
இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. ஈழத்தை விடப் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் அவை நன்கு பேசப்படுகின்றன. இவ்வாறான சஞ்சிகைகளின் பங்களிப்புக் குறித்து தாங்கள் கருதுவது யாது ?
தீபச்செல்வன்:
இணையதள சஞ்சிகைள் வாசிப்புப்பரப்பை விரித்திருக்கிறது. உலகம் எங்கிலும் நமது வாசிப்பு மிக எளிதாக நடைபெறுகிறது. ஈழத்து எழுத்துக்களை பொறுத்தவரை புலம்பெயர் சூழலுக்கு உடனுக்குடன் கொண்டு செல்கிறது. இங்கு இணையத்தளங்கள் இணையதள சஞ்சிகைள் என்று எல்லாமே இதை இலகு படுத்துகிறது. தனியாள் தளங்களின் பிரவேசம் முதலியனவும் கருத்தாடல்களை விரிக்கிறது.
ஈழத்தை பொறுத்தவரை இணையதளத்தில் வாசிப்பது என்பது சற்று நெருக்கடியானது. ஆனால் உலக அளவில், புலம்பெயர் சூழலுடன் எழுத்தை கொண்டு செல்ல உதவுகிறது. அச்சுநிலைப்பட்ட சஞ்சிகைகளை வாசிக்கும் போது ஏற்படுகிற வசதி, வாசிப்பு இலகு இணைய சஞ்சிகைகளில் இல்லாதிருக்கின்றன.
16.
சித்திராங்கன்:
‘எப்போதாவது வரும் வாகனங்களை விலத்தி விட்டு நெல்மணிகளை கோழிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றன’ இவ்வாறான கட்புல அனுபவங்களை உங்கள் கவிதைகளில் பதிவு செய்யும்போதுஇ அல்லது பதிவு செய்தபின்னர் உங்கள் உணர்வுகள் எவ்வாறானவை?
தீபச்செல்வன்:
மனம் குழம்பாத சூழலில் ஒன்றிவிடத் துடிக்கிறது. நாங்கள் இயற்கையின் அசைவுகளை கண்டு எழுதுகிற சூழல் எங்கே இருக்கிறது. எங்கள் பேனாக்களும் கடதாசிகளும் இன்று கணனிகளும் இணையங்களும் குருதியை தவிர பயங்கரங்களை தவிர அச்ச மூட்டுகிற இரவைதவிர எதை எழுதுகின்றன. காலம் எம்மை இப்படித்தானே எழுதத் தூண்டுகின்றன.
கிளிநொச்சிக்கு பக்கத்திலிருக்கும் முறிப்புக்கிராமம் போரின்றி அச்சுறுத்தலின்றி இருந்த நாட்களில் இங்கு அடிக்கடி சைக்கிளில் சென்று வருவேன். மிகவும் ஆறுதலாயிருக்கும். அது போலான காட்சிகளுடன் அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில் போன்ற கிராமங்களும் இருந்தன. அந்த வனப்புகனை நாம் இழந்து விட்டோம். அந்த கிராமங்களில் அந்த காட்சிகளை காணுகிறபோது அதனுடன் வாழுகிறபோது அவற்றை எழுதுகிறபோது பெரு நிம்மதி கிடைத்திருந்தது.
17.
சித்திராங்கன்:
கலை இலக்கியத்தில் மட்டுமல்லாது எல்லாப்பக்கங்களிலும் ‘பொறுப்புணர்வு’ என்பது இல்லாது போய்விட்டதே?
தீபச்செல்வன்:
பொறுப்புணர்வற்ற தன்மை எங்கும் காணப்படுகிறது. அவரவர் தமது கடமைகளை சரியாக செய்தால் யாருக்கும் அசௌகரியங்கள் ஏற்படாது. இலக்கியத்திலும் பொறுப்பற்ற எழுத்துக்கள் படைப்புக்கள் இருக்கின்றன. பொறுப்பற்ற மனிதர்களை தினமும் சந்திக்கிறோம். பிரச்சினைகளும் குழப்பங்களால் அதனால் தோன்றுகிறது. சிலர் தமது கடமைகளை சரிர செய்கிறதை காணுகிறோம் அதனுடாய் கடப்பதற்கு எவ்வளவு இலகுவாயிருக்கிறது.
18.
சித்திராங்கன்:
‘இலங்கையில் ஒரு சிங்களத்தாய் துடித்தழுகிறாள். ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய் துடித்தழுகிறாள்’ என ‘போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்’ கவிதையில் எழுதியிருக்கிறீர்கள். இந்த அழுகைகள் ஏன் தொடர்கின்றன?
தீபச்செல்வன்:
போர் குழந்தைகளை பறியெடுக்கையில் தாய்மார் தானே அழ வேண்டியிருக்கிறது. அம்மாக்களைத்தான் யுத்தம் கடுமையாக வதைக்கிறது. மாதுமைகவிதையில் வருவதுபோல உலக துயரங்களை அம்மாக்கள் ஒற்றுமையாக சுமக்கின்றனர். ஈழத்தில் சிங்கள இனவாத அரசுகளின் போர் வெறியால் இரண்டு நாடுகளின் அம்மாக்களும் அழுகிறார்கள். இந்த அழுகைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இலங்கை ஈழம் என்ற இரண்டுநாடுகளிடையான போர் என்று கருதுகிறேன். இந்தப்போர் கிராமங்களை சிதைப்பதையும் உடல்களால் எறியப்பட்டிருப்பதையும் தந்துகொண்டிருக்கிறது.
அரசு ஈழத்தில் புகுந்து மண்மீதான பேராசை கொண்டு நிற்கிறது. அது அதற்காக போர் தொடுக்கிறது. ஆனால் நாம் வாழ்வுக்காக போராடுகிறோம். போராளிகளின் தாக்குதல்களின் பின்னால் நிம்மதியை தேடுகிற வாழ்வுக்காக ஏங்குகிற உணர்வு இருக்கிறது. சனங்களின் ஏக்கம் இருக்கிறது. வாழ்வுக்கான பெரும் கனவு இருக்கிறது. எங்களை அடிமையாக்கி எங்கள் வாழ்வை அழித்து வாழ்விடத்தை அழித்து மண்ணை அள்ளுகிற கனவுடன் இலங்கை அரசு இருக்கிறதால் இந்த அழுகை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
19.
சித்திராங்கன்:
இந்த யுத்தத்தின் தீவிரத்தை அறிந்தும் கூட எந்த ஒரு நாடும் பாராமுகமாக இருப்பதற்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்கக் கூடுமா?
தீபச்செல்வன்:
கை உயர்ந்த நாடுகள் அல்லது நாட்டு அரசுகள் எல்லாமே தங்களுடைய பொருளாதார நலன்களில் தான் கவனம் செலுத்துகின்றன. மனிதர்கள் அல்லது மனிதநேயம் குறித்து அவைகளுக்கு அக்கறை இல்லை. மக்களுக்கு தேவைப்படுகிற விடுதலை இல்லாமலிருக்க கொளுத்த அதிகார சிந்தனைதான் இருக்கிறது. அவைகள் தமது அரசியல் பொருளாதார நலன்களை விட்டு ஈழத்தமிழர் விடயத்தியில் உன்மையான அகக்றையுடன் செயல்பட தயாரில்லை. அவர்கள் இந்த விடயத்தில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல எங்களுக்கு எதிரான செயல்களில் இலங்கையரசுடன் பின்னிருப்பதுதான் மேலும் துயரத்தை தருகிறது.
இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தலையிட்டு வாழ்வுரிமையை பெற்றுத் தரும் என்று தமிழ் மக்கள் இன்னும் நம்பிக்கொண்ருக்கிறார்கள். ஆனால் எந்த மாற்றமுமற்று அதே கதியில் இந்தியா இலங்கையுடன் கை சேர்த்தபடியிருக்கிறது.
இந்தியா முதல் அமெரிக்க, யப்பான் என்று எல்லா நாடுகளுமே தமிழர்களுக்கு எதிராக இப்படி செயல்படுகின்றன. இந்த நாடுகளின் பயங்கர ஆயுதங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பொருளாதார கணக்குகள் எம்மிடம் தீர்க்கப்படுகின்றன. எனவே அந்த நாடுகளிடம் நாம் என்ன ஆதரவை எதிர்பார்க முடியும்? அவர்கள் எமக்காக என்ன நலனை செய்ய முன்வருவார்கள்? அவர்களது வாழ்வும் கணக்கும் ஈழத்தில் நடக்கிற போரிலேயே தங்கியிருக்கிறது. பலிகொள்ளப்படுகிற எங்களில்தான் அது அபிவிருத்தி செய்யப்படுகிறது. ஈழத்தை அடிமைகொள்ள அலைகிற இலங்கை அரசைப்போல உலகத்தையே இந்த நாடுகள் அடிமை கொள்ள அலைகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக