‘இந்தியத் தேசியம்' என்ற குருட்டுப் பார்வையும், இந்தியப் புரட்சி என்கின்ற வரட்டுத் தத்துவமும் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்தியாவை அல்லது இந்தியப் பார்ப்பனியக் கூட்டமைப்பு எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின்ற முனைப்பு பிற்போக்கு, முற்போக்கு என இருவேறு முகாம்களிலிருந்து வந்தது. ஒவ்வொரு முகாம்களும் தங்களுக்கானக் கோட்பாட்டு முழக்கங்களை முன்னிறுத்திக் கொண்டனர். இந்தியா ஒரு தேசம் இல்லை என்பது இரு தரப்புமே அறிந்திருந்தனர். இருந்தபோதிலும் இந்தியாவை ஒரே தேசமாக்க வேண்டுமென்ற முயற்சியை தீவிரமாக்கினார்கள்.
பிற்போக்கு முகாம்களைச் சேர்ந்தவர்களின் நலனே முகாமையானது. பார்ப்பன பனியா மார்வாடி சேட்டுகளின் விரிந்த சந்தை நலனின் அடிப்படையைக் கொண்டிருந்தது. அடுத்து ஆரியப் பார்ப்பன சாதிய சனாதன இந்து மதவெறி அடிப்படை வாதிகளின் நோக்கம் இணைந்துக் கொண்டது. மேலும், நேரு, காந்தி, பட்டேல் போன்றவர்களின் ஆளுமையின் கீழிருந்த காங்கிரசும், இந்து மதவாதிகளின் ஆளுமை யான கீழிலிருந்தபாரதிய சனதாவும் இணைந்து பிற்போக்கு சாதிய சுரண்டல் வாதிகளின் நலன்களை பாதுகாக்க இந்தியத் தேசியத்தை தேடினார்கள். இந்தியும், இந்து மதமும், இராமனும், பிள்ளையாரும், இராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவை ஒட்ட வைக்க இவர்களுக்குப் பயன்பட்டன.
ஒரு வட்டார மொழியான இந்தியையும், சிறு பான்மை பார்ப்பனர்களின்கடவுள்களையும், பண் பாட்டுக் கலாச்சாரத்தையும், வாழ்வியல் கூறுகளை யும், இந்திய மொழியாக, இந்தியப் பண்பாடாக, இந்தியக் கலாச்சாரமாகட்டும் இப்பிற்போக்கர்கள். இந்தியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களின் தேசியக் கூறுகளை முடமாக்கி விட்டார்கள். மொழிப் பற்றையும், இனப் பற்றையும், தேசிய விடுதலைப் போராட்டங்களையும், தீவிர வாதம், பயங்கரவாதம் என சித்தரித்தனர். குறுகிய மனநிலையுடைய மலிவான பிரச்சாரத்திற்கு இவர்கள் இட்டுக் கொண்டப் பெயர் இந்திய ஒற்றுமை.
அடுத்து எதிர்முனையில் இருக்கும் முற்போக்கர் களின் நிலைப்பாடு. அதாவது மார்க்சிய லெனினிய மாவோவியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற திரிபு வாதிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (இ.க.க.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), (இ.க.க.(மா), மற்றும் புரட்சி வழியை முன்னிறுத்துகின்ற மார்க்சிய லெனினிய மாவோவிய அமைப்புகளும் இந்தியாவை ஒரு தேசமாக உயர்த்திப் பிடிக்கின்றனர். இந்து மதத்தைத் தவிர பிற்போக்கர்கள் வலியுறுத்தும் அனைத்து இந்திய அடையாளத்தையும் ஏற்கின்றனர். "இந்தியன்' இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, பழம் பெருமை என இல்லாத ஒன்றை உண்மைக்குப் புறம்பாக கட்டியமைக்கத் துடிக்கிறார்கள்.
வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் அறிஞர் களும் இந்தியா குறித்து தெரிவிக்கும் கருத்து யாதெனில், ஆங்கிலேயராட்சிக்கு முன்பு அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒரே நாடாக இருந்ததில்லை. நகராட்சி முறை அல்லது உலக சட்ட விதிகளின்படி பார்த்தாலும் இந்தியா அரசியல் அடிப் படையில் முழுமையாக இருக்கவில்லை. இதுதான் கடந்த நூற்றாண்டு கால வரலாறு. மேலும் இதன் நீண்ட வரலாறு என்று சொல்லப்படும் அரசுகளான மௌரியர்களும், குப்தர்களும், மொகலாயர்களும் ஒரு பரந்த அரசை அமைத்திருந்தாலும் கூட அதில் இப்போதுள்ள இந்தியா முழுமையும் உள்ளடக்கப்பட வில்லை. மாறும் எல்லைகளைக் கொண்டே இந்தப் பேரரசுகள், நீண்ட காலம் ஆட்சி செய்தாலும் அந்த வம்சஆட்சி முடிந்தவுடன் அவர்களின் ஆட்சியும், எல்லையும் மறைந்துவிட்டன. மேலும் அப்பேரரசுகள் பெரும்பகுதிகள் வெறும் கப்பத் தொகையை மட்டும் செலுத்தி விட்டு சுதந்திரமாக இருந்தன. ஒருபோதும் ஒரே நாடாக இணைக்கப்படவில்லை.
ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு கீழ் இந்தியா வந்த பிறகுதான் பெரும் பகுதி பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சிப் பகுதிக்குள் இருந்தது. இந்த எல்லையும் மாறுபட்டதே! மேலும் 1947 வரை 562 சுதந்திரமான சுயாட்சியான பகுதிகளும் இருந்தன. இவைகளில் பெரும்பகுதி தங்களை தனி தன்னாட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று வட்டமேசை மாநாட்டில் கோரிக்கை வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
""இந்தியாவின் அரசியல் ஒற்றுமை ஆங்கிலேயர் களின் கத்தி முனையில் புகுத்தப்பட்டது'' என்பதுதான் கார்ல் மார்க்சின் கூற்று. ஆனால் இந்திய மார்க்சியர்கள் என்ன சொல்கிறார்கள், இந்தியா 2000 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்தது என்ற பொய்யை எந்தவிதத் தயக்கமுமின்றி தங்களின் அறிக்கையில் பதிவு செய்கின்றனர்.
இவர்கள் பாட்டாளி வர்க்கம், சாதி, மதம், மொழி இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று முழங்கு கிறார்கள். சாதி, மதம் என்ற பிற்போக்கு அமைப்பு களோடு மொழியையும், இனத்தையும் இணைத்துக் கொண்டப் பெருமை இவர்களைத்தான் சாறும். பாட்டாளி வகுப்புக்குள் பதுங்கிக் கொண்ட பார்ப் பனியச் சிந்தனையின் வெளிப் பாடுதான் இவையெல்லாம். மார்க்சிய இயங்கியல்படி தேசிய சனநாயக அலகுக்குள் இருக்கும் அடிப்படை கூறுகள் தான் மொழியும் இனமும். பாட்டாளி வர்க்கத்தின் கடமை மொழி இனங்களைக் கடந்து தேசங்களை இணைப்பது மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கம் வர்க்கங்களற்ற சமூகத் தைப் படைப்பதும், அரசு நிறுவனத்தையும், குடும்ப அமைப்பையும், ஏன் தேசங்களை கூட இறுதியில் தகர்ந்து போகும். இதற்காகவே பாட்டாளி வர்க்கம் சேவை செய்யும். இவைஒரே நாளில், ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் ஆட்சி மாற்றத்தில் நடப்பவை அல்ல. இவைகள் ஒரு நீண்ட இயக்கப் போக்குடன் கூடிய படிநிலை வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டது. அப்போது மொழிக்கும் இனத்திற்கும் முக்கியத்துவம் இருக்கப் போவதில்லை. மார்க்சியம் என்பது மந்திரமல்ல, ச்சூ.. மந்திரகாளி... என்றால் மாங்காய் காய்க்காது. அது பொருள் முதல்வாத இயக்கவியலைக் கொண்டது. எனவேதான் மார்க்சும், ஏங்கல்சும் போலந்து, அயர்லாந்து போன்ற தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனர்.
""ஒரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது இன்னொரு தேசிய இனத்திற்கு எவ்வளவு கேடான செயல்.'' அயர்லாந்து இங்கிலாந்தின் தலையிலிருந்து விடுபடும் வரை ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அயர்லாந்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தியதால் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப் பெற்றது. ஊட்டம் பெற்று விட்டது'' என்று லெனின் மார்க்சின் கருத்துகளை மேற்கோளுடன் விளக்கப்படுத்துகிறார்.
இப்படி மார்க்சும், ஏங்கல்சும் லெனினும் தேசிய இனச் சிக்கல் குறித்து தெளிவான முடிவுக்கு வந்தடைந்த நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. இந்திய ஒற்றுமையின் தீவிர பாதுகாவலராகவே இருக்கிறார்கள். நமது நாட்டில் பிரிவினை வாத சக்திகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பது பெரும்பாலான கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு.
மேலும் இந்திய ஒற்றுமையை நியாயப்படுத்த அடிப்படை இல்லாத வாதங்களை முன் வைக் கின்றனர்.
1. தேசிய இனப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத் திற்கு ஆதரவானவை.
2. இந்திய ஆளும் வகுப்புக்கு எதிராகப் போராட வேண்டுமானால் இந்திய அளவில் ஒருகட்சி வேண் டும்.
3. பாட்டாளி வர்க்கம் பரந்த அளவிலான உழைக்கும் மக்களை யும், பெரிய நாட்டை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருப்பவை.
முதலில் முன் வைக்கப்பட்ட வாதம் இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களுக்கு எந்த வகை யிலும் பொருந்தக் கூடியவையல்ல. மாறாக தேசிய இன விடுதலைப் போராட்டம், வல்லரசிய எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படை யாகக் கொண்டது என்பதுதான் உண்மை.
இரண்டாவது இந்திய ஆளும் வகுப்பை எதிர்க்க இந்திய அளவிலான கட்சி அல்லது இதன் இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பது வெறும் அகநிலை விருப்பத்தை தவிர வேறெந்தக் கோட்பாடு அடிப்படையும் இதற்கில்லை.
மூன்றாவதாக கூறப்பட்டவை பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையைக் கொண்டவைதான் என்றாலும் அதன் செயல் வடிவம் விரிவானது. இதுகுறித்து லெனின் கருத்து:
""உழைக்கும் மக்களின் நலனுக்காக பாட்டாளி வர்க்க கட்சி மிகப் பெரிய நாட்டை உருவாக்கவே முயல்கிறது. தேசங்களை மிக நெருக்கமாகக் கொணர வும் அவற்றை இணையச் செய்யவும் முயல்கிறது. ஆனால் தனது இந்த நோக்கத்தை வன்முறை மூலமின்றி, அனைத்து தேசங்களின் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதரத்துவ ஒற்றுமை உணர்வின் மூலம்தான் நடைபெறும்'' என்று கூறுகிறார். மேலும் இவை எப்போது சாத்தியம் என்பதையும் விளக்குகிறார்.
""பாட்டாளி வர்க்கக் கட்சியின் உடனடி வேலை பிரிந்து செல்வதற்கான முழுமையான சுதந்திரத்தை உணர்ந்து அறிவித்தலே ஆகும். இப்பணி முடிந்தப் பிறகுதான் தேசங்களுக்கும் மக்களுக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்றொ டொன்று நெருங்கவும் அதைத் தொடர்ந்து இணைய வும் அல்லது ஒன்றுபடவுமான நிலையை அடைய முடியும். முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம் பரந்துபட்ட ஸ்தல மற்றும் தேசிய சுயாட்சி, தேசிய சிறுபான்மையினரின் விரிவான உத்தரவாத மளிக்கப் பட்ட உரிமைகள் போன்றவைகளே புரட்சி கரப் பாட்டாளி வர்க்கத்தின் திட்டங்களாகும்'' என்கிறார்.
இரசியாவில் உள்ள தேசிய இனச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். அங்குள்ள ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசிய இனச் சிக்கலிலிருந்து பாட்டாளி வகுப்பு நிலைப் பாட்டை விளக்குகிறார்.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் நிலை வேறு வகைப்பட்டவை. இங்கே ஒடுக்கும் தேசிய இனம், ஒடுக்கப்படும் தேசிய இனம் என்று கிடையாது. (ஆனால் இந்திய விரிவாக்கத்தில் சுரண்டிக் கொழுக்கும் இந்தியப் பிற்போக்கு ஆளும் வகுப்பின் அதிகாரம் இருக்கிறது)
இந்தியா அல்லது இந்தியக் கூட்டமைப்பு என்பது பொய்யான மாயையான ஒரு அமைப்பு முறை இந்த அமைப்பு முறைக்கு அல்லது இதே அமைப்பு முறையைப் பாதுகாக்கின்ற ஆளும் வகுப்பிற்கு உண்மையான தேசிய அடையாளங்கள் அல்லது பொதுவான தேசிய அடையாளங்கள் ஏதுமில்லை. ஆக முறையான ஒரு தேச அலகுகள் அற்ற நிலையான எல்லைகளற்ற இந்த அமைப்பு முறைக்கு செயற்கையான தேச அடையாளத்தையும், இன, மொழி, பண்பாட்டு அடையாளத்தையும் பல் தேசிய இனங்கள் மீது திணித்து அதற்கு கட்டுப்பட வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் நெருக்கடி களை இந்தியப் பாராளுமன்ற, புரட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மண் குதிரைக்கு இவ்வளவு பெரிய கடிவாளத்தை இவர்களைத் தவிர வேறு யாரும் போட முடியாது.
சமூக எதார்த்தத்தையும், வாழ்க்கையின் உண்மை யையும் உறுதியான புறவய பகுத்தாய்வு அடிப்படை யில் சமூக வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவியலைத் தான் மார்க்சியம், லெனினியம் நமக்கு வழங்கி யிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தேசிய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் சனநாயகத்திற்காகவும், சோசலிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் போராட்ட வழியை நாம் பெற முடிகிறது.
இந்தியாவைப் பற்றிய சமூக எதார்த்தத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் இவர்கள் பகுப்பாய வில்லை என்பதும் தேசிய இனச் சிக்கல் கடந்த இங்குள்ள சாதிய சிக்கல் குறித்து தெளிவான நிலைப்பாடும் இவர்களுக்கு இல்லை. சிக்கலான இவர்களின் நிலைப்பாடு விவாதிக்கப்பட வேண்டியது.
இந்திய ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு இந்தியக் கட்டமைப்புத் தேவை குறித்தும், அது யாருடைய நலனைப் பாதுகாக்கும் என்பது குறித்தும் தெளிவான திட்டமிருக்கிறது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அப்படி எந்தத் திட்டத்தையும் தெளிவாக முன்வைத்ததாகத் தெரியவில்லை.
ஆனால் பாட்டாளி வகுப்பு நலன், உழைக்கும் மக்கள் ஒற்றுமை எனப் பொதுப்படக் கூறுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் அப்படி அதை சாதித்தது என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் உள்ள பாட்டாளி வகுப்பைத் திரட்டி எவ்வகையான ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது? தங்களின் வர்க்கப் போராட்டத்தை இந்தியா முழுமையும் கட்டமைக்கப்பட்டுள்ளதா? மேலும் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கான குறைந்தபட்ச இலக்குகளை அடைந்துள்ளனரா? அடிப்படை முரண்பாடுகளின் இலக்கு நோக்கிய முன்னேற்றம் என்ன? மற்றும் ஐக்கிய முன்னணி, தேசிய இன விடுதலை குறித்தான நடைமுறை வேலைத் திட்டங்கள் என்ன?
பாராளுமன்ற திரிபுவாத இ.க.க., (ம) கட்சிகளும், புரட்சிகர மார்க்சிய லெனினிய மாவோவிய அமைப்பு களும், சமூக அமைப்பை வரையறுப்பதிலும், புரட்சிப் பாதை எத்தகையது என்று தீர்மானிப்பதிலும்தான் வேறுபாடு உள்ளது. மற்ற அனைத்து வரையறுப்பிலும் சற்று ஏறக்குறைய ஒரே முடிவுக்குத்தான் வந்தடைந் திருக்கின்றனர். இந்தியா ஒரு தேசம் இல்லை என்று அரசியலாக வரையறை செய்திருந்தாலும், நடை முறையில் இந்தியத் தேசத்தை நிறுவ அனைவரும் ஒரே நோக்குடன் பின் இருந்தார்கள். மேலும் தேசிய இனம் சாதி பற்றிய நிலைப்பாட்டிலும் ஒற்றை நிலைப்பாடு உடையவர்களே! எனவே நாம் கேட்கும் பெரும்பாலான கேள்வி அனைவருக்கும் பொது வானவையே.
தேச ஒற்றுமைக்காக பாடுபடுவோம், பாட்டாளி வகுப்பு இன, மொழிகளைக் கடந்து ஒன்றுபடக் கூடியது என்று இவர்கள் சொல்லும் கருத்துக்கு எந்தளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பது கவனத்திற்குரியது. குறிப்பாக இ.க.க. (மா) இது கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தங்களின் அரசை நிறுவியுள்ளது. இதில் கேரளா மார்க்சிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன? தமிழகத்தில் உள்ள பாட்டாளி களின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது ஏன்? முல்லைப் பெரியாறு நீரை கடலில் கலப்போம் ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழக விவசாயிகளுக்குத் தரமாட்டோம் என்று கேரள முதல்வர் இ.க.க. (மா) தலைமைக்குழு உறுப்பினரு மான அச்சுதானந்தன் சொல்லுகிறார். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலர்கள் இந்திய ஒற்றுமையை காக்கும் தீர்க்கத்தரிசிகள் ஏன் இவர்களின் வரையறைப் பாடி இந்தியப பாட்டாளியான தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுப்பது இந்திய ஒற்றுமைக்கு எதிரான குறுங்குழுப் போக்கும், இனவெறி திமிறுமில் லையா?
அதேபோல் காவிரி, பாலாறுகளில் தண்ணீர் விட மறுக் கும் கருநாடக, ஆந்திர அரசுகளைக் கண்டித்து அங்குள்ள கம்யூனிஸ்டு கள் என்ன செய்தார்கள்? தங்களின் அரசுகளைக் கண்டித்துப் போராடி னார்களா? போராடினார்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தராதே என்று. தமிழகத்தில் உள்ள இவர்கள் தண்ணீர் வேண்டுமெனப் போராடுகிறார்கள்.ஒரு கொள்கை, ஒரு கொடி, ஒரு தலைமையின் கீழ் இந்தியப் பாட்டாளி வகுப்புக்காகப் பாடுபடும் முறை இதுதானா? தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு தேசங்களில் உள்ள உழைக்கும் மக்களின் ஒற்றுமை தாங்கும் நடவடிக்கையா? இந்த தேசங்களின் உழைக்கும் மக்களை, பாட்டாளிகளை பகையாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் எந்தப் பாட்டாளி களுக்காகப் புரட்சி செய்யப் போகிறார்கள்? லெனின் சொன்னார் அனைத்துத் தேசங்களின் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதரத்துவ ஒற்றுமையை இப்படித்தான் பாதுகாப்பதா? இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் வைத்திருக்கிறார்கள் அல்லது இவைகளெல்லாம் "பிராந்திய சிக்கல்கள்' அதாவது "பகுதி சிக்கல்கள்' என்று தட்டிக் கழிக் கின்றது மைய அமைப்பு. பாட்டாளி வகுப்புக் கிடையில் ஏற்படும் பகைமுரண்கள் இவர்களுக்குப் பகுதி சிக்கல்கள்.
இந்தியப் புரட்சிக்கான எல்லைகள் இந்தியா முழுமைக்குமானதாகவுமில்லை, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற தேசங்கள் தங்களை ஒருபோதும் ""இந்தியர்கள்'' என்று கருதுவதில்லை. மேலும் ""இந்தியா'' என்பதும் ""இந்தியன்'' என்பதும் பகைமையானதுதான். எனவே இங்கே இந்திய மாய்மாலங்கள் எடுபடாது. தங்களுக் கான தேசிய விடுதலைப் போராட்டத்தை தீரத்துடன் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தென் பகுதிகளில் தமிழகம், கருநாடகம், ஆந்திரம், மராட்டியம் போன்ற தேசங்களிலும் இந்திய ஏற்பு; சிந்தனைகளை விட இந்திய மறுப்பு; கருத்தாக் கங்களே வேரூன்றியுள்ளது. இதில் நீண்ட காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளால் வழி நடத்தப்பட்ட புரட்சிகரப் போராட்ட வரலாறு ஆந்திரத்திற்கு உண்டு என்றாலும், அப்போராட்டம் ஆந்திர தேசத்திற்குரிய சிறப்புக் கூறுகளின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீரஞ் செறிந்த தெலுங்கானாப் போராட்டம், இதற்குச் சான்று. தேசியக் கூறுகளோடு கிளர்ந்தெழும் போராட்டங்களுக்கு ""இந்தியப் புரட்சி'' என்று பெயர் வைத்துக் கொள்வதால் இந்தியாவில் புரட்சி வந்து விடாது.
ஆக வடகிழக்குத் தேசங்களிலும், தென்னிந்தியத் தேசங்களிலும் இந்தியப் புரட்சிக்கான வாய்ப் பேதுமில்லை. இங்கெல்லாம் மா.லெ.மாவோவிய அமைப்புகளும் சரி திரிபுவாதி களும் சரி, இப்பகுதிகளில் தங்களின் செல்வாக்கை செலுத்த முடியவில்லை. இப் போது மட்டுமல்ல, எப்போதுமே இவர்கள் தங்களை நிலைநிறுத்த முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். மீதமுள்ளப் பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில்தான் அதாவது நான்கைந்து மாநிலங்களில்தான் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கும் இந்திய முழக்கம் காரணமில்லை. அந்தந்தத் தேசம் சார்ந்த அடிப்படை முரண்பாடுகளை முன்னிறுத்தியே கட்சிகள் கட்டப்பட்டுள்ளன. இவர்களின் செயல் தளத்தைப் பொறுத்தவரை இந்திய எல்லை இப்போது சுருங்கி விட்டது. கடந்த 90 ஆண்டுகளில் இவர்களின் நிலை இதுதான். இப்போது இந்தியா என்பது எதுவரை? இதிலும் கொடுமை என்னவென்றால் ஒரு தேசத்திற்குள் மட்டும் அதுவும் ஐந்தாறு மாவட்டங் களில் மட்டுமே இந்தியாவுக்கான கட்சியைக் கட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் புரட்சியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் வேடிக்கை.
தேசிய இனங்கள் குறித்து ஒரு சிறு வேறுபாடு களைத் தவிர அனைத்து சுட்டிகளுமே ஒரே முடிவுக்குத்தான் வந்திருக்கின்றன.
1. இந்திய தேசியம் இன்னும் உருவாகவில்லை.
2. பல்வேறு தேசிய இனங்கள் பலாத்காரமாக ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்டது.
3. இந்தியா பல்தேசிய இனங்களின் சிறைக் கூடம்.
4. பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்பதுதான் இவர்களின் அவணங்கள் வழி உறுதி செய்யப்பட்ட கோட்பாட்டு முடிவுகள்.
முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத காரணத் தால் இந்தியத் தேசியம் உருவாகவில்லை என்பது இவர்களின் முடிவு. ஆனாலும் இந்தியத் தேசியத்தை உருவாக்குவது இவர்களின் உள்ளார்ந்தத் திட்டம். இதை வெளிப்படையாக எல்லாக் கட்சிகளும் அறிவிக்கவில்லை. என்றாலும் இதன் நடைமுறை இதை நோக்கியதே! அப்படி என்றால் துப்பாக்கி முனையில் ஒன்றிணைக்கப்பட்ட தேசிய இனத்தை என்ன செய்யப் போகிறார்கள்? தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்தியாவை ஏற்பதா? எதிர்ப்பதா? என்ன செய்யப் போகிறார்கள்? பிரிந்துப் போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை ஏற்கிறோம் அல்லது வழங்குகிறோம் என்றால், யார் யாரைத் தீர்மானிப்பது? யார் யாருக்கு உரிமை வழங்குவது? யார் யாருக்குத் தீர்ப்பெழுதுவது? இந்தியா ஒரு தேசியத்திற்கான தகுதிப் பெறாத நிலையில், இது ஒரு பெரும் தேசிய இனமாக இல்லாத சூழலில் எது அதிகார மையம். இதுவரை ஆங்கில வல்லாதிக்க நலனுக்காகவும், இப்போது இந்திய பார்ப்பனியத் தரகு முதலாளிகளின் நலன்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இந்தியச் சிறை, இனி யாருடைய நலனுக்காக தேசிய இனங்களின் இந்தச் சிறையைப் பாதுகாக்க வேண்டும். ஒருவேளை பாட்டாளிகளின் நலனுக்காகத்தான் இதை பாதுகாக்க வேண்டுமென்றால், இது ஏற்புடையதா?
ஒரு பாட்டாளி வர்க்கம், ஆங்கிலேயர்களாலும் இந்தியப் பார்ப்பனியத் தரகு முதலாளிகளாலும், அடக்கப்பட்டிருக்கும் தேசங்களை விடுவிக்காமல், அதற்காகப் போராடாமல், தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், இதிலிருந்து விலகி இவ்விருப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு, 1947 இல் நடந்த ஆட்சி மாற்றம் போல் பாட்டாளி வகுப்புக் கட்சி இந்தியப் புரட்சிக்கு தலைமை ஏற்கும் என்ற அறிவிப்பு. இத்தலைவர்களின் மேதாவித்தனத்தையும் சனநாயக மற்ற ஆளுமைப் போக்கையும் தானே காட்டுகிறது. மேலும் நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்நிலையோடு அணுகுகிறதே தவிர அதன் எதார்த்தப்பூர்வமான உண்மைத் தன்மையை ஏற்பதில்லை. எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறது. ஆக இக்கட்சிகள் பாட்டாளி வகுப்புப் போராட்டத்தை விட இந்தியாவை முன்னிறுத்து வதுதான் இவர்களின் இலக்காக இருக்கிறது. இந்தியா எந்த வடிவத்தில் இருந்தாலும் அது தேசிய இனங்களின் சிறைதான்.
சமூக அமைப்பை தீர்மானிப்பதில் இ.க.க. (மா) வைத் தவிர அனைவரும் அரைக்காலனிய அரை நிலவுடைமை அமைப்பாக வரையறுத்துள்ளனர். இந்தியச் சமூக அமைப்பின் அதிகார மையங்களாக இருப்பவை பாதியளவு வல்லாதிக்கமும் பாதியளவு நிலவுடைமை அமைப்பும் இருப்பது.
1. அடிப்படை முரண்பாடுகளில்: ஏகாதிபத்தியம், சமூக ஏகாதிபத்தியம் து நமது நாடு அல்லது தேசம். அடுத்து நிலபிரபுத்துவம் து பரந்துபட்ட மக்ள்.
2. புரட்சியின் தன்மை குறித்த வரையறுப்பில் அனைத்து பாராளுமன்ற / புரட்சிகர இயக்கங் களுமே புதிய சனநாயகப் புரட்சியையே முன்னிறுத்துகின்றனர்.
சமூக அமைப்பைத் தீர்மானிப்பது, முரண்பாடு களை வரையறுப்பது, புரட்சியின் தன்மை அனைத் தும், சீனாவின் சமூக அமைப்பு குறித்து மாவோவின் வரையறைகளை அப்படியே ஏற்று இந்தியாவிற்குள் பொருத்தப்பட்டதுதான் இவ்வரையறைகள். இ.க.க. தவிர அனைத்துக் கட்சிகளும் சீனாவை வழிமொழிந்தன (இ.க.க. சீனாவின் வரையறையை ஏற்றுக் கொண்டு சீனாவை மறுத்ததுதான் இதன்கதை)
இந்தியாவிற்கென்று சமூக ஆய்வு, முரண்பாடுகள் புரட்சியின் தன்மை, அதன் வழித்தடம் என்று எதுவும் தனித்துமாக இல்லை. சீனாவும், இந்திய அமைப்பும் மேலோட்டமாக ஒன்று போல தோன்றினாலும், அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளது. சீனா ஒரு தேசம். இந்தியா ஒரு தேசமில்லை. சீனா ஒரு தேசத்திற்கான அனைத்துக் கூறுகளையும் கொண்ட மொழி, இனம், பண்பாடு, எல்லை, உளவியல் விருப்பம் இப்படி எதுவும் இந்தியாவுக்கு இல்லை. தேசத்திற்கான தகுதியற்ற ஒன்றை எப்படி தேசமாகக் கருத முடியும். இதன் எதார்த்த நிலை என்னவென்றால், இது எப்போதும் ஒரு தேசமாக மாற முடியாது. மாறாக இப்போது இருக்கும் இந்தியா நாளை இருக்காது. அது சிதறுண்டுப் போகும். இப்படி சொல்வது யாருடைய குறுகிய அகநிலை விருப்பமும் அல்ல. இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில் மார்க்சியக் கண் கொண்டுப் பார்க்கும், அறிவியல் வழிப்பட்ட புறவயப் பார்வையேயாகும். இந்தியப் பார்ப்பனியப் பிற்போக்கு கருத்து முதல் வாதிகளாகவும், உலக வல்லாதிக்கப் பெரும் தீனிக் கரங்களுமே இவ்வமைப்புக்குக் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு அமைப்புகளுக்குமான அவரவர் நலன் சார்ந்த சமரச ஒப்பந்தமே, இந்தியக் கட்டமைப்பு உயர்வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்திய தேசம் என்பதும், இந்தியப் புரட்சி என்பதும் அறிவியலுக்கு முரணானது, புரட்சிக்கு எதிரானது.
ஆனால் தேசம் குறித்த வரையறையில், இந்தியா ஒரு தேசமாக உருவாகவில்லை. இது பல்தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்று முடிவெடுத்த வர்கள். அடிப்படை முரண்பாடுகளில் ஏகாதிபத்தியத் திற்கும் தேசத்திற்குமான முரண்பாட்டையே முதன்மை முரண்பாடாக இருப்பின், இதன் பொருள் வல்லரசுக்கு எதிராகத் தேச விடுதலையை முன்னிலைப்படுத்துவதுதான். அப்படி யென்றால், எந்தத் தேசத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். அய்யமில்லை அது இந்தியத் தேசியம்தான். அப்படி யென்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தின் நட்பு சக்திகள் யார்? யார் தலைமையில் புதிய சனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவது?
"பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டி முதலாளி வர்க்கம், பணக்கார விவசாயிகள், தேசிய முதலாளிகள் அடங்கிய ஐக்கிய முன்னிøனையைக் கொண்ட பாட்டாளி வகுப்புத் தன்மை, (அதாவது எல்லாப் புரட்சிகர வர்க்கங்கள், நாட்டுப் பற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்ட சனநாயகவாதிகள் உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி) இதுதான் இவர்களின் வரையறை.
இங்கே புதிய சனநாயகப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சி அல்ல. முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடைப்பட்டவையே புதிய சனநாயகப் புரட்சி.
இது முற்றும் முழுதானப் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவது. பாட்டாளி வகுப்புத் தலைமையின் கீழ் உழவர்கள், சனநாயக ஆற்றல்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பும், நிலவுடைமை எதிர்ப்பும் கொண்ட சிறு முதலாளிகள், தேசிய முதலாளிகள், பணக்கார விவசாயிகளைக் கொண்ட கூட்டு சர்வாதிகார அரசு, தான் புதிய சனநாயக அரசு. இந்த புதிய சனநாயக அரசின் பொருளாதாரக் கட்டமைப் பைப் பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்:
ஏகபோகத் தன்மை வாய்ந்த அன்னிய அல்லது சீனத் தொழில் நிறுவனங்களையும், தனி மனிதனால் உருவாக்க முடியாத வங்கிகள், இரயில்வேக்கள், விமானத் தொழில் நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தும். இவ்வாறு செய்வதால் தனி நபர் மூலதனம் மக்களைப் பணயம் வைத்து ஆட முடியாது. இதுவே மூலதனத்தைக் கட்டுப்படுத்தும் பிரதானக் கோட்பாடாகும்.''
இது, புதிய சனநாயகக் குடியரசின் பொருளாதார அமைப்பிற்கான சரியான கொள்கையாகும். பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக குடியரசில், அரசு முதலீட்டு நிறுவனங்கள் சோசலிசம் குணாம்சம் கொண்டிருக்கும். மொத்த தேசியப் பொருளாதாரத்தில் அதுதான் தலையான பங்கு வகிக்கும். இதர முதலாளித்துவத் தனி நபர் உடைமைகளை புதிய ஜனநாயகக் குடியரசு பறிமுதல் செய்யாது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தாது. கிராமப்புறங்களில் உள்ள நிலப்பிரபுத்துவ சுரண்டலை ஒழித்து, நிலத்தை விவசாயிகளின் தனி உடைமையாக மாற்றும். கிராமப்புறங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் பொருளாதார அமைப்பு அனுமதிக்கப்படும். இதுதான் "நிலவுரிமைக்கான சமத்துவத்தை நோக்கிச் செல்லும் கொள்கை. "உழவனுக்கே நிலம் சொந்தம்' என்ற முழக்கமாகும் என்பதுதான் இதன் சாரமாகும். ஆக புதிய சனநாயகப் புரட்சி என்பது முழுமைப் பெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல. பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் கூட்டுத் தலைமையாகும். பாட்டாளி வர்க்கத் தலைமையில் அமையவிருக்கின்ற சோசலிசப் புரட்சிக்கு ஆதரவான முதற் கட்ட அமைப்பு முறையாகும். இது சோசலிசத்திற்கு சேவை செய்யக் கூடிய அமைப்பு. இதுவே சோசலிச அமைப்பு அல்ல.
ஆனால் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கருத்துரைக்கும் இந்தியக் கட்சிகள் இது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்றும், இவர்கள் நடத்தும் புரட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரப் புரட்சிப் போலவும், நாளையே பொதுவுடைமை சமூகத்தைப் படைத்து விடுவது போலவும், ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்றனர். தேசிய இன விடுதலைப் போராட்டமும், புதிய சனநாயகப் புரட்சியும் மிகப் பெரும் வேறுபாடு ஏதுமில்லை. ஏறத்தாழ ஒத்த அடிப்படையைக் கொண்டதுதான். இதுவும் வல்லரசிய எதிர்ப்பும், நிலவுடைமை எதிர்ப்பும் கொண்ட புரட்சிகர வர்க்கம்தான். அதில் யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதுதான் வேறுபாடு. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், புதிய சனநாயகப் புரட்சிக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடுகளைப் போல பரப்புகிறார்கள். புதிய சனநாயகப் புரட்சியே தேசிய விடுதலையின் உள்ளடக்கத்தைக் கொண்டதுதான். மாவோ சீனாவில் நடத்திய புதிய சனநாயகப் புரட்சியை, சீனாவின் தேசியப் போராட்டமாகவே அடையாளப்படுத்தினார். அதுதான் "மக்கள் சீனம்' என்ற முழக்கம்.
தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பாட்டாளி வகுப்புத் தலைமை தாங்க முடியாதா? இல்லாத இந்தியாவில் தேச விடுதலைப் போராட்டம் நடத்த முடியுமென்றால், இந்தியச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அனைத்து தேசங்கள், தேசிய இனங்களுக் கான விடுதலைப் போராட்டத்திற்கும் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்க முடியாதா? உண்மையை சொல்வதென்றால் இங்கு மட்டும்தான் இது சாத்தியம்.
இந்தியப் புரட்சியின் நட்பு சக்திகள் மற்றும் தலைமை வர்க்கங்கள் மேலே ஐக்கிய முன்னணியில் வரையறுக்கப்பட்டுள்ள வர்க்கங்கள்தான். இதில் தேசிய முதலாளிகள், முகாமையானவர்கள். அதாவது இந்தியாவின் தேசிய முதலாளிகள் யார்? இந்தியா முழுவதும் சந்தைகளுடைய முதலாளிகளே தேசிய முதலாளிகள் அல்லது சுதேசி முதலாளிகள்என இந்திய முதலாளிகள் யார்? இவர்கள் "டாட்டா' "பிர்லா' "கோயங்கா' "முகேஷ் அம்பானி', "அனில் அம்பானி', "டி.வி.எஸ். அய்யங்கார்' இப்படித் தொடரும் இவர்கள்தான் தேசிய முதலாளிகள்.
இந்த முதலாளிகள் தேசிய முதலாளிகள் அல்ல. இவர்கள் தரகு முதலாளிகளாக இருந்து இன்று உலக முதலாளிகளாக மாறி விட்டவர்கள் என்றும் கூறலாம். அது உண்மையும் கூடத்தான். ஆனால் அடுத்து யாரைக் காட்டுவீர்கள். இவர்களின் வாரிசுகளையும், தம்பி களையும்தானே! இந்திய ஏகபோக சுரண்டல் வாதிகளான இவர்கள்தானே தேசிய முதலாளிகள். அதாவது பல்வேறு தேசிய இனங்களின் வளங்களை யும், வாழ்வாதாரங்களை சுரண்டிக் கொழுக்கும் இவர்கள்தானே இந்தியத்திற்கான தேசிய முதலாளி கள். பார்ப்பன பனியா மார்வாடி சேட்டுக்கள்தான் அந்த தேசிய முதலாளிகள் வேண்டுமென்றால் இதில் வல்லரசிய நிலவுடைமை எதிர்ப்புக் கொண்ட தேச பக்கதர்களை மட்டும்தான் இணைப்போம் என்று "வியாக்கியானம்' பேசலாம். இந்தியச் சந்தையைச் சுரண்ட வாய்ப்பிருக்கும்போது, எந்த முதலாளிக் குத்தான் தேச பக்தி வராது. இவர்களின் கூட்டோடு இந்தியாவில் ஒரு சனநாயகப் புரட்சி நடந்தால் இதற்கு பெயர் சனநாயகப் புரட்சியா? இவர்கள் தங்களின் சந்தை நலனை இழக்கக் கூடிய தேசிய இனப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவார்களா? இந்திய பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் மீண்டும் வலிமைப்படும். பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல. இந்தியப் பெரும் முதலாளிகள் நலனுக்காக. ஆக ஒரு சிறைக் கூடத்தை தேசமாக, புரட்சிகரக் குணாம்சம் கொண்ட புனிதமாக மாற்றுகின்ற வேலையைத்தான் 1920 இல் தொடங்கி இன்று வரை அதாவது 90 ஆண்டுகளாக பாராளுமன்ற மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இவர்கள் ஆசை இன்றுவரை நிறைவேற வில்லை.
இந்தியாவை இவர்கள் பாதுகாக்கத்தான் வழி இம்மியளவும் இந்தியா பாட்டாளி வர்க்கத்திற்கு பயன்படவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்திற்கு சிக்கலில்லாத சுரண்டல் தளமாகவும், மற்றும் இந்தியப் பார்ப்பனிய தரகு முதலாளிகட்கும், சாதி மதவாத பிற்போக்கு வாதிகளின் நலன்களுக்கே பயன்பட்டது. ஏகபோக சந்தையை விரிவுபடுத்தவும், தனியார் மயம், தாராள மயம் உலக மயத்தை அனுமதிக்கும் வாய்ப்பை வழங்கவும் இது உதவியது.
இதனால் தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் பறிக்கப்பட்டது. உழவு நெசவு, மீன்பிடி தொழில் ஏகபோக முதலாளிகளிடம் தாரை வார்க்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பெருகத் தொடங்கின. காட்டுவளங்களும், அதன் மீது படிந்து கிடக்கும் கனிம வளத்தையும் சூறையாட வாய்ப்பேற் பட்டுள்ளது. தடையற்ற சுரண்டலுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டுவிட்டது. இறக்குமதிக்கான தடையில்லை. முதலாளிகளின் சூறையாடல்கள் அசூரத்தனமான நடக்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் மரணத்தை நோக்கியே இருக்கிறது. இப்படி உலக முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு யார் காரணம்? பாட்டாளி வர்க்கத்தின் பலி பீடமான வாசிங்டனில் எடுக்கும் முறைகள் அனைத்தும் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி மூலம் தானே அடுத்த நொடிப் பொழுதில் அனைத்து தேசங்களும் சூறையாடப்படுகின்றன. இந்திய ஒற்றுமை இப்போது யாருக்குப் பயன்பட்டது, பயன்படுகிறது? இதனால் இந்தியப் பாட்டாளிகளுக்கு என்ன பயன்?
இந்தியா ஒரு தேசமில்லாததால், ஏகாதிபத்தியத் தின் எதிரியாக இந்தியத் தேசியத்தை வரையறுத்தது மிகப் பெரும் பிழை. பல தேசங்களை ஒடுக்கி இந்தியாவே ஒரு துணை ஏகாதிபத்தியமாக வளர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ஏகாதிபத்தியம் எப்படி இன்னொரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்தியக் கட்டமைப்பு. ஏகாதிபத்திய வாதிகளால் ஏகாதிபத்திய நலனுக்காகவே கட்டமைக்கப்பட்டது. ஆகவேதான் இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய நலனுக்காகவே சேவை செய்கிறது.
அடுத்து இவர்கள் செய்த இரண்டாவது பிழை நிலவுடைமை வர்க்கத்திற்கும் து பரந்துபட்ட மக்களுக் குமான வரையறுப்பு. அதாவது ஏகாதிபத்தியத்திற்கு அடுத்து அதிகாரமுள்ள அமைப்பு நிலவுடைமை வர்க்கம். பரந்துப்பட்ட மக்களின் துணைக் கொண்டு நிலவுடைமை வீழ்த்துவதென்பதுதான் இதன் புரட்சிகர நடவடிக்கை. ஆனால் இந்திய ஆட்சிப் பகுதியில் நிலவுடைமைக்கென்று தனித்த அதிகாரம் ஏதுமில்லை. வெறும் நிலம் அதன் வழியான ஆளுமைதான் இங்கு நிலவுகிறது என்பது ஏற்புடையது இல்லை. துண்டு நிலம் கூட இல்லாதவன் இச் சமூகத்தில் சாதியின் பெயரால் ஆளுமை செய்கிறான். சமூக அமைப்பில் அதிக வலிமைப் பொருந்திய ஆளுமை அமைப்பாக சாதியே இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு முறை அதாவது அதிகாரமுள்ள, ஆட்சி செய்கின்ற அமைப்பாக சாதி இருக்கிறது.
சாதியை நீக்கிய அல்லது சாதி இல்லாத ஒரு அதிகாரம் எந்த நிலவுடைமையாளனுக்கும் கிடை யாது. உதாரணத்திற்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் 5000 ஏக்கர் நிலம் வைத்துள்ளார் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். இப்போது இவர் ஒரு நிலவுடைமையாளர். இப்போது இச்சமூகத்தில் இவருக்கு ஏதாவது அதிகாரமுண்டா? ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நிலமில்லாத கூலித் தொழிலாளரை தனக்கு கீழ் பண்ணையாளராக வைத்துக் கொண்டு இவரை ஒடுக்க முடியுமா? மற்ற சாதிய நிலவுடை மையாளரோடு உறவு கொள்ள முடியுமா? தனக்காகப் படை வைத்துக் கொள்ள முடியுமா? அரசுகளோடு தனது அதிகாரத்தை நிறுவிக் கொள்ள முடியும்? அப்படி எதுவும் செய்து விட முடியாது. சாதி இல்லாத நிலவுடைமையாளனால் ஆதிக்கம் செய்ய முடியாது. நிலமே இல்லாத சாதியால் ஆதிக்கம் செய்ய முடியும். இங்கு ஆளுமை அமைப்பாக சாதி இருக்கிறது. எனவே இது சாதிய நிலவுடைமை அமைப்பு சமூக எதார்த்தம் கண்ணைக் குத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் கண்களுக்கு மட்டும் இது தெரியவில்லை. ஒருவேலை சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது என்ற பழமொழிப் போல இதை மறைக்க முற்பாட்டார்களோ என்னவோ? எது எப்படியோ நீண்ட காலத்திற்கு உண்மையைப் பதுக்க முடியாது.
சமூக அமைப்பு சாதிய நிலவுடைமை என்றால், அடிப்படை முரண்பாடுகளும் போர் தந்திரம், செயல் தந்திரம், புரட்சியின் தலைமை, ஐக்கிய முன்னணி, புரட்சியின் தன்மை அனைத்தும் மாற்றத்திற் குரியதுவே.
மேலும் மார்க்சு கோடிட்டுக் காட்டிய "ஆசிய உற்பத்தி முறை' இன்று கூர்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. "ஐரோப்பாவின் உற்பத்தி முறைக்கும்' ஆசியாவின் உற்பத்தி முறைக்கும் வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நிலவுடைமை என்ற வர்க்கமே இல்லை என்றும், சாதியை இவ்வர்க்கம் வளர விடாமல் விழுங்கி விட்டது என்றும் பல்வேறு மார்க்சிய அறிஞர்களும், அரசியலாளர்களும் முனைப் பெடுத்து ஆய்வுகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேசம் குறித்த வரையறை மற்றும் சமூக அமைப்பு பற்றிய ஆய்வு, இந்தியக் கம்யூனஸ்ட் கட்சிகளால் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதன் தலைவர்கள் தங்களின் அகநிலை விருப்பத்தின் அடிப்படையினருக்கும் இரசியாவிலிருந்தும், சீனாவி லிருந்தும், புரட்சியை இறக்குமதி செய்ய ஆசைப்பட்டனர். மேலும் இவர்களின் வாழ்க்கைத் தன்மை, சமூகத் தன்மை, வர்க்க நலன்களும், இந்தியப் புரட்சியில் எதிர் நிலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் புரட்சியின் இலக்குகளை இதுவரை அடையவே இல்லை.
இந்தியக் கட்சிகளில் சற்று மாறுதலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோஸ்ட்) இருக்கிறது. இது நடைமுறையளவில் தேசிய இன விடுதலை இயக்கங்களுக்கும் தோழமை உறவுகளை பேணி வருகிறது. இது வரவேற்கக் கூடியதே! ஆனால் அரசியல் முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை. தண்டாவாட மலைப் பகுதியில் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக காடுகளையும், கனிமவளங்களையும், பாதுகாக்கும் பொருட்டு பன்னாட்டு வல்லரசிய பெரும் முதலாளிகளுக்கு எதிராகவும், இந்திய ஆளும் வகுப்பிற்கு எதிராகவும் அர்ப்பணிப்பு மிக்க ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது. அவர் களின் புரட்சிகரப் போர்க் குணத்தைப் பறைசாற்று வதாக உள்ளது. அதேநேரம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் புரட்சிகரப் பேராட்டம் கொண்டு பழங்குடியின மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலானப் போராட்டம்.
மாறாக இதை இந்தியப் புரட்சி என்றோ, இந்தியாவின் இதயத்தில் நடக்கும் போர் என்றோ வர்ணிப்பது அல்லது மிகைப்படுத்துவது தேவை யற்றது. இந்தியாவுக்கும் கோண்டு இனப் பழங்குடி மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவர்களின் தாயகம், தேசம் எல்லாம் தண்ட காரணிய காடுகள்தான். இதுதான் எதார்த்தம். பரந்த இந்திய அரசை முதலாளிகளுக்கானதே தவிர பாட்டாளி களுக்கானதில்லை. எவ்வளவு சிறியத் தேசத்தில் வர்க்கப் போராட்டம் நடந்தாலும் அது உலகப் புரட்சியின் ஓரங்கம். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தோழன்.
ஆக இந்தியப் புரட்சி, இந்தியத் தேசம் என்ற கருத்தும் போராட்டமும் முச்சந்தியில் முட்டி நிற்கிறது. 90 ஆண்டுகாலம் எந்தத் தடியைக் கொண்டு எழுப்பியும் அது எழுவில்லை. ஏனென்றால் அதற்கு உருவமில்லை. உறுப்புகள் இல்லை. குறிப்பாக கால்கள் இல்லை. ஒருவேலை அது அடிமாடாக இருக்குமோ என்று அருவமான முடிவுக்கு வந்திருக் கிறார்கள். அநேகமாக இன்னும் 10 ஆண்டுகளில் 100 ஆண்டை எட்டி விடும். அப்போது அந்த அருவமும் மறைந்து விடும்.
அப்போது இந்தியச் சிறை இற்று விழும். அடைபட்டு கிடந்த தேசிய இனங்கள் பலத்தோடு எழுந்து நிற்கும். புதிய சனநாயகமும், பொதுவடைமை புரட்சியும் அணிவகுக்கும்.
இந்தியச் சிறை இற்று விழும்,
தேசிய விடுதலைப் புரட்சி இலக்கை வெல்லும்.
வீறு கொண்டெழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக