வெள்ளி, 20 மே, 2011

முதன்மை எதிரியை எதிர்க்காமல்...


எதிரி என்றவுடனேயே மட்டைப்பந்து (கிரிக்கெட்) சுவைஞர் (ரசிகர்)களுக்கு மட்டுமல்ல, இந்திய விடலைகளுக்கெல்லாம் கூட, பாக்கிசுதான் தான் நினைவுக்கு வருகிறது.
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்றவை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியும் அந்தவகை அரசியலைத்தான் பரப்பி வருகிறது.
இந்திய ஆண்டைகள் அவ்வாறு திட்டமிட்டுப் பரப்பும்போது, அடிமைப்பட்டிருக்கிற நம் தமிழகக் குமுகத்திற்கு எதிரிகள் யார் யார் என்று நாம் அறிந்து கொள்வது முகாமையானது.
நமக்கு எதிரியேஇல்லை, நாம் எல்லோரிடமும் ஒரே வகையில் அன்பு செலுத்தக் கூடியவர்கள்தாம் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அது உண்மையில்லை.
என்நண்பனைத் துன்புறுத்தியவனிடத்திலும், என் நண்பனிடத்திலும் நான் ஒரே வகையில்தான் அன்பு செலுத்துவேன் என்று ஒருவன் சொன்னால் அதை உண்மை என்று ஏற்க முடியுமா?
அதாவது நண்பனைத் துன்புறுத்தியவனுக்குச் சார்பானவனாகவே அவனைக் கருத முடியும்.
துன்புறுத்தலை அவன் தடுத்திருக்க வேண்டும். அல்லது துன்புறுத்தியவனைக் கண்டித்திருக்க வேண்டும்.
இரண்டும் செய்யாமல் அமைதியாக இருப்பதால், அவனை நடுநிலையானவன் என எண்ண முடியாது. துன்புறுத்தியவனுக்குச் சார்பானவனாகவே எண்ண வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் அடிபட்டவன் நிலையிலிருந்து பார்க்கையில், அவனைத் தாக்கியவனை எதிர்மையானவனாகவே எண்ண முடியும்.
ஆக, ஒவ்வொரு செயலுக்குள்ளும் ஓர் உடன்பாடும், ஓர் எதிர்மையும் இருக்கவே செய்கிறது.
முரண்பாடுகள் இல்லாமல் இயக்கம் இல்லை. இயக்கம் என்றிருந்தாலே அதில் முரண்பாடுகளை அறிய முடியும்.
முரண்பட்ட இருவினைகளில் ஒன்றுக்கு ஒன்று சார்பாகவும், மற்றதற்கு மற்றது சார்பாகவும் இருப்பதே இயற்கை.
சார்பற்ற ஒன்றாக எதையும் கூற முடியாது.
அவ்வகையில் எதை ஒருவர் சார்ந்திருக்கிறார் என்பதேகேள்வி. அதிலிருந்தே அவரின் அரசியலை, பண்பை, வாழ்க்கைப் போக்கை அளவிடமுடியும்.
கூலி உழவர்களைக் கொடுமைப்படுத்தும் நிலவுடைமை ஆண்டையின் ஆளுமைப் போக்குக்குச் சார்பாக இருக்கப் போகிறோமா அல்லது கூலி உழவர்களின் மீதான கொடுமைகளைக் கண்டித்து நிலவுடைமை ஆளுமையை எதிர்க்கப் போகிறோமா?
இப்படித்தான் குமுகத்தின் மீதான அவலங்களைக் கணிக்கவும், அவ்வகை அவலங்களை எதிர்த்துப் போராடுவதன் நோக்கமும் ஆக இரு வேறு சார்பு நிலைகள் தோற்றங் கொள்கின்றன.
உழைக்கும் பெருவாரியான மக்களின் பக்கம் இருந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மக்கள் போராளிகளாகவும் ஆண்டைகளுக்காகவும் இருந்து ஆண்டைகளுக்குச் சார்பாக இயங்குகிறவர்கள் ஆண்டை வகுப்புச் சார்பினராகவும் கணிக்கப்படு கிறார்கள்.
குமுக அமைப்பில் இப்படியாக நிறைய முரண்பாடுகள் உண்டு. ஒரு குமுகத்திற்குள் ஒருவகை முரண்பாடு மட்டுமே இருப்பதில்லை. பல முரண்பாடுகள் இருக்கின்றன.
தமிழ்க் குமுகத்தை எடுத்துக் கொண்டால் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முரண்பாடு உள்ளது. வல்லரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் முரண் உள்ளது. வெளிநாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்த் தேச முதலாளிகளுக்கும் முரண்பாடு உண்டு. உலகப் பெரு வணிகர்களுக்கும், தமிழக வணிகர்களுக் கும் இடையில் முரண் உண்டு. தமிழக நிலவுடைமை யர்க்கும் கூலி உழவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. அண்டை இன அரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் பகை முரண்கள் உண்டு.
ஆக மொத்தத்தில் இப்படிப் பல முரண்கள் தமிழகக் குமுகத்திற்குள் நிலவிக் கொண்டுதான் உள்ளன.
இவற்றில் எல்லா முரண்களுமே எதிர்க்கப்பட வேண்டியவைதாம். தீர்க்கப்பட வேண்டியவைதாம். என்றாலும் எதை முதலில் தீர்ப்பது எதை அடுத்துத் தீர்ப்பது என்று திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமாகவே படிப்படியாக முரண்களைத் தீர்க்கமுடியும்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்லும் பன்னாட்டுக் கொள்ளையர்களை விரட்ட வேண்டி யிருக்கிறது. தமிழ்த் தேச உரிமைகளை நசுக்கும் இந்திய வல்லாட்சியின் வாலறுக்க வேண்டியிருக் கிறது. தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் அண்டை தேச அரசுகளைப் பணிய வைக்க வேண்டியிருக்கிறது...
இப்படியாகத் தமிழ்த் தேச உரிமைகளை மீட்க தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ நூற்றுக்கணக்கான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
அவ்வகையில் நூற்றுக்கணக்கான எதிர்மை ஆற்றல்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட முடியுமா? அப்படிப் போராடி வெல்ல முடியுமா?
தந்தைக்கும் மகனுக்கும் மனவருத்தம் ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிற திருடன் ஒருவனைப் பிடிக்க வேண்டும் என்றால், தந்தையும் மகனும் தங்களுக் கிடைப்பட்ட முரண்களை விட்டுக் கொடுத்து இணங்கித்தான் பிடிக்க வேண்டும். மாறாக அந்தநேரத்தில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, உங்களுக்கு வேண்டுமானால் திருடனை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், நான் துணைக்கு வரமாட்டேன் என மகனும், நீ வேண்டுமானால் திருடனைப் பிடித்துக் கொள் நான் உதவ மாட்டேன் எனத் தந்தையும் தங்கள் முரணை முதன்மைப்படுத்திக் கொள்வார்களானால் என்ன ஆகும்? அங்கு நலன் அடைபவன் திருடனாகத்தானே இருக்க முடியும்?
அதுபோல்தான் குமுகத்தில் நிலவும் பல முரண்பாடுகளில் எதை முதலில் தீர்ப்பது எதை அடுத்துத் தீர்த்துக் கொள்வது என்கிற கணிப்பு தேவை.
எதை முதலில் தீர்வுக்கு எடுப்பதால் மற்ற முரண்பாடுகளுக்கு ஆக்கம் விளைந்துவிடாமல் இருக்கும் என்று அளவிட்டு முதன்மை முரண் பாட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே முரண்பாடுகளில் எது முதன்மை முரண்பாடு, எதை அடுத்த முரண்பாடாகத் தீர்ப்பது என்பதில் கூர்த்த அரசியல் ஆய்வு தேவை.
எல்லாமே தமிழ்த் தேச நலனுக்கானதாக இருக்கும்போது, எதை முதலில் தீர்த்தால் என்ன என்று சிலர் எண்ணலாம்.
அப்படி எண்ணுவது அறியாமை வயப்பட்டதே. திருடனுக்கு ஊதியத்தை ஏற்படுத்தித் தருவதைப் போன்றதே.
ஒரு தேசத்தின் விடுதலைக்காக முதன்மைப் படுத்தித் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் சில இருக்கும்.
தேசத்தின் விடுதலைக்குப் பின்பாகத் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் சில இருக்கும்.
தேசத்தின் விடுதலைக்குப் பின்பாகத் தீர்க்க வேண்டிய சிக்கல்களை விடுதலைக்கு முன்பாகவே தீர்த்துக் கொள்ள முனையக் கூடாது.
இதுகுறித்துச் சற்றுக் கூடுதலாகப் பார்ப்போம்.
 தமிழகம் ஒரு தேசம் என்கிற அடிப்படையில் உரிமை கொள்ள இயலாமல் இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தேசிய முதலாளிகளும், வணிகர்களும் எனத் தமிழ்த் தேசத்தின் அனைத்து வகுப்பினருமே மேற்படி இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் அடிமைப்பட்டிருப்பதை அறிவோம்.
அவை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு வகையில் விடுதலை தேவையுடையதாக இருக்கிறது.
இந்நிலையில் தன் விடுதலைத் தேவைக்காக அவை தானாகவே முன்னின்று வல்லரசியத்தை, இந்தியத்தை எதிர்த்துப் போராட அணியமாக இல்லை.
அதேபோது அவற்றை எதிர்த்துப்போராடும் பிற வகுப்புகளுக்கு அவர்கள் துணை செய்ய விரும்பு கின்றனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டுமாய் விரும்புகின்றனர்.
இந்நிலையில் இந்திய அரசை, வல்லரசியங்களை எதிர்த்துப்போராடுகிற உழைக்கும் வகுப்புகளுக்குத் தமிழ்த் தேசிய முதலாளிவகுப்புகளும், வணிக வகுப்புகளும் ஆதரவு அணிகளாக அமைகின்றன. வெகு மக்கள் தளத்தில் போராடக் கட்டமைக்கப்படும் முன்னணிகளில் பங்கெடுக்கும் நிலையிலும் அவ்வகுப்புகள் கைகோர்க்கின்றன.
எனவே, அதுபோன்ற சூழல்களில் இந்திய அரசையும் வல்லரசுகளையும் தனிமைப்படுத்தி எதிர்ப் பதற்குத் தமிழகத்தின் அனைத்து வகுப்புகளையும், ஒருங்கிணைத்து முன்னிலைப்படுத்தி ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்க வேண்டிய கடமை தமிழக உழைக்கும் வகுப்பிற்கு உண்டு.
இந்நிலையில் நாங்கள் உழைக்கும் வகுப்பின் தலைமைக்காõகப் போராடக் கூடியவர்கள். எனவே என்ன இருந்தாலும் முதலாளியம் என்பது வகுப்பு (வர்க்க) அடிப்படையில் இன்றைக்கு இல்லாவிட் டாலும் பின்வரும் காலங்களில் எங்களுக்கு எதிரிகள்தாம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களை இன்றைக்கு அணி சேர்க்க முடியுமா?
அப்படி அவர்களை அணிசேர்க்காமல் தேசிய விடுதலையைப் போராடிப் பெற்றெடுக்கவும் முடியுமா?
எதிர்கால ஒப்புரவிய (சோசலிச)க் குமுக உருவாக்கத்திற்கான போராட்டத்தில் எதிர்மையாகக் கணிக்கப்பட வேண்டியவர்களை, இன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மையர்களாகக் கணிக்க முடியாது.
காலத்திற்கேற்பப் போராட்டத் தேவைக்கேற்ப நண்பர்களைத் தீர்மானிப்பதும், எதிரிகளைத் தீர்மா னிப்பதும் மிக மிக இன்றியமையாததாக இருக்கிறது.
இன்றைய காலம் என்பதை இன்றைய குமுக அழுத்தத்தின் அளவீடுகளிலிருந்து தீர்மானித்தாக வேண்டும்.
தமிழகத்தின் இன்றைய முதன்மை எதிரி:
ஆக, நம் தமிழகத்தின் இன்றைய முதன்மை எதிரிகளாக இந்திய அரசும், வல்லரசுகளுமே இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.
இவ்விரண்டு எதிரிகளும் வலுவான எதிரிகள். நம் தேசத்தை அடிமைப்படுத்தியும், சுரண்டிக் கொள்ளை யடித்துக் கொண்டுமிருக்கிற அவ்விரு எதிரிகளையும் எளிதே நாம் விரட்டி அடித்து விட முடியாது.
அப்படி அவர்களை விரட்டியடிப்பதற்குரிய ஒரே போர்க் கருவி நமக்கு மக்கள்தாம். மக்களின் பேரெழுச்சியால் அல்லாமல் அவ்வெதிரிகளை நிலைகுலையச் செய்ய முடியாது.
மக்கள் பேரெழுச்சியைத் திரட்டுவது எவ்வாறு? என்று நாம் திட்டமிட்டாக வேண்டும்.
மக்களுள் பல்துறைசார்ந்த வகுப்பு அணிகளையும் அணி அணியாகத் திரட்டியாக வேண்டும்.
எல்லா அணிகளையும், இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் எதிராகத் திரட்டியாக வேண்டும்.
உழவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், எழுத்தாளர்கள் என அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்தாக வேண்டும். அதற்கான அரசியல் மற்றும் செயல் திட்டங்களிடப்படவேண்டும்.
இத்தகைய ஒருங்கிணைந்த முன்னணிகளைக் கட்டிப் போராடுகிற அதே நேரத்தில் பிற தேசங்களின் இந்தியாவுக்கு எதிரான, வல்லரசுகளுக்கு எதிரான போராட்ட வழியான ஆதரவு ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். உலகம் முழுக்க வல்லரசுகளுக்கு எதிராகப் போராடும் இயக்கங்களை எல்லாம் நமக்கான ஆதரவாளர்களாக ஒருங்கிணைக் கும் பெரும் முயற்சிகளையும் செய்தாக வேண்டும்.
இத்தகு நீண்ட காலத் திட்டமிட்ட முயற்சிகளின் வழியாகவே தமிழ்த் தேசம் இந்தியத்திடமிருந்தும், வல்லரசுகளின் ஆளுமைச் சுரண்டல்களிலிருந்தும் விடுபட முடியும்.
மாறாக அந்த முதன்மை எதிரிகளைக் கூர்மைப் படுத்தி எதிர்க்கிற அரசியல் தெளிவின்றித் தமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகு செய்யப் பெறவேண்டிய அடுத்தக் கட்ட வேலைகளையெல்லாம் இப்போது செய்தோமானால் அவை இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்குமே வாய்ப்பாகப் போகும்.
அவை எவை?
தமிழகத்திற்கும் அண்டைத் தேசங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. காவிரி நீரைக் கருநாடகம் மறிக்கிறது. முல்லைப் பெரியாற்று நீரைப் பறிக்கிறது கேரளம். ஆந்திர நிலவுடைமையர் தமிழகத்திற்குள் வந்தேறி நிலங்களைக் கவர்ந்திருக்கின்றனர்.
அவையாவும் உண்மையாயினும் அந்த அண்டைத் தேசங்கள் யாவும் விடுதலை பெற்ற தனித் தேசங்கள் இல்லை. அவையாவும் இந்திய அரசின் அடிமைத் தேசங்களே.
நமக்கு, இங்கு இந்திய அரசால், வல்லரசுகளால் தமிழ்த்தேசத்தின் மீது ஏற்படும் அரசியல், பொருளியல் அடக்குமுறைகள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.
ஆனால், அவர்கள் தங்கள் தேச உரிமை எழுச்சி களை இந்திய அரசுக்கு எதிராகவும், வல்லரசுகளுக்கு எதிராகவும் போராடிப் பெறும் வரிசையில் தமிழ கத்தை விட மிகப் பிந்திய நிலையிலேயே இருக்கின்றனர்.
அங்கெல்லாம் இந்தியத்திற்கு எதிரான, வல்லரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் மிக மிக அரிதாகவே நடக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து நாம் காவிரிச் சிக்கலுக்காகட்டும், முல்லைப் பெரியாற்றுச் சிக்கல்களுக்காகட்டும், அச்சிக்கல்களைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாத இந்திய அரசை நெருக்கிப் போடாமல் கருநாடகத்திற்கு எதிராகவும், கேரளாவுக்கு எதிராகவும் போராடுவோமானால் அது, இந்திய அரசை மகிழ்ச்சிப்படுத்தவும், அண்டைத் தேசங்களுக்கிடை யான பகைமைகளை வளர்க்கவுமே பயன்படும்.
அதைத்தான் இந்திய அரசும், வல்லரசுகளும் விரும்புகின்றன. ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டமாய் ஆகின்றன.
எனவே அவ்வகையில் அல்லாமல், இந்திய ஆட்சிக்குட்பட்டிருக்கிற இரண்டு தேசங்களுக்கு இடைப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசால் முடியவில்லை என்றால் இந்திய அரசே எங்களை இந்தியாவிலிருந்து விடுதலை செய் என்றும், எங்கள் தேசங்கள் தனித்தனித் தேசங்களாக இருந்தால் நாங்கள் இந்தச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வோம் என்றும் அறிவித்தாக வேண்டும்.
அவ்வகையில் அறிவிப்பதோடு நிற்காமல், அக்கருத்தை வலியுறுத்தி இந்திய அரசை எதிர்த்துப் போராடியாகவும் வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவைப் புறக்கணிக்கிற, எதிர்க்கிற சூழல்களுக்கிடையில்தான் இரண்டு தேசங்களுக்கும் இடையில் பகைமை மாறி, ஒற்றுமை ஏற்பட முடியும். அவ் ஒற்றுமை இந்திய, வல்லரசிய ஆளுமைகளை எதிர்க்கப் பயன்படவும் முடியும்.
இதற்கிடையில் தமிழகத்தில் உடுப்பி விடுதிகள், பெங்களூர் ஐயங்கார் பேக்கரிகள், ஆலுக்காசு நகைக் கடைகள் போன்றவை ஏராளமாக உருவாகிக் கொண்டிருப்பதும் உண்மைதான். கேரள இளைஞர்கள் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் வேலைகளில் வந்து குவிவதும் உண்மைதான்.
அவற்றின் சுரண்டல்களும், விரிவும் தடுக்கப் படவும், நிறுத்தப்படவும் வேண்டும் என்பதும் தேவையானதுதான்.
ஆனால் அவற்றை விட முகாமையாக விரட்டப்பட வேண்டியவை அமெரிக்க ஸ்டெர்லைட்டும், பெப்சி, கோக் நிறுவனங்களும் இல்லையா? பிரித்தானிய, செர்மானிய, சப்பானிய, கொரிய போன்ற வல்லரசிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பரப்பியிருப் பதைத் தடுத்து நிறுத்துவது முகாமையில்லையா? 
தகவல் தொழில் நுட்பம் எனும் பெயரில் தமிழகப் பெரு நகரங்களில் எல்லாம் அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் அடிவருடி ஆளுகைகள் சுரண்டிக் கொழுக்கின்றனவே அவற்றை விரட்ட வேண்டாமா?
அங்குப் பணியாற்றும் பல தேச, பன்னாட்டு ஆண்கள் பெண்கள் கொழுத்த வருவாயில் குடிப்பதும், கும்மாளமிடுவதுமாய் அரைகுறை ஆடைகளுடன் அலைந்து தமிழகப் பண்பாட்டையே பாழாக்குகிறார் களே! அவற்றைத் தடை செய்ய வேண்டாமா?
நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கன்னெய் (பெட்ரோலை) சேலம் இரும்பு எனத் தமிழகத்தில் கிடைக்கும் அரிய கனிம வளங்களையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போகிறதே இந்திய அரசு, அதைத் தடுத்து நிறுத்தித் தமிழகத்திற்காக ஆக்க வேண்டாமா?
ஆக இவற்றில் எவை முதன்மையானவை?
வல்லரசுகளும், இந்திய அரசும் தம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தமிழகத்தையே ஒட்டச் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்லுகிற வகையில் தமிழக நிலத்தை, உழவை, தொழில்களைப் பாழடிக்கவும் செய்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தி விரட்டி அடிப்பது முதன்மையானதா?
அல்லது,
அண்டைத் தேசங்களில் இருந்து ஊடுருவி வரும் சிறுவணிகர்களை, சிறு தொழில் முதலீட்டாளர்களை, வேலை தேடி வருவோரை விரட்டுவது முதன்மை யானதா?
பின்னவர்கள் வந்தேறுவதை எதிர்க்கவோ, தடை செய்யவோ வேண்டாம் என்பதல்ல நம் கருத்து. ஆனால், அது முதன்மையானதல்ல என்பதே நம் தருக்கம்.
இந்திய, வல்லரசிய ஆளுமையை, சுரண்டல்களை வேரறுக்கிற, விரட்டியடிக்கிற அடிப்படை முதன்மைப் பணியைச் செய்யாமல் விட்டு விட்டு மற்றதைச் செய்வோமானால் அச் செயல்களெல்லாம் இந்திய, வல்லரசுகளின் ஆளுமையை வளர்ப்பதற்கே பயன்படும்.
இதனால் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் முன் நகர்வில் சிக்கல்களே ஏற்படும் என்பதைத் தமிழ்த் தேசிய இயக்கத்தினர், கருத்தாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மலையாளிகளை வெளியேற்றுவோம்! வெளியாரை வெளியேற்றுவோம்! என்பவை அப்போதைய அளவில் அரிப்புகளைச் சொரிந்து விடுகிற நிறைவைத் தரலாமே அல்லாமல், அவை தமிழ்த் தேச விடுதலை அரசியலுக்கான திட்டமிட்ட நகர்வாக இருக்காது.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்!''
எனவே, தோழர்கள் இவை குறித்தெல்லாம் அக்கறையெடுத்துச் சிந்திக்க வேண்டுமாய் வலியுறுத்துவது கடமையாகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக