வெள்ளி, 20 மே, 2011

மார்ச் 25 தோழர்கள் இராசாராம், புதுக்கோட்டை சரவணன் நினைவுநாள்


தனக்காக வாழ்ந்து மடிவதென்பது இறகை விட இலேசானது. மக்களுக்காக வாழ்ந்து மடிவதென்பது மலையை விட கடினமானது.
 தோழர் மாவோ
தேசிய இனங்களின் விடுதலைக் காகவும், தன் தேச வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை யடிக்கப் படுவதை எதிர்த்தும், உழைக்கும் மக்களின் வாழ்வு வளங்களையும், உழைப்பையும் ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்ற உலகப் பெரு முதலைகளை எதிர்த்தும் அதற்குத் துணை போகின்ற இந்த இந்திய அரசை எதிர்த்தும் புரட்சிகரச் சிந்தனை களால் தூண்டப்பட்டு இங்கிருக்கின்ற அரசியல மைப்புச் சட்டத்தையும், சமூக அமைப்பையும் மாற்றம் செய்வதற்காகக் கருவியேந்திப் போராட வருபவர் களை எல்லாம் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று சொல்லி சுட்டுப் படுகொலை செய்கின்றது இந்திய அரச பயங்கரவாதம்.
1987இல் தமிழ்த் தேசியத் தலைவர் தோழர் தமிழரசனின் நயவஞ்சகக் கொலையில் தொடங்கி அதன் பிறகு பாகநேரி நாகராசன் உள்ளிட்டு தோழர்கள் இராசாராம், புதுக்கோட்டை சரவணன் வரை பல்வேறு தோழர்களைப் போலி மோதல் என்ற பெயரில் கொலை செய்கின்றது இந்த இந்திய அரசும், அதன் அடிமையாய் இருக்கின்ற தமிழக அரசும்.
குறிப்பாகத் தோழர் இராசாராம், தோழர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்த் தேச விடுதலை என்பது சாதி ஒழிப்பு இல்லாமல் நிகழாது என்ற தெளிவான சிந்தனையோடு இருந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு எதிராகவும், பல்வேறு வேலைத் திட்டங்களைத் தலைமை யேற்றுச் செய்தவர்.
பல ஆண்டு களாகத் தலை மறைவுப் போராளியாக வாழ்ந்தவர். சாதி ஒழிப் பின் மூலமே தமிழ்த் தேச விடுதலை அடைய முடியும் என்ற வேட்கையில் தமிழகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை'' என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வந்த தலித் கட்சியுடன் இணைந்து செயல்பட்டவர்.
அந்தத் தலித் கட்சியின் தலைவர் தேர்தல் பாதைக்குச் சென்றபோதும் கூட அவரால்தான், “தமிழகத்தின் சாதி ஒழிப்பையும், தமிழக விடுதலையும் நிகழ்ந்த முடியும்'' என்று நம்பியவர். அந்த நம்பிக்கையில் அவர்களோடு தன் வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை பயணம் செய்தவர். தமிழகத்தில் இருக்கின்ற பார்ப்பன ஊடகங்களால் "தமிழ்த் தீவிரவாதி' என்ற ஒரு புதிய சொல் உருவாகக் காரணமாக இருந்தவர். அவரைக் கடந்த 2002 ஆம் வருடம் திசம்பர் மாதம் தமிழக அரசு கைது செய்தது.
அதன் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் அவரைத் தொடர்பு படுத்தி நீதிமன்றங்களில் நிறுத்தினர். அப்போது தோழர் இராசாராம், தமிழ்த் தேச விடுதலைக்கு ஆதரவாகவும், இந்துத்துவ இந்தியத்தை எதிர்த்தும் முழக்கமிட்டுக் கொண்டே வருவார்.
இது இந்திய அரசிற்குப் பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் தமிழக அரசின் காவல் துறை தோழர் இராசாராமை அச்சுறுத்தியது. ஆனால் தோழர் இராசாராம் மீண்டும் துணிச்சலாகச் சங்கர மடத்தை இடிப்போம்! சங்கராச்சாரியார் ஒழிக! என்றும் முழக்கமிட்டார். இந்த முழக்கம் இந்தியப் பார்ப்பன அரசையும், அதன் அடிவருடித் தமிழக அரசையும் கோபப்படுத்தியதன் விளைவு கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தோழர் இராசாராமையும், தமிழ்த் தேச விடுதலைக்காகப் போராடியவரும், வீரப்பனோடு தொடர்பில் இருந்து பல்வேறு நிகழ்வுகளில் இராசா ராமோடு இணைந்து பணியாற்றியவருமான தோழர் புதுக்கோட்டை சரவணனையும் சென்னை கோட்டூர்புரத்தில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்தது.
உண்மையிலேயே மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தன் குடும்ப உறவுகளை எல்லாம் துறந்து சாதி ஒழிப்பு, தமிழ்த்தேச விடுதலை போன்ற இலக்குகளை நடைமுறைப்படுத்துகின்ற பணியில் சமரசமற்றுக் களச் சாவு கண்ட இந்தத் தோழர்களை நினைவு கூர்வதற்குக் கூட நமக்கு 8 ஆண்டுகள் தேவைப்படுகின்ற அதே நேரத்தில் இதே இலக்கு களை முன்னிறுத்தி அரசியல் தளத்தில் நின்ற தலித் தலைவர்கள் அந்த இலக்குகளை விட்டு விலகித் தம்மை நம்பி வந்த மக்களை எல்லாம் விலைபேசி எதிரிகளிடம் சமரசமாகித் தேர்தல் மூலம் இந்தியாவின் எடுபிடிகளாக ஆக்கி மிகப் பெரும் தலைவராவதற்கும் இந்த 8 ஆண்டுகளே போதுமானதாகிப் போனது என்பதனை உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் உணர வேண்டும்.
எந்த ஒரு தனி மனிதனையும் தூக்கிப் பிடிப்பதிலோ, துதி பாடுவதிலோ நமக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. அதே நேரத்தில் நமது அரசியலை நமது சாதி ஒழிப்பை, நமது தேச விடுதலையை, நமது பொதுவுடைமை அரசியலை நடைமுறைப்படுத்துகின்ற பணியில் யாரெல்லாம் பலியாகிறார்களோ அவர்களை மக்கள் போராளிகளாக மக்கள் புரட்சியாளர்களாக அடையாளம் காட்ட வேண்டிய தேவையும், மக்களை விலை பேசி அதன் மூலம் தலைவர்களாக வலம் வருபவர்களை அவர்கள் தலித் தலைவர்களாகவே இருந்தாலும் அவர்களை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் நமக்கு இருக்கின்றது.
அந்த அடிப்படையில் இந்த மார்ச் 25ஆம் நாளை நாம் தமிழ்த் தேச விடுதலைப் போராளிகளான தோழர் இராசாராம், தோழர் புதுக்கோட்டை சரவணன் ஆகி யோரை நெஞ்சில் ஏந்துவோம். அவர்கள் மீது நமக்கு நிறைய திறனாய்வுகள் உண்டு என்றாலும் எதிரிகளிடம் சமரசம் இல்லாமல் சாவு கண்ட, அவர்கள் சென்ற
சாதி ஒழிப்புப் பாதையில்
தமிழ்த் தேச விடுதலைக்கான பாதையில்
பொதுவுடைமைப் பாதையில்
பயணிப்போம். தமிழ்த் தேச விடுதலையை வென்றெடுப்போம்! அதற்குத் தடையாக இருக்கின்ற இந்துத்துவ இந்தியக் கட்டமைப்பை வீழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக