சனி, 7 மே, 2011

தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்! – சமநிலைச்சமுதாயம் (மே இதழ்)

தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்! – சமநிலைச்சமுதாயம் (மே இதழ்)

தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் தமிழ் தேசியவாதிகள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்று சமநிலைச்சமுதாயம் மே இதழில் ஆளூர் ஷாநவாஸ்...
தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் தமிழ் தேசியவாதிகள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்று சமநிலைச்சமுதாயம் மே இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதியுள்ளார். சீமான்…
பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப் பட்டிருப்பவர்.
ஈழ மண்ணின் விடுதலைக்காக ஒலிக்கும் குரலாகவும்,
ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும் காட்சியளிப்பவர்.
எளிய குடும்பத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் ஓர் திரைக் கலைஞர்.
எளியவர்கள் பலர் திரைத்துறையில் எழுச்சி பெறுவதற்கு காரணமானவர்.
தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சிறைகளைக் கண்டவர்.
தன் இனத்தின் மீட்சிக்காக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்.
பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் உச்சரிப்பும்,
பிறர் மொழியைக் களங்கப்படுத்தாத உயர்பண்பும் உடையவர்.
தான் உச்சரிக்கும் மொழியாலும், தன் உடல் மொழியாலும்
தமிழுலகை வசீகரிக்கும் மேடை நாயகர்.
இத்தனைப் பெருமைகளையும், சிறப்புகளையும் உடைய சீமான், இப்போது ‘இந்தியாவின் மரண வியாபாரி’ நரேந்திர மோடியைப் புகழும் ஒரு நாலாந்திர அரசியல் வாதியாகச் சிறுமைப்பட்டு நிற்கிறார்.
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு, கலைஞரின் தலைமையிலான திமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார். ‘கலைஞரை விமர்சிக்கிறேன் பேர்வழி’ என்று கிளம்பியவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
நரேந்திர மோடி…
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன்; பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.
ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேவைப் போலவே, குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.
இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன். அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்கிறபோது, பெரியாரின் மண்ணிலிருந்து ஒருவர் அவனை முன்மாதிரியாகக் காட்டுவது எத்தனைப் பெரிய துரோகம்?
குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் கிடைக்கிறதாம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம். மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறாராம். இப்படி அடிக்கிக்கொண்டே போகிறார் சீமான்.
இத்தோடு நிறுத்தவில்லை அவர். ‘அதிமுக ஆட்சியமைத்தால் அது எப்படியிருக்கும்? என்று ஒரு ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ‘திமுக ஆட்சியைவிட மோசமாகக் கூட இருக்கலாம்; அல்லது நரேந்திர மோடி மாதிரி ஒரு நல்ல நிர்வாகத்தைத் தரவும் ஜெயலலிதா முயற்சிக்கலாம்’. என்று பதிலளித்துள்ளார் சீமான்.
ஐயா பெரியாரின் பேரனே..எது நல்ல நிர்வாகம்?
ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி. அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?
தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?
அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?
‘தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் உள்ள குஜராத்’ என மோடியை வானளாவப் புகழும் சீமானுக்கு, அந்த குஜராத்தின் உண்மை முகம் தெரியுமா? மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்கங்கள் அவருக்குப் புரியுமா? ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதை சீமான் அறிவாரா?
குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஒ.பி.சி பிரிவினரைவிட இது 50 சதவீதம் அதிகம் என்றும், கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை அறிவித்த போது, குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது என்றும், இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள் கல்வி உதவித்தொகையை இழந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட குஜராத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல்,அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யும் விளிம்பு நிலை மக்களாக இருப்பதையும் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.
குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.
குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.
இப்போது சொல்லுங்கள் சீமான் அவர்களே! இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?
மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள். மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் ‘செய்தி’யாக்குகின்றனர்.
நாடு முழுவதும் மோடியின் புகழைப் பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் ‘துக்ளக் சோ’ எடுத்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறார். கலைஞரைத் திட்டுவதற்கும், ஜெயலலிதாவை தட்டி எழுப்புவதற்கும் மோடியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.
‘ஜெயலலிதா வந்தால் நரேந்திர மோடியைப் போல நல்லாட்சி தருவார்’ என்று, இத்தனை நாளும் சோ சொல்லி வந்ததைத்தான் இப்போது சீமானும் சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இனி மோடியின் குஜராத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகக் காட்டுவதற்கு இல.கணேசனும், எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும், சோவும், இராம.கோபாலனும் சீமானின் கருத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். ‘மோடி நல்லவர் என்று நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை; இதோ பெரியாரின் பேரனே சொல்கிறார் பாருங்கள்’ என்று மக்களை உசுப்புவார்கள்.
‘இலங்கையில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி, அதன் மூலம் உலகக் கலைஞர்களை இலங்கைக்கு வருத்தி, உலக அரங்கில் இலங்கை மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்த ராசபக்சே முயல்கிறார். ஆகவே இந்திய திரைக் கலைஞர்களே இலங்கைக்கு செல்லாதீர்கள். ராசபக்சே மீதான போர்க் குற்றத்தை போக்கத் துணை போகாதீர்கள்’ என்றெல்லாம் கொந்தளித்து, கமலுக்கு கடிதம் எழுதி, அமிதாப் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீமான் தான் இன்று மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறார்.
திரைப்பட விழா மூலம் தன் மீதான ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராசபக்சேவைப் போலத்தான், மோடியும் தடையில்லா மின்சாரம் மூலமும், மதுவிலக்குச் சட்டத்தின் மூலமும் தன் மீதான ரத்தக்கறையை மறைக்க முயல்கிறார். அதற்கு சீமான் துணை போகலாமா?
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?
ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள். தமிழ் மண்ணுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின் அருகிலிருக்கும் ‘தமிழ் முழக்கம் சாகுல் அமீது’வே நிகழ்கால சான்று. அத்தகைய விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும் போது எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?
‘மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்’ என்கிறார் சீமான். ஏன் ராசபக்சே கூட அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்தான். சிங்களர்களின் மேன்மைக்காகவே அவன் பல திட்டங்களை செயல்படுத்துகிறான். மோடியைப் போலவே பன்னாட்டு முதலீடுகளை இலங்கையை நோக்கித் திருப்புகிறான். அதற்காக ராசபக்சேயை ‘நல்லாட்சி தருபவர்’ என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டினால் சீமான் சும்மா இருப்பாரா?
ராசபக்சேயை தமது நண்பர் என்று சொல்லி புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலி மீது பாய்ந்து வருகிறார் சீமான். ஹசன் அலி ராசபக்சேயைப் புகழ்ந்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், அவர் ராசபக்சேவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர். ராசபக்சேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைமையின் கீழ் இயங்குபவர்.
அதிகாரத்தில் இருக்கும் அவர் தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான் ராசபக்சேவை புகழ்ந்து வருகிறார் என்பதை பாமரனால் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதிகாரத்தின் வாசனையைக் கூட நுகராத சீமான் மோடியை புகழ்ந்து பேசியதன் பின்னணியைத் தான் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதிகாரத்தில் இல்லாத போதே சீமான் இப்படி தடுமாறுகிறார் என்றால், ஹசன் அலியைப் போல அதிகாரத்தைச் சுவைக்கும் நிலைக்கு சீமான் வருகிறபோது எப்படி மாறுவாரோ தெரியவில்லை.
சீமானின் பேச்சு சர்ச்சையானவுடன், ‘சீமான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை; மோடியின் நிர்வாகத்தில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சுட்டிக் காட்டினார்; சீமான் எப்போதுமே மதவெறி எதிர்ப்பாளர்தான்’ என்றெல்லாம் வலிந்து விளக்கம் அளிக்கின்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர். அவர்களின் வாதப்படியே பார்த்தாலும் நல்ல விசயம் மோடியிடம் மட்டும் இல்லையே. இவர்கள் முழு மூச்சாக எதிர்க்கும் கலைஞரிடம் கூடத்தான் நல்ல பல விசயங்கள் இருக்கிறது. அதற்காக சீமான் கலைஞரைப் பராட்டுவாரா?
மோடியின் மதவெறியைக் கழித்துவிட்டு, அவரது நிர்வாகத்தில் உள்ள தடையில்லா மின்சாரத்தையும், மதுவிலக்குச் சட்டத்தையும் ஊன்றி கவனிக்கத் தெரிந்த சீமானுக்கு, கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை கழித்து விட்டு, அவரது நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அருந்ததியர் இட ஒதுக்கீட்டையும், முஸ்லிம் இட ஒதுக்கீட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி சட்டத்தையும் கவனிக்கத் தெரியவில்லையே ஏன்?
இத்தகைய நல்ல சட்டங்களை கொண்டு வந்ததால் மட்டுமே சீமானின் பார்வையில், எப்படி கலைஞர் ஒரு முன்மாதிரி முதல்வர் ஆகமாட்டாரோ, அதைப் போலவே சில நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே மோடியும் முன்மாதிரி முதல்வர் ஆகிவிடமாட்டார். இந்த உண்மைகளெல்லாம் நன்றாகத் தெரிந்தும் கூட சீமான் ஒரு முடிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்.
பால்தாக்கரேயில் தொடங்கிய சீமானின் பயணம், இப்போது மோடியில் தொடர்கிறது. அனேகமாக அது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் போய் முடியும்போல் தெரிகிறது.
சீமான் தெளிவற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது பேச்சும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இனம்காட்டி வருகின்றன.
‘வீரநடை’ திரைப்படத்தின் படுதோல்விக்குப் பிறகு, முடங்கிக் கிடந்த சீமானை பெரியார் திராவிடர் கழகத்தின் மேடைகள்தான் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தன. அந்த மேடைகளில் பேசுவதற்காக பெரியாரையும், அவரது தத்துவங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிய அவரை, சுப.வீரபாண்டியன், தியாகு, பெ.மணியரசன், திருமாவளன், ராமதாஸ், கி.வீரமணி போன்ற பெரியாரியவாதிகள் ஆரத்தழுவி வரவேற்றனர்.
பெரியாரியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சீமான், வளர்ந்த உடன் செய்த முதல் வேலை, பெரியாரின் திராவிடத்தை மறுத்தார். பெரியாரின் மொழிக் கொள்கையை எதிர்த்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை இந்துத்துவத்திற்கு எதிராகக் களமாடிய பெரியாரின் வழியைத் தவிர்த்தார். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கிய பெரியாரை மறந்தார்.
சீமான் இப்போது திராவிடத்தைப் பேசுவதில்லை; பெரியாரியத்தைப் பரப்புவதில்லை; இந்துத்துவத்தை தோலுரிப்பதில்லை; சாதி ஒழிப்பு பற்றி மூச்சு விடுவதில்லை. மாறாக, ஆரியத்தை வேரோடு வீழ்த்திய திராவிடத்தை எதிர்க்கிறார். மும்பையில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த பால்தாக்கரேயையும், குஜராத்தில் அதைவிட மேலான பயங்கரத்தை நிகழ்த்திய நரேந்திர மோடியையும் புகழ்ந்துரைக்கிறார். இந்துத்துவச் சிந்தனை கொண்ட சாதி வெறியரான முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு சராசரி அரசியல்வாதியாக காட்சி தருகிறார். கேட்டால் தமிழ்த் தேசியம்; தமிழ்த் தேசியம் என்கிறார்.
சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது.
தமிழராய் பிறந்து, தமிழராய் வாழும் மக்கள் பல்வேறு சமூகக் குழுக்களாக இருக்கிறார்கள். அந்தந்த சமூகக் குழுக்களுக்கென்று தனித் தனியான அடையாளங்களும், கலாச்சார நடவடிக்கைகளும், பண்பாட்டு அசைவுகளும், வட்டார வழக்குகளும் உள்ளன. அதையெல்லாம் மறுத்துவிட்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க சீமான் முயல்கிறார்.
அந்தந்த சமூகங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காமல், ‘பாட்டன் சொத்து அடமானத்திலிருக்கிறது; மீட்ட பிறகு பேசுவோம்’ என்று சீமான் சொல்லித் திரிவது சிறுபிள்ளைத் தனமானது. இது, ‘நாடு அடைந்த பிறகு தலித் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசுவோம்’ என்று சொல்லி அம்பேத்கரை ஏமாற்றிய காங்கிரஸ் உயர்சாதியினரின் துரோகத்தைப் போன்றது.
சீமான் தமிழ்த் தேசியத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசுகிறாரே தவிர, தமிழ்த் தேசியத்தின் உட்பிரிவுகளாய் இருக்கின்ற தலித்துகளின் பிரச்சனைகளையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ- முஸ்லிம்களின் பிரச்சனைகளையும், இதர தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளையும் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. விளிம்பு நிலை மக்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் வாழ்நிலை பற்றி அவருக்குப் போதிய புரிதல் இல்லை.
சீமான் எடுக்கும் அரசியல் முடிவுகளும் குழப்பமானதாகவே இருக்கிறது. பிரபாகரனை வீழ்த்த இலங்கை அரசுக்கு கருவிகள் கொடுத்த காங்கிரஸ் அரசையும், அந்த அரசுக்குத் துணை நின்ற கலைஞர் அரசையும் காய்ச்சி எடுத்தவர், ‘பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவையும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரசையும், கலைஞரையும் எதிர்த்த அவர் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஆதரிக்காமலாவது இருந்திருக்கலாம். அவரோ ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சொல்லி ஈழ விடுதலைக்கு புது வழியைக் காட்டினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈழம் என்ற வார்த்தையைக் கூட ஜெயலலிதா உச்சரிப்பதில்லை என்பது தனிக் கதை.
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட அதிமுக அணிக்கு ஆதரவு என்ற போக்கையே சீமான் கடைபிடித்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளவோ, மரியாதை நிமித்தமாக சந்திக்கவோ கூட ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. பின்னர் அதிமுக அணியில் வைகோவுக்கு ஏற்பட்ட கதி சீமானின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியது. வம்பே வேண்டாம் எனக்கருதி, காங்கிரஸ் எதிர்ப்போடு தன் தேர்தல் கடமையை முடித்துக் கொண்டார். அதனால் தான் இம்முறை அவர், இலை மலர்ந்தால் அது மலரும், இது மலரும் என்று எந்த ஆரூடமும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்.
முஸ்லிம்கள் என்றால் அவர்களை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது, தலித்துகள் என்றால் அவர்களை சாதிக் கண்ணோட்டத்தோடு அணுகுவது என்ற வகையிலேயே வைகோ போன்றவர்களின் அணுகுமுறை உள்ளது. இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் என்ற வகையில் தலித்துகளையும், முஸ்லிம்களையும் இவர்கள் அணுகுவதில்லை. ஆனால், முதல் வகை தமிழ்த் தேசியவாதிகள் அந்தச் சமூகங்களின் உணர்வுகளை உள்வாங்கியவர்களாகக் களமாடி வருகின்றனர்.
பாஜக வுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, குஜராத் கலவரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது மோடிக்கு ஆதரவாக முழங்கினார் வைகோ. வாஜ்பாயையும், அத்வானியையும் வானளாவப் புகழும் இயல்புடையவராகவும் அவர் இருக்கிறார். இது பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, ‘பெரியாரும் ராஜாஜியும் போலவே நானும் வாஜ்பேயும்’ என்று விளக்கம் அளித்தார் வைகோ.
இப்போது பால்தாக்கரேயையும், மோடியையும் சீமான் புகழ்ந்தது குறித்து, நாம் தமிழர் இயக்கத்தினரிடம் கேட்டால் அவர்களும் வைகோவைப் போலவே பதிலளிக்கின்றனர்.
பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவைப் போன்றது தானா, ‘வைகோவுக்கும் வாஜ்பேயிக்குமான உறவு; சீமானுக்கும் மோடிக்குமான உறவு’ என்பதை பெரியாரிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.
வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், ஊழலை எதிர்ப்பதிலும், குடும்ப அரசியலை வீழ்த்துவதிலும் காட்டுகிற முனைப்பில் எள் முனையளவு கூட, சாதிவெறியை ஒழிப்பதிலோ மதவெறியை எதிர்ப்பதிலோ காட்டுவதில்லை. மூத்த தமிழ்த் தேசியவாதிகளான வைகோவும், நெடுமாறனும் பயணித்த அதே வழித்தடத்தில்தான் இப்போது, இளைய தமிழ்த் தேசியவாதியான சீமானும் பயணித்து வருகிறார். இப்படியே அவர் போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலில் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும் ஏற்பட்ட நிலைதான் சீமானுக்கும் ஏற்படும்.
இயக்கம் கட்டவும், புகழ் பெறவும் எது பயன்படுமோ அதையெல்லாம் பயன்படுத்துவது என்ற குறுகிய சிந்தனைக்கு சீமான் உள்ளாகியிருக்கிறார். மும்பையில் ‘நாம் தமிழர்’ இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும், தென் மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காகச் சென்ற குறிப்பிட்ட சாதியினர் என்றும், அவர்கள் ஏற்கனவே சிவசேனாவில் அங்கம் வகிப்பவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகையவர்கள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டுமெனில், பால்தாக்கரேயை புகழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதனாலேயே, சீமான் பால்தாக்கரேயை புகழ்ந்தார் என்றும் தெரிய வருகிறது.
சீமானைப் போலவே, மோடியைப் பாராட்டிய அன்னா ஹசாரேயை எதிர்த்து, மூத்த சமூக சேவகர் மேதா பட்கர் இப்படி கூறினார்: ”அன்னா ஹசாரே குஜராத்தில் முஸ்லிம்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடியை ஊழலற்ற நிர்வாகம் தருகிறார் என பாராட்டுகிறார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா நல்ல கட்சி என இந்துத்துவா வாதத்தை முன்வைக்கிறார். ஊழல் என்பது களவு.அதை விடக் கொடுமையான, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட உடந்தையாக இருந்த மோடியைப் பாராட்டும் ஹசாரே, எப்படி சிறந்தவர்?”
அன்னா ஹசாரேயை நோக்கிய மேதா பட்கரின் இந்தக் கேள்வி இந்த சீமானுக்கும் பொருந்தும்.
[சமநிலைச் சமுதாயம் மே-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]
  • 1
    1
    1
    1
    1
    1
    1
    1
    1
  • 1
    1
    1
    1
    1
    1
    1
    1
    1



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக