வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம். வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம். இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும். இதில் வெளிக்கொணரப்படும் உண்மைகளை நிரூபிக்கும் சில கடிதங்களையும் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இதுவரை காலமும் மிகவும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த இக்கடிதங்களை, காலத்தின் தேவை கருதி இப்பொழுது நாம் வெளிக்கொணர்கின்றோம். இந்த வகையில் இவ்வாரத்திற்கான கட்டுரையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்துடன் ஒரேயொரு நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும், அவரது புதல்வி கனிமொழியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தொடர்பாடல்களைப் பதிவு செய்கின்றோம். . . . 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்: வன்னி மேற்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகள், கிளிநொச்சியை மையப்படுத்தித் தமது வலிந்த தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருந்தன. யுத்த விமானங்கள், ஆட்லறி எறிகணைகள், பல்குழல் பீரங்கிக் கணைகள் சகிதம் கிளிநொச்சியையும், அதனை அண்டிய ஏனைய மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து சிங்களப் படைகள் நிகழ்த்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் நாள்தோறும் தமிழ் உயிர்கள் நரபலி வேட்டையாடப்பட்டு வந்தன. மக்களின் இழப்புக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழலை தோற்றுவித்திருந்தது. இதற்கு ஏறத்தாள ஒரு மாதத்திற்கு முன்னர் 2008 செப்ரம்பர் மாதம் 9ஆம் நாளன்று வவுனியாவில் சிங்களப் படைகளின் கட்டளைப்பீடம் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நிகழ்த்திய தாக்குதலில் இந்தியப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தமை, தமிழின அழிப்பில் இந்தியா உடந்தையாக இருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் மக்களின் தார்மீகக் குரல் ஓங்கியொலிக்கத் தொடங்கியிருந்தது. ஏறத்தாள ஏழு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தைத் தோற்றுவித்திருந்தன. காங்கிரஸ் கூட்டணியின் அச்சாணி என்று சோனியா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் அரசியல் எதிர்காலம்கூட ஒருவகையில் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளால் கேள்விக்குறியாகும் அபாயமும் மேலோங்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நாடகம் ஒன்றை கருணாநிதி கனக்கச்சிதமாக அரங்கேற்றத் தொடங்கியிருந்தார். டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நிகழ்த்துதல், மனிதச் சங்கிலிப் பேரணிகளை முன்னெடுத்தல் என்று நீண்டு விரிந்து செல்லத் தொடங்கிய கருணாநிதியின் போர்நிறுத்த நாடகம், ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கும் காட்சியாகக் கட்டவிழத் தொடங்கியது. இதன்படி பதினான்கு நாட்களில் ஈழத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வகையில் கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பும், ஜெயலலிதாவின் தன்னாட்சியுரிமை அறிக்கையும் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் தொடர்பான ஓரளவு நம்பிக்கையை வன்னி மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. தமிழகத்தின் கட்சி அரசியலில் எந்தவொரு காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிடாத பொழுதும்கூட, ஈழத்தமிழர்களின் நலன்களில் ஒத்திசைவான சமிக்ஞைகளை ஏககாலத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெளியிட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்விதமான தொடர்புகளையும் தாம் பேணுவதில்லை என்ற தோற்றப்பாட்டை கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊடகங்களில் காண்பித்து வந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் காலம்காலமாக உறுதுணையாக நிற்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாக, பின்கதவுத் தொடர்புகளை இவர்கள் பேணியே வந்திருந்தனர். இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாடல்களை 2006ஆம் ஆண்டிலிருந்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாகக் கருணாநிதி பேணி வந்திருந்தார். கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பாக ஏறத்தாள மூன்று தசாப்தகாலப் பட்டறிவைக் கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். 1980களில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஒரேயொரு காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விரோதமான போக்கைக் கையாண்டவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதியுடனும் நல்லுறவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிய பொழுதும்கூட, விடுதலைப் புலிகளின் விடயத்தில் காழ்ப்புணர்ச்சியுடனேயே கருணாநிதி நடந்துகொண்டார். தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு மே மாதம் வைகோ அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய கருணாநிதி, வைகோவைப் பயன்படுத்தித் தன்னைப் படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யையும் அவிழ்த்து விட்டிருந்தார். இவ்வாறாக கருணாநிதியின் புலிவிரோதப் போக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்த பொழுதும்கூட, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் அவருடன் நல்லுறவைப் பேணுவதற்கே தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தார்கள். இந்த வகையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கைகளை 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கருணாநிதி வெளியிடத் தொடங்கிய பொழுது, அவருக்கு தமது நேசக்கரத்தை நீட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழத்தமிழர்களின் துயர்துடைப்பதில் அவரால் ஆற்றக்கூடிய பணிகளையிட்டு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதன் ஓர் அங்கமாக ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாள் காலையில் கருணாநிதிக்கான அந்தரங்க மடல் ஒன்றை, நேரடியாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார். அந்த மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது: “மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி முதலமைச்சர், தமிழ்நாடு, இந்தியா. அன்புடன் அண்ணா, ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு துயர் துடைக்க உங்களால் உங்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி மாநாடு சிறப்புடன் நடைபெற என்வாழ்;த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இம்மாநாடு தொடர் நடவடிக்கைகளின் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் சுபீட்சமான சுதந்திரமான வாழ்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்கிறோம். நன்றி புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் பா. நடேசன், பொறுப்பாளர், அரசியற்துறை, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.” எனினும் இதற்கான பதில் எதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அனுப்பி வைக்கவில்லை. இருந்த பொழுதும், மறுநாள் 15ஆம் நாளன்று ஈழத்தமிழர்களுக்காக தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) உறுப்பினராக அங்கம் வகித்து வந்த கனிமொழியால் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டதோடு, கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத்தமிழர்களிடையே நம்பிக்கையையும் தோற்றுவித்திருந்தது. ஒரு கவிஞராகவும், கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவும் ஈழத்தமிழர்களால் அறியப்பட்ட கனிமொழியின் பதவி விலகல் அறிவிப்பு கருணாநிதி மீதான ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் 16ஆம் நாளன்று, நேரடியாகவும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அந்தரங்க வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது: “அன்பின் சகோதரி கனிமொழிக்கு, ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு இந்த மக்களின் துயர் துடைக்கும் நோக்குடன் உங்கள் இராஐசபா அங்கத்தினர் பதவியைத்துறந்து முன்மாதிரியாக நடந்துகொண்டமை முழுத்தமிழ் மக்களையும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது. இதற்காக நான் எமது இயக்கத்தின் நன்றியினையும் மக்களின் நன்றியினையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் பா.நடேசன், பொறுப்பாளர், அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.” எனினும் இதற்குப் பின்னரான இரண்டு வார காலப்பகுதியில் கருணாநிதி பிரகடனம் செய்த கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு செயல்வடிவம் பெறவேயில்லை. இதேபோன்று தனது தந்தையிடம் கையளித்த பதவி விலகல் கடிதத்தையும் கனிமொழி மீளப்பெற்று தனது ஆசனத்தைப் பாதுகாத்துக் கொண்டார். கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் ‘தமிழ்ப்பற்று’ மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு ஒரு நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிப் போக, தமது பதவியைப் பாதுகாப்பதற்காக இந்திய மத்திய அரசின் கூட்டுச்சதிக்கு திரைமறைவில் கருணாநிதி உடந்தையாக நிற்பது பட்டவர்த்தனமாகத் தொடங்கியிருந்தது. இருந்த பொழுதும் தமது நம்பிக்கையை ஈழத்தமிழினம் தளரவிடவில்லை. இதன் வெளிப்பாடாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 31.10.2008 அன்று தமிழீழ தேசிய போரெழுச்சிக் குழுவின் செயலாளர் சே.முகுந்தன் அவர்களால் சுப.வீரபாண்டியன் ஊடாக கருணாநிதிக்கான மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கைகளையும் கருணாநிதி எடுக்காத நிலையில் 02.12.2008 அன்று கருணாநிதிக்கான மற்றுமொரு மனுவொன்று வன்னியிலிருந்து தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் க.ஆதித்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படியொன்று மீண்டும் 07.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் கருணாநிதியின் நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்த பொழுதும் கருணாநிதியின் மனம் நெகிழவேயில்லை. 02.01.2009 அன்று கிளிநொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் உரையாற்றிய கருணாநிதியின் புதல்வி கனிமொழி, “கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த செய்தி கிடைத்த பின்னர் இனியும் தமிழினம் பொறுமை காக்க முடியாது” என்ற தொனியில் உரையாற்றியிருந்தார். அவரது உரை இவ்வாறு அமைந்திருந்ததே தவிர அவரது செயல் சிங்கள-இந்திய கூட்டுச்சதியை ஆமோதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புதுடில்லியில் காங்கிரஸ் ஆட்சிபீடத்தின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் செய்கைகள் அமைந்திருந்தன. 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை நசுக்குவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார். இதேநேரத்தில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தொடர்பான ஐயம் வல்லாதிக்க சக்திகளிடையே வலுவடைந்திருந்தது. யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அதுவரை கருத்து வெளியிட்டு வந்த வல்லாதிக்க சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடத் தொடங்கியிருந்தன. கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் ஆமோதிப்புடன் 2009 பெப்ரவரி மாதத்தின் முதல் நாட்களில் வல்லாதிக்க சக்திகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு-சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் பா.சிதம்பரம் வலியுறுத்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடுக்கி விடப்படுவதை பிரணாப் முக்கர்ஜீ வலியுறுத்தியிருந்தார். இதற்கு எவ்விதமான ஆட்சேபனையையும் வெளியிடாது ஊடகங்களில் அமைதி காத்த கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தி தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார். இம்முறை கருணாநிதியினதும், பா.சிதம்பரத்தினதும் பின்கதவுத் தொடர்பாளர் வகிபாகத்தை வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் வகித்திருந்தார். இது தொடர்பாக 12.02.2009 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான செய்தி ஒன்று ஜெகத் கஸ்பார் அடிகளாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நேரம் 4:45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்துமாறு கோரி அன்று மாலை பா.நடேசன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஜெகத் கஸ்பார் அனுப்பிய மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது: “அன்புள்ள திரு.நடேசன், தொடர்பு விபரங்களை உள்ளடக்கிய மடல் எமது நேரம் பி.ப 4:45 இற்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உறுதிப்படுத்தவும். ஜெகத்” எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். அதேநேரத்தில் வன்னி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் பரப்பளவு சுருங்கத் தொடங்க, சிங்களப் படைகளின் அரக்கத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு கௌரவமான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நேரடித் தொடர்புகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பேணுவதற்கு ஏதுவாக, 02.03.2009 அன்று மின்னஞ்சல் ஒன்றை கனிமொழி அனுப்பியிருந்தார். ஏக காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தும் அழுத்தங்கள் தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக கருணாநிதியால் பிரயோகிக்கப்பட்டன. இந்நிலையில் ஆனந்தபுரம் சமர் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் 29.03.2009 அன்று காலையும், மதியமும் கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அவசர செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தம்மால் வாசிக்க முடியவில்லை என்று கனிமொழி பதிலளித்ததை அடுத்து மீண்டும் அதே செய்தியை மறுநாள் 30.03.2009 அன்று காலை கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுப்பி வைத்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “அன்புடன் சகோதரி கனிமொழிக்கு, தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன். நன்றி, என்றும் உங்கள் அன்பான, சகோதரன் பா.நடேசன்” மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பா.நடேசன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த செய்திக்கு கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ உடனடியாக எந்தவொரு பதிலையும் அனுப்பவில்லை. ஆனந்தபுரம் முற்றுகையில் தமிழீழ தேசியத் தலைவர் சிக்கியிருப்பதாக இந்திய அரசுக்கு சிங்கள அரசு செய்தியொன்றை அனுப்பியிருந்த நிலையில், பா.நடேசனின் கடிதத்திற்கு பதிலளிக்காது கனிமொழியும், கருணாநிதியும் அமைதி காத்தனர். இந்நிலையில் வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா போன்றோரும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தமது உயிரை வேலியாக்கி நிகழ்த்திய எதிர்த்தாக்குதல்களில் சிங்களப் படைகளின் ஆனந்தபுரம் பெட்டி முற்றுகை உடைக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் நகர்த்தப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவரை உயிருடன் சிறைப்பிடிப்பதற்கு சிங்கள-இந்திய அரசுகள் எடுத்த முயற்சி மாவீரர்களின் வீரம்செறிந்த தாக்குதல்களாலும், தற்கொடையாலும் சிதறடிக்கப்பட்டது. 05.04.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மறுநாள் 06.04.2009 நாளன்று புலம்பெயர் தேசங்கள் தோறும் கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். இந்நிலையில், சிங்கள-இந்திய அரசுகளின் கனவு பலிக்காத சூழலில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கருணாநிதியின் புதல்வி கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது: “நடேசன் அண்ணன், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களை பின்பற்றாதீர்கள். கனிமொழி.” எனினும் கனிமொழியின் இந்த மடலுக்கான தமது ஆட்சேபனை கருணாநிதியின் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று பிற்பகல் மீண்டுமொரு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தி கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு பிறிதொரு மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மடலின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது. “நடேசன் அண்ணன், அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள். நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும். கனிமொழி.” ஒருபுறம் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதில் கருணாநிதி குறியாக இருந்ததை அவரது புதல்வியின் மடல் வெளிப்படுத்தியதோடு, முத்தமிழ் அறிஞரின் வாரிசு என்று பெயர்போன அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள் இன்னொரு செய்தியையும் உணர்த்தியிருந்தது. அதாவது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு கனிமொழி அனுப்பிய இரண்டு கடிதங்களின் படிகள், இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமையே அந்த செய்தியாகும். இவ்வாறாக வன்னிப் போரின் உச்சகட்டத்தில் கருணாநிதியின் மறுமுகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே எவ்விதமான ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாகியிருந்தது. தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து அழிப்பதில் குறியாக இருந்த கருணாநிதி, அதற்காக ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர்களை சிங்களம் காவுகொள்வதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளவில்லை. 26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர்நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த பொழுதும்கூட, இதுவிடயத்தில் சிங்கள அரசைப் போர்நிறுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகள் எவற்றிலும் இந்திய அரசு ஈடுபடவேயில்லை. இதற்கான அழுத்தங்கள் எதனையும் கருணாநிதியும் பிரயோகிக்கவில்லை. அதேநேரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கத் தொடங்க, தமிழகத்தில் மீண்டும் தளிர்விட்ட மக்களின் கொந்தளிப்பை தணிக்கும் நோக்கத்துடன் மறுநாள் 27.04.2009 அன்று சென்னையில் கருணாநிதியால் உண்ணாநோன்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலையில் உண்ணாநோன்பை தொடங்கிய கருணாநிதி, தனது முயற்சியால் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அன்று மதியத்திற்குள் பழரசம் அருந்தித் தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அதே நாளில் வன்னியில் நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. கருணாநிதியை நம்பியிருந்த வன்னி மக்களுக்கு சாவையே பரிசாக கருணாநிதி வழங்கினார். கருணாநிதியின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஈழத்தமிழினமே பலிக்கடா ஆக்கப்பட்டது. இது பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு எழுதப்பட்ட மின்மடலில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையை சேர்ந்த வி.தேவதாசன் என்ற ஊடகவியலாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “தோழர் நடேசன் அவர்களுக்கு, வணக்கம் சென்னையிலிருந்து தினமணி செய்தியாளர் தேவதாசன் எழுதுவது. போரை நிறுத்த இலங்கை அரசின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, சென்னையில் தனது உண்ணாவிரதத்தை 6 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் கருணாநிதி முடித்துக் கொண்டுள்ளார். கருணாநிதி கூறுவது உண்மையா? தயவுசெய்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள். அன்புடன் வி.தேவதாசன்.” தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக கருணாநிதி ஆடிய உண்ணாநோன்பு நாடகத்தின் உண்மைத்தன்மையை தமிழக மக்களில் ஒருதரப்பினர் நன்கு புரிந்து கொண்டிருந்ததையே தினமணி செய்தியாளரின் கடிதம் வெளிப்படுத்தியிருந்தது. “தமிழினத்தின் காவலன், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன், முத்தமிழ் வித்தகர்!” என்றெல்லாம் முகமகன் கூறப்படும் தந்திரி கருணாநிதியின் மறுமுகத்தை உலகத் தமிழனம் புரிந்து கொள்வதற்கு சிறிதளவாவது இக்கட்டுரை உதவிபுரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. கருணாநிதியைப் போன்று தமிழீழ தேசத்திற்கு துரோகமிழைத்த தந்திரிகளின் மறுமுகம் இனிவரும் தொடர் கட்டுரைகளில் அவர்கள் எழுதிய கடிதங்களுடன் ஆதாரபூர்வமாக வெளிக்கொணரப்படும்! நன்றி: ஈழமுரசு (08.04.2011 நன்றி பதிவு இணைய தளம். |
திங்கள், 18 ஏப்ரல், 2011
ஈழப் போரில் கருணா குடும்பத்தின் சாட்சியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக