வரலாறு ஒரு பெரும் புயல். அதில் நிலை கொள்ள வேண்டிய வேரும் வலிமையும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை.தமிழ்த் தேசத்தின் விடுதலை வரலாற்றில் அழுந்தப் பதிந்து ஆளுமைகள் இரண்டென்போம் தலைவர் தமிழரசன், பாவலரேறு ஆகியோரே அவர்கள்.
தமிழ்த் தேசத்தின் ஒழுங்கு பிறழாத் தலைமகன் பாவலரேறு அடிமுதல் முடிவரை இனிக்கின்ற தமிழ்த் தேசச் செங்கரும்பு அவரின் வாழ்வு. ஐயாவைக் கொண்டாடுதல் என்பது அவரின் சீரிய வாழ்க்கையைக் கொண்டாடுவதே. அவரின் வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்பது அவரின் தமிழ்த்தேச விடுதலை அரசியலைக் கொண்டாடுதலே. அதனினும் மேலாக அப்பாவலரேறுவின் கருத்தோட்டத்øத், விடுதலை உரத்தை அறிவின் சாளரம் வழியே எவ்வாறு அணுகப் போகிறோம் எனும் கேள்விக்கான விடை தேடுதலே அப்பாவலரேறுவை "ஞாயமாகக் கொண்டாடுதல்' என்று கருதுகிறோம். பாவலரேறு தமிழ்த் தேசத்தின் விடுதலைக் களத்தில் முன்களை அடையாளமாய் வீற்றிருக்க ஞாயங்கள் பல உண்டு. பானைச் சோற்றிற்கு பதமாகச் சிலவற்றை நோக்கின் நம் அறிவின் நரம்புகள் சட்டெனப் புடைக்கின்றன.
ஆழ்ந்த தமிழ்த்தேச உணர்தல், களங்கள் மாறினாலும் இலக்கு மறவாத விடுதலை வேட்கை, எல்லாப் பாதையும் ரோம் நகரம் நோக்கியே என்பதுபோல் தேச விடுதலையை நேரடி நிகழ்ச்சி நிரலில் வைத்த தெளிவு, எப்போதும், எவ்விடத்தும் தமிழக விடுதலை அரசியலை அதன் கனப்பு குறையாது ஏந்தி நடந்த துணிவு, அதற்காக எவர் முன்னும் மண்டியிடா மாண்பு, சாதிய நச்சை அடிநெஞ்சிலிருந்து வெறுத்த இயல்பு, "தமிழ்' என்பதை வேளாள மேட்டிமையிலிருந்து விலக்கியுணர்ந்த அறிவு என பாவலரேறுவின் தனித்தன்மைகள் நீண்ட பட்டியலாய் விரிகின்றன.
தமிழகத்தின் விடுதலை வரலாற்றில் அழியாக் கல்லெழுத்தில் பதிக்க வேண்டிய தமிழக விடுதலை மாநாடுகள் மூன்று நிகழ்ச்சியிலும் மதுரையிலும் ஐயாவால் முன்னெடுக்கப்பட்டு, காவல் துறையால் தடுக்கப்பட்டு சிறைவாழ்வு ஐயாவை அணைத்துக் கொண்டது. ஏறத்தாழ 18 முறை சிறைவயப்பட்ட பாவலரேறு வின் காலம் முழுக்க அவரின் தென்மொழிப் பாசறையில் அரச ஒடுக்குமுறையின் பூட்ஸ் கால்களின் தடதட ஓசை ஒருநாளும் ஓய்ந்ததில்லை.
எஸ்.வி.இராசதுரை குறிப்பிடுவது போல ஒடுக்குமுறையை எதிர் கொள்வதில் எப்போதும் "தோழர் பெருஞ்சித்திரனார்' அச்சமோ சலிப்போ கொண்டதில்லை. 1965ன் கொந்தளிப்பான மொழிப்போர் தொடங்கி தடாச்சட்ட பயங்கரவாதம் வரை அவர் அடக்குமுறைக் காட்டாற்றை நெஞ்சு நிமிர்ந்து எதிர் கொண்டதில் பாவலரேறுவின் துணிவு தமிழரின் அறம் சார்ந்த விழுமியமாய் விரிகிறது.
தமிழக விடுதலை அரசியலின் ஞாயப்பாட்டை வலியுறுத்த தன் வாழ்வை அவர் பரிசளித்தார் எனச் சொன்னால் அது துளியும் மிகையில்லை. முன்புதையுண்ட எம் முத்தமிழ்ச் சிறப்பை மன்பதைக்குணர்த்தல் எம் மண்ணுயிர் வாழ்க்கை என உரத்துச் சொன்ன பாவலரேறுவின் அரசியலைப் பகுத்துப் பார்ததால் பின்வருவன நம் ஆழ்ந்த கவனத்தை ஈர்க்கின்றன.
கொண்ட கொள்கைக்கு குந்தகம் நேராது உள்ளார்ந்த வேட்கையுடன் அவர் அமைத்துக் கொண்ட பாதையில் எவருக்கும் இடமுண்டு. தமிழுக்கு தமிழர்க்கு தமிழ் நிலத்திற்கு ஆக்கம் தேடுவோர் எவரினும் இருகை நீட்டி வரவேற்க, அணைக்க அவர் தவறியதில்லை. உமி மலையில் ஓரரசி கண்டாலும் உவந்து போற்றும் அவரின் உள்ளம் அப்படித்தான் தலைவர் தமிழரசனை அணைத்துக் கொண்டது. தீயாய் கிளம்பிய தமிழரசனின் போர்க் குணமும் தமிழ்த்தேசிய விடுதலைச் சீற்றத்தின் பெரு வெடிப்பாய்க் கிளர்ந்த பாவலரேறுவின் உணர்ச்சியும் தமிழக விடுதலை எனும் ஒற்றைப் புள்ளியில் குவிந்துவிட அவ்விருவரின் நட்பும் தோழமையும் தமிழக விடுதலை அரசியலின் எழிலார்ந்த ஓவியமாய் விரிகின்றன.
கொண்ட அரசியலில் நெஞ்சிலேந்தி களம் செல்வதில் எந்நாளும் விரிசல் விழாத விருப்புறுதி, அரச ஒடுக்குமுறையை எதிர் கொள்வதில் மேற்கண்ட இருவர்க்கும் இருந்த ஒப்பீடில்லாத ஒற்றுமை ஆகிய இரண்டும் வாளும் கேடயமுமாக அவர்கட்கு அமைந்தன. ஆயினும், ஒரே அச்சில் வார்க்கப்பட்ட இரு பொம்மைகள் என்பதாய் பொத்தாம் பொதுவாக இருவரையும் வகைப்படுத்த முடியாதுதான். குழலும் யாழும் தனித்தனியானவை. ஒப்பிட முடியாதவை. ஆயினும் இசைப் பெரு வெள்ளத்தில் இரண்டறக் கலக்கும்போது சூழலும் யாழும் ஒன்றே.
தமிழகம் அடிமைப்பட்டதை வரலாற்றுத் துயராய்ப் பார்த்த பாவலரேறுவும் உலக ஒப்புரவுப் புரட்சியின் துண்டிக்கப்படாத கண்ணியாய் தமிழக விடுதலை அரசியலைப் பார்த்த தலைவர் தமிழரசனும் ஒன்றுபட்ட புள்ளியில், தமிழக விடுதலையில் அவ்விருவரின் கூட்டு உடைக்கவொண்ணாதது ஐயத்திற்கப்பாற்பட்டது.
நீட்டுகின்ற வெடிக்குழல்தான் தமிழ்நாட்டின் விடுதலைக்கு வேண்டுமென்றால் அதற்கு பாவலரேறு தடையில்லை என்பது தலைவர் தமிழரசனுக்குப் போதும் "தமிழ்நாடு விடுதலை' என்ற இரு சொற்கள் ஏற்றுக் கொண்டவர் தமிழரசன் எனும் செய்தி பாவலரேறுவிற்குப் போதும். ஆகவே, நெருப்பும் தீயும் ஒன்றேயாயின.
தமிழறிஞர் என்றால் தயிர்ச் சோறும் ஊறுகாயமாய் பார்க்கப்பட்ட காலத்தில் கறியின்றி சோறிறங்காது. நம் ஐயாவுக்கு என்பது எவ்வளவு பெரிய அரசியல் செய்தி?
மீனாட்சிபுர மக்களின் மதமாற்றத்தை ஆழ்ந்த சாதியொழிப்புச் சிந்தனை வேரோடிய சொற்களின் பாவலரேறு கொண்டாடியதை என் சொல்ல? அரசியல் களத்தில் விடுதலை அரசியலின் வன்மையை மொழித் தளத்தில் ஏந்தியிருந்த பாவணரை முன்னிறுத்த பாவலரேறுவின் உள்ளம் வேறெந்த தமிழறிஞர்க்கும் வாய்க்கவில்லை என்பதை மறுக்க முடியுமா?
பெரியாரின் மீதான பற்று சற்றே நீண்டு கருணாநிதி வரைக்கும் ஐயாவைப் பீடித்திருந்தாலும் கருணாநிதி யையும் தமிழக விடுதலை அரசியற் களத்திற்கு அழைத்த துணிவும் உணர்வும் பாவலரேறுவிற்கே உரித்தானவை.
இந்துமதத்தை விட்டொழித்து வெளியேற தமிழக மக்களுக்கு அவர் விட்ட அறைகூவலும், இந்திராவின் சாம்பல் அரசியலை எதிர்த்து வழக்காடிய நகர்வும், ராசீவ் காந்தியை சுக்கு நூறாகச் சிதறிப் போக இயற்றிய அறச்சாவமும், இந்த உலகையே பரிசித்தாலும் உனது புகழுக்கு ஈடாகாது என "தனுவை'க் கொண்டாடிய திமிரும்.
பெரியாரின் இறுதிக் காலத்தில் அவரின் பிரிவினை குறித்த தடுமாற்றப் பேச்சில் மனம் சோர்ந்து பெரியாருக்கே விளக்கம் சொல்ல "பெரியாரும் பிரிவினையும்' எனும் தலைப்பில் பாவலரேறு எழுதிய தென்மொழி எழுத்துக்களும் என சிதறல் சிதறலாய்ப் பார்த்தாலும் பாவலரேறு எவரும் அணுக முடியாத புகழின் சிகரத்தில் வீற்றிருப்பதை உணர முடிகிறது.
வெள்ளாளக் கோவணமெனக் கட்டிய அறிவார்ந்த கருத்தாளர்கள் இந்தியாவின் கால் நக்கி நா மரத்துக் கிடக்கிறார்கள். இந்தியாவின் புதை மேட்டில் முளைக்கும் முதல், இரண்டாம் பூக்களாய் ஈழமும் தமிழ்த் தேசமும் நம் முன் ஒளிவிடுகிறது.
இன்னமும் நமக்கு உரமேற்ற பாவலரேறுவின் வீறார்ந்த பாடல்கள் நம் வழிநெடுக வரவேற்கின்றன. அதோ நாளைய விடுதலைத் தமிழகமும், தமிழீழமும் ஐயாவின் முன் படையலாய் விரிகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக