வெள்ளி, 8 ஜூலை, 2011

பாலாவின் படங்கள் குறித்த எச்சரிக்கை!


பாலா - தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கும் இயக்குநர்களில் ஒருவர். சேது (1999) படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) என்று மொத்தம் 5 படங்களை இயக்கியுள்ளார். இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் பாலா எனலாம். தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என்று இவரது படங்கள் ஏதாவது சில விருதுகளை வெல்வது வழக்கம். பொதுவாகவே, இவரது படங்களைப் பற்றிச் சொல்கிற போதெல்லாம், “கதையை வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறார்” என்பதே பலரது விமர்சனம் கலந்த பாராட்டாகும். உண்மைதான். பாலு மகேந்திராவின் பாசறையில் பயின்ற இவர், சினிமாவின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தன் படங்களை வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், வித்தியாசமாக எதைச் சொன்னார், என்ன கருத்தை முன்வைத்தார் என்பது ஆய்வுக்குரியது. இவருடைய படங்களுக்குக் கிடைத்த விருதுகளெல்லாம் அவரது படங்களுக்கான அக்மார்க் முத்திரைகளல்ல என்பதை மனதில் கொண்டு, இவரது படங்கள் தாங்கிய உள்ளடக்கம் குறித்த ஓர் அலசலே இந்தக் கட்டுரையின் பார்வை.  
புன்னகைத்த மனுதர்மம் 
bala_370பார்ப்பனப் பெண்ணுடன் நான்காம் வர்ணத்தவன் உறவுகொண்டால் என்ன தண்டனை என்பதை மனுதர்ம சாத்திரம் பட்டியலிடுகிறது. அதை நினைவூட்டிய படம்தான் சேது. அப்படி ஒரு ‘அசம்பாவிதம்’ நடந்துவிடாமல் இருக்க, பாலா முன்னெச்சரிக்கையுடன் குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களுக்குத் தண்டனை வழங்கிய படம் அது. காதலித்த பார்ப்பனப் பெண்ணுடன் இணையும்முன், கதாநாயகனை இயக்குநர் மனநோயாளி ஆக்கிவிடுகிறார். கதாநாயகி அபி, தனது நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு முன்பாக இறந்துவிடுகிறாள்.  அது இயற்கையான சாவா, தற்கொலையா என்பது புரியவில்லை. அவளது இறப்பைக் கண்ட அதிர்ச்சியில் இரண்டாம் முறையாக சேது மனநோயாளி ஆகிவிடுறான்.
எப்படி இருப்பினும், சாதியக் கட்டமைப்பிற்கு எதிரான காதலையும் திருமணத்தையும் தனது வித்தியாசமான கதை சொல்லும் பாணியில் தவிடுபொடியாக்கிவிடுகிறார் இயக்குநர். படத்தின் முடிவில் ஏற்படுகின்ற இயலாமை, ஆற்றாமை ஏற்படுத்திய சோகம் சாதாரணமானது அல்ல. இந்த உணர்ச்சிவயமாக்கல் தளம்தான் படம் ஏற்படுத்திய தாக்கத்தின் முக்கிய அம்சமாகும். யாரையும் எதையும் கேள்விக்கு உட்படுத்த முடியாமல் படம் முடிகிறது. சாதி மறுப்புக் காதல், சாதி எதிர்ப்புத் திருமணம் ஆகியவற்றை கதையின் உள்ளடக்கமாகக் கொண்ட மசாலா திரைப்படங்கள்கூட, போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. ஆனால், அப்படி எல்லாம் போராடி வெல்ல முடியாது, விபரீத விளைவுகளே மிஞ்சும் என்று எச்சரித்த படம்தான் சேது. நிச்சயமாக, மனுதர்மம் புன்னகை புரிந்து, பாலாவை உச்சிமோந்து பாராட்டியிருக்கும். ‘சீயான்’ என்ற புதிய சொல் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்ததுதான் மிச்சம். 
இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறபோதெல்லாம், “இது உண்மைச் சம்பவம்..... நடந்ததை அப்படியே சொல்கிறோம்.... என்னுடைய நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம் இது.... பத்திரிகையில் நீங்கள் வாசிக்கவில்லையா?.... எதாத்தத்தை நாங்கள் அப்படியே பிரதிபலிக்கிறோம்.....” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள் பாலா வகையறா இயக்குநர்கள். நடந்ததை அப்படியே சொல்வதின் வழியாக ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கம் பரப்பப்படுகிறது என்தைவிட, வலுவூட்டப்படுகிறது என்பதே உண்மை. ஓர் ஆதிக்கக் கருத்தாக்கத்தை வலுவூட்டுவது என்பது ஒரு படைப்பாளியின் சமூக அக்கறையை கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமின்றி, அந்தக் கருத்தாக்கத்திற்கு அவர் உடன்படுகிறாரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. ‘டாக்குமென்டரி’ எனப்படும் விவரணப்படப் படைப்பாளிகள்கூட நடந்ததை அப்படியேதான் பல சமயங்களில் பதிவுசெய்கிறார்கள். ஆனால், யாருடைய கோணத்தில் பதிவுசெய்கிறார்கள் என்பதே முக்கியம். விவரணப்படங்களுக்கு இல்லாத ஒரு கூடுதல் சிறப்பம்சம் கதைப்படங்களுக்கு உண்டு. அதுதான் கற்பனை என்ற சுதந்திரம். இந்த கற்பனைத் தளத்தை உண்மைச் சம்பவங்களோடு உரசுகிற போது, ஒரு படைப்பாளியின் சமூக மாற்றத்திற்கான அக்கறை வெளிப்பட்டுவிடும். 
கதைக் களமும் ஊறுகாயும்  
இயக்குநர் பாலா தமிழ் உணர்வாளர்; ஈழத் தமிழர்மீது அக்கறை கொண்டவர் என்ற கருத்து பரவலுக்கிடையே வெளிவந்த படம் நந்தா (2001). ராமேஸ்வரம் பகுதியில் புலம்பெயர்ந்த (அகதி) தமிழர்கள் பிரச்சனையைக் கையாண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. உண்மையில் நடந்தது என்ன? புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரச்சனை என்பது கதைக் களத்தின் ஒரு சூழலாக மட்டுமே கையாளப்பட்டது. அது உள்ளடக்கத்தின் மையப் பிரச்சனையனல்ல. அதிலும்கூட, அகதிகள் (Refugees) எனப்படும் புலம் பெயர்ந்த மக்களுக்கும், தாயகம் திரும்பிய மக்களுக்கும் (Repatriates) உள்ள வேறுபாட்டை இயக்குநர் புரிந்துகொள்ளவில்லை என்பதை பெரியவர் (ராஜ்கிரண்) வாயிலிருந்து வெளிப்படும் ஒரு வசனம் காட்டிக்கொடுத்து விடுகிறது. நல்ல மனம்தான் கொண்ட தாதா - அவருக்கு விசுவாமுள்ள ஓர் அடியாள் - தாயின் அன்புக்காக ஏங்கும் மகன்- இவற்றில் ஏற்படும் உறவுச் சிக்கல்தான் கதையின் மையப் புள்ளி. இதுபோன்ற கதை தமிழ்சினிமாவுக்குப் புதிதல்ல என்பது நமக்குத் தெரியும். என்ன செய்வது, பாலா ‘வித்தியாசமாக’ச் சொல்லியிருக்கிறாரே!  
சமீப காலமாகவே, நம்முடைய தமிழ்சினிமாவில் வரும் கதாநாயகிகளின் நிலைமை பரிதாபமானது. கதாநாயகன் பொறுக்கியாக, பொறம்போக்காக, ரவுடியாக, தாதாவாக இருந்தாலும், அவனை அவர்கள் காதலித்துத் தொலைக்க வேண்டும். இதே நிலைமையை ஈழத்தமிழ்ப் பெண்ணுக்கும் இந்தப் படத்தில் ஏற்படுத்தியிருப்பார் பாலா. கதாநாயகி கல்யாணி, ரவுடி நந்தாவைக் காதலிக்கிறார். இந்தியத் தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும், ஈழத் தமிழ்ப்பெண்ணாக இருந்தாலும், மலேசியத் தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இதுதான் விதி. சரி, போய்த் தொலையட்டும், அப்படியாவது அந்த ஈழத் தமிழ்ப்பெண்ணை பாலா வாழ வைத்தாரா? அதுவும் இல்லை. அவர்களது காதலுக்கு குறுக்கே வருவது கதாநாயகனின் அம்மா. அதாவது, பெற்ற மகனையே நஞ்சு வைத்து கொன்றுவிடுகிறார் தாய். சேது படத்தில் கதாநாயகியை சாக வைத்து, கதாநாயகனை மனநோயாளிக்கினார். நந்தாவில் கதாநாயகனைக் கொன்று, ஈழத் தமிழ்ப்பெண்ணுக்கு காதல் தோல்வியைப் பரிசளிக்கிறார்.
 சேது திரைப்படத்தின் உள்ளடக்கத்தில் சாதியப் பிரச்சனை இருப்பதால், காதல் தோல்வியைப் புரிந்துகொள்ளலாம். நந்தாவில் காதல் தோல்விக்குக் காரணம் என்ன? இந்தியா - இலங்கை எல்லைப் பிரச்சனையா? இயக்குநருக்கு, ஈழத் தமிழர்கள்மீது அக்கறை இருக்குமானால், அவர்கள் பிரச்சனையை உள்ளடக்கமாகக் கொண்டு கதையைக் கையாளலாமே! கதைக்கான சூழலாக அகதி முகாமையும், ஊறுகாயாக ஈழத் தமிழ்ப்பெண்ணையும் கையாள வேண்டிய அவசியம் என்ன?  
அரிச்சந்திர புராணம் 
வெட்டியான் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த படம் பிதாமகன் (2003). ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் என்று பரபரப்பாகச் சொல்லப்பட்டது. இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்த விக்ரம் தேசிய விருது பெற்றார். “ஒதுக்கப்பட்ட வெட்டியான் பாத்திரத்திற்கு விருது கிடைத்ததில் சந்தோஷம்” என்று நடிகர் விக்ரம் ஒரு பத்திரிகையின் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கதாப்பாத்திரத்தின் சித்தரிப்பு நம் கவனத்திற்கு உரியது. சித்தன் எனப்படும் வெட்டியான் கதாப்பாத்திரம் செயற்கையான தோற்றத்துடன், “மனித மிருகமாக” சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கதாப்பாத்திரத்தைப் பார்த்தால் வெட்டியான் சமூகத்தின்மீது என்ன உணர்வு ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் சினிமாவில் வெட்டியான் கதாப்பாத்திரம் துண்டு, துக்கடாவாகவும், நகைச்சுவைக் கதாப்பாத்திரமாகவுமே பெரும்பாலும் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இந்த வழக்கத்திற்கு மாறாக, வெட்டியான் (சித்தன்) கதாப்பத்திரத்தை முழுநீளப் பாத்திரமாகக் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால், “சித்தன் பிறப்பால் வெட்டியான் அல்ல, வளர்ப்பால் வெட்டியான்” என்ற பொருள்பட கஞ்சா விற்கும் கோமதி குறிப்பிடுவதை நாம் கவனத்தின் எடுத்துக்கொள்ள வேண்டும். சித்தனின் தாய் அவனை மயானத்தில் பெற்றெடுத்து இறந்து விடுகிறாள். அவன் அங்கேயே அநாதையாக வளர்கிறான் என்ற காட்சியும் இந்த வசனத்தை உறுதிப்படுத்துகிறது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. சாதிய ரீதியான தீண்டாமையை அனுபவிக்கும் வெட்டியானை இயக்குநர் கையாளவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெட்டியானாக மாற்றப்பட்ட சித்தனைச் சித்தரிக்கிறார் இயக்குநர். இதுதான் தமிழ் சினிமாவிற்கே உரித்தான கோழைத்தனம். எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரனில் தொடங்கி பிதாமகன் வரை இதுபோன்ற நிறைய நழுவல்களைப் பார்க்கலாம். ஆதியிலிருந்து வெட்டியானாக இருப்பவரை கண்டுகொள்ளாத சமூகம், சூழ்நிலையின் காரணமாக பாதியில் வெட்டியானக மாறிய அரிச்சந்திரனுக்காகக் கண்ணீர் வடிக்கத் தவறுவதில்லை. அரிச்சந்திர புராணத்தைச் சுவாசித்தவர்கள் சித்தன் புராணத்தையும் சுவாசிப்பார்கள் என்பது இயக்குநர் பாலாவுக்குத் தெரியாதா, என்ன? 
சித்தனைக் காதலிக்கிறாள் கோமதி. அவனது நண்பனாக வரும் தில்லு முல்லுப் பேர்வழி சக்தியும் மஞ்சுவும் காதலர்கள். சரி, இவர்களது காதல் எல்லாம் என்னவாயிற்று? பாலாவின் முந்தைய படங்களில் காதல் என்ன நிலைக்கு ஆளானாதோ, ஏறக்குறைய அதே நிலைமைதான்! காதலர் தினத்தையும் காதலையும் எதிர்க்கும் சிவசேனா, பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளால் பாலாவைப் பாராட்டமால் இருக்க முடியாது.  
மனிதக் கறியின் மகத்துவம் 
தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகள் தமிழில் இருந்தால், அவற்றிற்கு ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு வைக்கும் வழக்கம் அவ்வப்போது உண்டு. பாலா வித்தியாசமான இயக்குநராயிற்றே, அவரது நான் கடவுள் (2009) படத்திற்கு “அஹம் ப்ரம்மாஸ்மி” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பு வைந்திருந்தார். கதை வசனம் எழுத்தாளர் ஜெயமோகன். நந்தாவை ராமேஸ்வரத்தில் தொடங்கினார். நான் கடவுளை காசியிலிருந்து தொடங்கினார். அமெரிக்காவில் படித்துவிட்டு ஊர் திரும்பும் கதாநாயகன் மாதிரி, காசியிலிருந்து ஊர் திரும்பும் அகோரி சாமியார்தான் கதாநாயகன். இந்தப் படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தை அருமையாகக் காட்டியிருக்கிறார் பாலா என்கிறார்கள். சித்தரிப்பு எல்லாம் சரி, சொல்ல வருகிற செய்தி என்ன?  
naan_kadavul_360வழக்கமாக பாலாவின் படத்தில் ‘பஞ்ச் டயலாக்’ இருக்காது. இந்தப் படத்தில் ஒரு ‘பஞ்ச் டயலாக்’: “வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம், வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்.” படத்தின் உள்ளடக்கச் செய்தியும் இதுதான். பிச்சைக்காரர்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சமூக விரோதக் கும்பலை ஒழிப்பதற்கும் வலுவற்றவர்களை கருணைக் கொலை செய்வதற்கும்தான் இந்த ‘பஞ்ச் டயலாக்’.
வாழ முடியாதவர்கள் என்று இவர் அடையாளப்படுத்துவது யாரை என்று பார்த்தால், பார்வையற்ற பிச்சைக்காரி. பார்வையற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கும் காலக்கட்டம் இது. அவர்கள் பிச்சை எடுக்கும் காரணத்திற்காக, அவர்களை வாழ முடியாதவர்கள் என்று வகைப்படுத்துவது ஆதிக்க மனநிலையின் ஆணவத் திமிர். இந்த ‘பஞ்ச் டயலாக்’ வைக்கின்ற கோட்பாட்டின்படி, வாழ முடியாதவர்களையும் வாழக் கூடாதவர்களையும் கழித்து விட்டால், எஞ்சியிருப்பவர்கள் யார்? “தகுதி” உள்ளவர்கள்தான் வாழவேண்டும் என்ற சிந்தனை அல்லவா எழுகிறது! இது ஒரு வகையில் இனவெறி அல்லவா! இந்தத் தண்டனையைப் பரிந்துரைத்து நிறைவேற்றுவது நீதிமன்றம் அல்ல; காசியில் இருந்து புறப்பட்டு வந்த அகோரி ருத்ரன் என்ற மனுதர்ம நீதிபதி. அகோரிகள் நர மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அகோரி ருத்ரன் வேறு யாருமல்ல, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட இந்தியன் தாத்தா, அந்நியன் அம்பி வகையைச் சார்ந்தவன்.
இந்த 21ஆம் நூற்றாண்டில் மனித இறைச்சியை உண்ணும் அகோரியை கதாநாயகனாகச் சித்தரித்தது பாலாவின் சாதனை எனலாம். ஆக, நாட்டில் நடக்கும் அநீதிகளை ஒழிக்க மனிதக் கறி சாப்பிட அழைக்கிறார் பாலா. எவ்வளவு பெரிய முற்போக்குச் செய்தி! இந்த ‘அசைவ’ப் படத்தை இயக்கிய பாலாவிற்கு சிறந்த இயக்குநர் என்ற தேசிய விருது வேறு கிடைத்திருக்கிறது. நல்ல வேளையாக, இந்தப் படத்தில் அகோரி ருத்ரன் யாரையும் காதலித்துத் தொலைக்கவில்லை. இல்லையென்றால், அந்தக் காதலுக்கு என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது.  
மனுநீதிச் சோழன் 
பாலாவின் இயக்கத்தில் வெளியான சமீபத்திய திரைப்படம் அவன் - இவன். ஆதிக்கச் சாதிகளை “கும்பிடுறேன் சாமி” என்ற மரியாதை செலுத்த வேண்டிய அடக்குமுறைக்கு எதிராக, தம் பிள்ளைகளுக்கு “கும்பிடுறேன் சாமி” என்று சில கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெயர் வைப்பது வழக்கம். இதன் விளைவாக, ஆதிக்கச் சாதிகள் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கும்போது, “கும்பிடுறேன் சாமி” என்று அழைக்க நேரிடுகிறது. அவன்-இவன் திரைப்படத்தில் ஆர்யா நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயரும் இதுதான். இப்பெயருக்கான விளக்கமும் சரியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தரிப்பு எப்படி இருக்கிறது?
திருட்டை அவர்களின் குலத் தொழிலாகக் காட்டுகிறார். இது எந்த அளவிற்கு உண்மை? ஒருவேளை, அதிகம் கவனத்திற்கு வராத ஒரு சிறுபான்மைச் சமூகமாக அது இருந்திருக்கலாம். ஆனாலும், இந்தச் சமூகத்தின்மீது துளியளவும் மரியாதை வராத அளவிற்கு அவர்களது பண்பாட்டைக் கேவலமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். தாழ்த்தப்பட்டவர்கள் விசுவாசமுள்ள அடிமைகளாக இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் கோட்பாட்டை மீறாமல், கும்பிடுறேன் சாமி கதாப்பாத்திரத்தையும், வால்டர் வணங்காமுடி கதாப்பாத்திரத்தையும் படைத்திருக்கிறார் பாலா.  
படத்தின் கதையே கடைசியில்தான் தொடங்குகிறது. “பசுவுக்காக தன் மகனின் உயிரைக் கொடுத்த மனுநீதிச் சோழன்” கதையை வேடிக்கையாக முன்பு வாசித்துக் காண்பித்த பண்ணையார் ஐனஸ், அதை வாழ்ந்து காட்டுகிறார். மாட்டு இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், மிருக வதைக்கு எதிராகவும் குரல்கொடுக்கிறார். தன் செயலை நியாயப்படுத்தி, குர்பானிக்காக ஒட்டகத்தைப் பலிகொடுக்கும் இஸ்லாமியர்களைச் சுட்டிக் காட்டி வில்லன் பதிலடி கொடுக்கிறான். பிறகு, வில்லனால் அவமானப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுச் சாகிறார் ஐனஸ். இப்படியாக, மனுநீதிச் சோழன் கதை - மாட்டு இறைச்சிக்கு எதிரான குரல் - மிருகவதைத் தடைச் சட்டம் - இஸ்லாமிய எதிர்ப்பு - மாடுகளைக் காப்பாற்ற தியாகச் சாவு என்று ஒரு குட்டிக் கதையில் ஏகப்பட்ட இந்துத்துவ முத்துகளை அள்ளித் தெளிக்கிறார் பாலா. இறுதியாக, வாழ்ந்த கெட்ட ஒரு பண்ணையாருக்காக நம்மைக் கண்ணீர் சிந்த அழைக்கிறார்.  சரி, கும்பிடுறேன் சாமி, வால்டர் ஆகியோரின் காதல் என்ன ஆனது? அநேகமாக, தப்பிப் பிழைத்திருக்கும். 
இழையோட்டம் 
வாழ்கை பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம், காதல் பற்றிய எதிர்மறை அணுகுமுறை, விளிம்புநிலை மக்கள் பற்றிய ஒருதலைப்பட்சமான சித்தரிப்பு, அரைவேக்காட்டுத்தனமான சமூகப் பகுப்பாய்வு, மனுதர்மத்தின் மீதான நம்பிக்கை ஆகியவை பாலாவின் படத்தில் காணப்படும் அம்சங்கள். ஓரிரண்டு கடவுள் மறுப்பு வசனங்கள், (சேது, அவன் இவன் திரைப்படங்களில்) பார்ப்பனர்கள்மீதான மென்மையான நையாண்டி போன்றவை இடம்பெற்றாலும், இவற்றை எல்லாம்மீறி அவரது படங்களில் ஒருவிதமான இந்துத்துவ இழையோட்டம் இருப்பதைக் காணமுடிகிறது. அந்த வகையில் பாலா எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய ஓர் இயக்குநர் என்பதில் ஐயமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக