வெள்ளி, 20 மே, 2011

மே 18

இன்று ஈழத்தமிழினத்தின் "கரிநாள்"
காலத்தால் மறக்க முடியாத
கறுப்புத்தினம்!!
முள்ளிவாய்க்கால் மூர்க்கமான
குண்டு மழைக்குள்
வஞ்சகமாக முக்குளித்த
இரண்டாவது குருதி வருடம்!!!.

சொல்லில் வடிக்க முடியாத
சிறுமை கொண்டு
இந்தியாவும் இலங்கையும்
ஈழத்தமிழினத்துக்கு
ஈமைக்கிரியை செய்ய முனைந்த
வெட்கக் கேட்டின்
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

ஈழத்தமிழினத்தின் எதிரில் தோன்றிய
இன்னல் மிகுந்த பெருத்த
கரிய சுவடு.
செறிவான குண்டு மழையால்
நீலவானமும் நிலமும்
நிறம் மாறிய நிமிடங்கள்.

ஈயும் மண்புழுவும் எறும்பும்
இயற்கை தாவரங்களும்
எரிந்துபோன பொட்டல் வெளியில்.
இரசாயன கலவையால்
மானுடம் வதை கொள்ளப்பட்ட
வரலாறு தினம்.

நேற்றுப்போல நினைவில் ,
நெஞ்சு வெந்து
நினைவில் இருந்து விடுபட மறுக்கும்
நிரந்தரமான வலி.

மானுடம் மரணப்படுக்கையில்
வீழ்த்தப்பட்டு
ஈழத்து வீரத்தை உலகம்
ஏலம் கூவிய பொழுதுகள்.

முள்ளிவாய்க்கால்
செயற்கை எரிமலையாய் மாற்றப்பட்டு .
கால கொடு கயமையினால்
கலி கொண்டு
மானுடம் காவு கொள்ளப்பட்ட "கரிநாள்".

சூழ்ச்சியில் சூனியத்தால்
சுற்றி கட்டப்பட்டு
சுவாசிக்க
காற்றும் நுழைய முடியாத
கனத்த பொழுதுகள்.

இன்றும்
நெஞ்சு கனலாக தகிக்கிறது.
பாலுக்கு அழுத பிஞ்சுகளும்.
பதை பதைத்த தாய்மாரும்.
வேல் கொண்டு ஆடிய பெண்புலியும்.
விடுதலை வேட்கை கொண்ட வீரனும்.
வஞ்சகத்தின் வலையில்
காவுகொள்ளப்பட்ட "கரிநாள்"

எரிந்த சுவாலை ஓய்ந்து போனாலும்.
தனலும்
தகதகக்கும்
வெப்பமும்
காலத்தால் அழியாத கயமையும்.
நினைவில் ஆழமாக.
நித்திய வேதனையாக.

இருந்தும்
இன்று நாங்கள்
எரிந்த சாம்பலிலிருந்து
எழுந்து வந்துகொண்டிருக்கிறோம்.
சாவிலும் வாழ்வோம்.
சரித்திரம் மட்டும்தான்
எங்களை தீண்ட முடியும்.

தீனிக்கும்
திரை மூடிய புணர்ச்சிக்கும்
வீணான வெளிச்ச விளம்பரத்துக்கும்
நாங்கள் காலத்திலும்
அடிபணியப்போவதில்லை.

நாம்
வீழுவோம் என்றா நினைத்திருந்தாய்
வினை தந்த விழலை விட்டு
மாழுவோம் என்று நினைத்தாயா.

எம்
மண் தமிழீழம் காணும்வரை
சோருவோம் என்று நினைத்தாயா.

ஈழத்தின் கொடி வான் உயர்ந்து
தேசம் விடியும் வரை
நெருப்பாகி  மாழுவேன் என்று
வேண்டுமானால்
நீரில் எழுதிக்கொள்.

மூலம்அறியாமல்..
என் தலைவனின்  விவேகம் அறியாமல்.
விடுதலைப்புலிகளின் வேகம் அறியாமல்.
காலப்பதிவில்
காலியாகி விட்டாயே....

நான்கு சுவர்களுக்குள் போடும்
சுலோகமென்றா நினைத்தாய்..
ஈழம்
பாழாகும் என்று நினைத்தாயோ.
கனவென்று
மாற்றிக்கொள்.
தேசம் விடியும்வரை.
திண்ணமது.
மண் மேட்டிலிருந்தும்
சாம்பலிலிருந்தும்
மறுபடியும் எழுவோம்..

வானிடை விரைந்து வந்து வழிநீளம்
ஷெல்லும் வீழ.
மானிடக்குடிகள்மீது மழையென
குண்டும் பாய-மேனிகள்
சிதறி ரத்த வெள்ளமாய் சகதியாயினும்
நாம் என்றும் புலியாய் நின்று-கொடியை
நாட்டுவோம் ஈழ மண்ணில்.
ஊர்க்குருவி

தேர்தல் தோல்வி திமுக சாதனைகளுக்கு கிடைத்த பரிசு குஞ்சாமணி அறிக்கை



வியாழன், 12 மே, 2011

நீங்கள் இறந்து விட்டீர்கள் கருணாநிதி






   
Kalangher1949ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்து, அண்ணா என்ன பேசினார் என்பது நினைவிருக்கிறதா கருணாநிதி அவர்களே… ? நீங்கள் மறந்திருப்பீர்கள்.

“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதயில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்றேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், போருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திமுகவின் கோட்பாடுகளாகும்.”

இந்தக் கொள்கைகளையெல்லாம் நீங்கள் என்றோ குழிதோண்டிப் புதைத்து விட்டீர்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு, தந்திரமாக, நெடுஞ்செழியனுக்கு போக வேண்டிய கட்சித் தலைவர் பதவியை எம்ஜிஆர் உதவியோடு, தட்டிப் பறித்து விட்டு, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீங்கியவர் நீங்கள்.
 annadurai_mgr_karunanidhi
திமுக என்பது எத்தனை தியாகங்களால் உருவானது ?   அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை நூலுக்குத் தடை, திமுக கூட்டங்களுக்கு 144 தடை உத்தரவு, மீறி நடந்த குன்றத்தூர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, என்று தொடங்கிய காலம் முதலாகவே எத்தனை தடைகள் ? அடக்குமுறைகள் ? ஆனால், இந்த அடக்குமுறைகள் அத்தனைனையும் மீறி, திமுக வளர்ந்ததற்காக காரணம், காலத்தின் தேவை.   திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு கட்சியின் அவசியத்தை அன்று மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், அதே திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, இன்றோ நாளையோ அவிழும் நெல்லிக்காய் மூட்டை போன்ற நிலைக்கு ஆளாக்கியது நீங்கள் தான்.

நீங்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, நீங்கள் சம்பந்தப் படாத அத்தனை விவகாரங்களையும் கல்லறைக்கு அனுப்பினீர்கள். அண்ணாவால் தொடங்கப் பட்ட திராவிட நாடு இதழ் எங்கே ? கழக செய்திகளைத் தாங்கி வந்த மாலை மணி இதழ் எங்கே ? அந்த இதழ்கள் அத்தனையையும் ஓரங்கட்டி விட்டு, நீங்கள் தொடங்கியது என்ற ஒரே காரணத்துக்காக முரசொலியை கட்சியின் அதிகார பூர்வ ஏடாக ஆக்கியது உங்கள் அகந்தையும் சுயநலமும் அல்லாமல் வேறு என்ன ?

அந்த முரசொலியை திமுகவுக்கு வழங்கியதற்காக நீங்கள் செய்த தந்திரம் என்ன ? போதுமான நிதி இல்லாததால் இனி முரசொலியை நடத்த முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டு, ஒரு வாரத்திற்கு அந்த ஏட்டை நிறுத்தி, கோடானு கோடி தொண்டர்கள் ‘தலைவா, இதழைத் தொடங்கு தலைவா’ என்று கடிதமும் தந்தியும் அனுப்பியதும், அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, நீங்கள் தொடங்கிய இதழ் என்பதால், திமுகவுக்கு அந்த இதழை விற்க, 2 கோடியை திமுகவிடமிருந்தே பெற்ற அற்ப மனிதர் தானே நீங்கள் ?

இப்படி ஆரம்பம் முதலாகவே, சுயநலம், சுயநலம் என்று சுயநலத்தின் மொத்த உருவமாகத்தானே இருந்தீர்கள். ? இன்று இப்படி ஒரு மோசமான சூழலில் சிக்கி, அவமானப்பட நேர்ந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல கருணாநிதி அவர்களே.. நீங்களே தான்.
 5293940480_b22319fe71_b
பதவியையும் அதிகாரத்தையும் உங்கள் மகனுக்காக கூட விட்டுத் தரத் தயாராக இல்லை நீங்கள். அந்த அகந்தையே உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.   எண்பத்து ஏழு வயது வரை ஓயாமல் உழைப்பதும், படிப்பதும், எழுதுவதும், நல்ல விஷயம் என்றாலும் கூட, உழைப்பதற்கு வேறு நபர்கள் இருக்கும் போது, அதுவும் உங்கள் சொந்த வாரிசாக இருக்கும் போது, அவருக்குக் கூட விட்டுத் தராமல், தொடர்ந்து தள்ளுவண்டியிலும் அதிகாரத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது உங்களின் பிடிவாதம் மற்றும் அதிகார வெறி காரணமாகவே… இது போல தள்ளுவண்டியில் அமர்ந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு, பேச்சு வார்த்தை நடத்தினால் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இலக்கியப் பணி ஆற்றப் போகிறேன் என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள் ?   வசதியாக அதை மறந்து விட்டு, ஆறாவது முறையாக முதல்வராகப் போகிறேன் என்று கூசாமல் பேசினால், ஊர் சிரிக்காது ?

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தொடங்கப் பட்ட திமுகவை, உங்களின் மூட நம்பிக்கைகளினாலும், திருட்டுத் தனத்தாலும், சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் போடுவது வரை கேவலப்படுத்தி விட்டீர்கள்.   திமுக வரலாற்றில் என்றாவது ஒரு சாமியாருக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது உண்டா ? வாயைத் திறந்தால், அறிஞர் அண்ணாவின் வழியில், பெரியாரின் நிழலில் என்று ஜிகர்தண்டா கதைகளாக விடுகிறீர்களே… அண்ணாவும் பெரியாரும், இப்படியா தீர்மானம் போட உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ?

உங்கள் துறையைச் நேர்ந்த அமைச்சர் தீமிதித்தார் என்பதற்காக, தீமிதிப்பது காட்டுமிராண்டிச் செயல் என்று சொல்லி, அந்தியூர் செல்வராஜ் என்ற அமைச்சரை ஓரங்கட்டவில்லை ? உங்கள் மனைவி காற்றிலிருந்து மோதிரம் எடுக்கும் போலிச் சாமியார் சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், உங்கள் அருமைப் பிள்ளை சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், பிறந்த நாளுக்கு ஆசி வாங்க புட்டபர்த்தி சென்ற போதும் அது காட்டுமிராண்டித்தனமாக செயலாக உங்களுக்குப் படவில்லையா ?
 Jan_20_f
ஊர் ஊராக நாத்திகம் பிரச்சாரம் செய்த, பெரியாரும், அண்ணாவும் உங்களுக்கு இதையா கற்றுக் கொடுத்தார்கள் ?

மிகப் பெரிய தானைத் தலைவராக, டெல்லியை அசைத்த உங்களை நம்பாமல், உங்கள் மகளே தனக்கும், ராசாவுக்கும் மந்திரிப் பதவி வேண்டும் என்று ஒரு தரகரோடு உரையாடிய விபரங்கள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறதே…. ?

niira_radia_20110110
ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால், அப்போதே அல்லவா கனிமொழியை கட்சியை விட்டு விலக்கி வைத்திருக்க வேண்டும் ? அப்போது விலக்கி வைத்திருந்தால், இன்று இத்தனை சிக்கல்கள் சமாளிக்க முடியாதது போல் உருவாகியிருக்காதே ?   இரண்டு பெண்மணிகள் பேசுவதில் என்ன தவறு என்றல்லவா சப்பைக் கட்டு கட்டினீர்கள் ?
 kAHNIKOZIfile_20101215
பேராசைக்கு ஓர் அளவில்லையா கருணாநிதி அவர்களே ?   ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்குவதற்கு முன்பாக, உங்கள் குடும்பத்திடம் பணம் இல்லையா ? சொத்து இல்லையா ?   என்று நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆனீர்களோ, அன்று முதல், நீங்கள் ஊழல் புரிந்து வந்துள்ளீர்கள் என்பதை நீதிபதி சர்க்கரியாவின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. பணம் பண்ணுவதையே முழு நேரத் தொழிலாகவும், ஆட்சி புரிவதையும் கட்சி நடத்துவதையும் அதற்காக வழியாகவும் கடைபிடித்தவர் நீங்கள். அத்தனை பணம் வைத்திருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எதற்காக இத்தனை பேராசை கருணாநிதி ? எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தவர் நீங்கள் ? எத்தனை விசாரணைகளை சந்தித்திருப்பீர்கள் ?   ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான முதல் நாளே ஆயிரம் கோடியை உங்களிடம் வந்து கொடுத்த போது, நீங்கள் உஷாராயிருக்க வேண்டாமா ? இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளாக பணம் வந்து கொட்டினால், இதில் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா ? பேராசைப் பிடித்த உலகில், மிகப் பெரிய ஆதாயத்தை அடையாமல் ஆயிரக்கணக்கான கோடிகளை எவனும் தர மாட்டான் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா ? மற்ற ஊழல்களைப் புரிந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும், ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று உங்களை யாருமே அசைத்திருக்க முடியாதே ?
 rajaairport
தமிழ்நாட்டில் ஊழல் புரிந்திருந்தால், பதவி போகும் வரை உங்கள் ஆட்சி என்பதால், தடயத்தையாவது அழித்திருக்க முடியும். வட இந்தியாவில், டெல்லியில், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இடத்தில் இப்படி ஒரு இமாலய ஊழலைச் செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எப்படி நம்பினீர்கள் ?

நீங்கள் வளர்த்து ஆளாக்கிய உங்கள் அருமைப் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு எதிராக திரும்பிய போது, அவசர அவசரமாக கலைஞர் டிவியை தொடங்க வேண்டும் என்று விரும்பினீர்கள்.   விருப்பம் சரி.   அவ்வாறு தொடங்கப் பட்ட டிவிக்கு இயக்குநராக, கட்சியில் எந்த நாயையாவது போட்டிருக்கலாமே ?   உங்களை மீறி யாராவது செயல்பட முடியுமா ?   அதையும் மீறி செயல்பட்டால் விட்டு விடுவீர்களா ? அதிகபட்சம் அந்த நபர் 10 ரூபாயை கையாடுவான். அவ்வளவு தானே ?   உலகத்தில் யாராவது பெண்டாட்டியையும், பெண்ணையும் இயக்குநராக போட்டு, லஞ்சப் பணத்தில் டிவியை தொடங்குவார்களா ?
 ss
உங்கள் கீழ் செயல்படும் துறையான லஞ்ச ஒழிப்புத் துறையில் போடப்படும் வழக்குகளில், மனைவி பெயரில் சொத்துக்கள் இருந்தால், குற்றவாளிக்கு உடந்தை என்ற, மனைவியையும் குற்றவாளியாக சேர்ப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கு மறந்து விட்டது ?

அப்படி இருக்கும் போது, யாராவது ஒரு குப்பனையோ, சுப்பனையோ, கலைஞர் டிவியில் இயக்குநராகப் போட்டிருக்கலாமே ? அதாவது பத்து பைசா கூட வேறு யாருக்கும் போகக் கூடாது.   அந்த பத்து பைசாவையும் குடும்பம் தான் தின்ன வேண்டும்.   ஏன் கருணாநிதி உங்களுக்கு இப்படி ஒரு பேராசை ?

கடன் வாங்கினார்கள், திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பினீர்களே….   ராசா கைது செய்யப் பட்டதும் திருப்பிக் கொடுக்கப் பட்டால், இப்போது ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள் என்று சிபிஐ கேட்காது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் ? கலைஞர் டிவியின் நிகர லாபமே, 1.34 கோடியாக இருக்கும் போது, 200 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று சிபிஐ கேட்காதா ? சிபிஐ அதிகாரிகள் அவ்வளவு முட்டாள்களா ?

ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியதும், இந்த இமாலய ஊழலை மறைக்க நீங்கள் எடுத்த முயற்சி மிக மிக கேவலமானது கருணாநிதி அவர்களே…   ராசா தலித் என்பதால் வட இந்திய ஊடகங்களும், பார்ப்பன சக்திகளும் ராசாவை குற்றம் சொல்லுகின்றன என்பது எத்தனை அபத்தமான வாதம் ?   அபத்தமானது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட.   இந்த ஊழலில் சாதி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா ? தலித்தாகிய ராசா வாங்கித் தந்த பணத்தை, இசை வேளாளராகிய தயாளு அம்மாள், நாடார்களாகிய ராசாத்தி கனிமொழி, ரெட்டியாராகிய நக்கீரன் காமராஜ், இஸ்லாமியராகிய ஜாபர் சேட், தேவராகிய டி.ஆர்.பாலு, நாயுடுவாகிய ஆற்காடு வீராச்சாமி, கிறித்துவரான ஜெகத் கஸ்பர், என சாதி மதப்பாகுபாடு இல்லாமல் தானே அனைவரும் பங்கு போட்டுக் கொண்டீர்கள் ? இதில் சாதி எங்கிருந்து வந்தது ? மேலும், உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்புவதை மக்கள் எப்போதோ நிறுத்தி விட்டார்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை ?
 l2007121916124
நீங்கள் கோலோச்சும் அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போதே நீங்கள் பதவி விலகியிருக்க வேண்டும் கருணாநிதி.   இதை விட உங்களுக்கு பெரிய அவமானம் என்ன வேண்டும் ? உங்கள் மகளையும், மனைவியையும், சிபிஐ உங்கள் மூக்குக்கு கீழே கேள்வி கேட்டுச் செல்கிறார்கள் இதற்குப் பிறகும் வெட்கமில்லாமல், கலைஞர் டிவியில் தவறே நடக்கவில்லை என்று சொல்லுவதன் மூலம், தப்பித்து விடலாம் என்று எப்படி தப்புக் கணக்கு போட்டீர்கள் ?
 Kanimozhi-_20110223
கனிமொழி பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றதும், உடனடியாக திமுவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டினீர்களே… கனிமொழி உங்கள் மகள் என்பதை விட, திமுகவில் அப்படி என்ன பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் ?   உங்கள் மகள் ஊரான் பணத்தை திருடினால், கேள்வி கேட்க மாட்டார்களா ? விசாரிக்க மாட்டார்களா ? உங்கள் மகளை குற்றம் சாட்டி விட்டார்கள் என்பதற்கும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் பெண்டாட்டி, பிள்ளை, மகளுக்காகத் தான் திமுக இருக்கிறதா ? அந்தக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்திலும், ஏதாவது உப்பு சப்பு இருந்ததா ? யாரையாவது கண்டித்தீர்களா ? ‘சரத்குமார் மற்றும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பது, ஆச்சயர்யத்தை அளிக்கிறது’ என்றால் என்ன ஆச்சர்யம் இதில் உங்களுக்கு ? காலில் விழுந்து கெஞ்சிக் கதறியும், மாட்டி விட்டு விட்டார்களே என்றா ? திமுகவின் தீர்மானங்கள் எப்படி இருக்கும் தெரியுமா ? மறந்திருப்பீர்கள். நினைவு படுத்துகிறேன்.

1957ம் ஆண்டு, நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று இயற்றப் பட்ட தீர்மானம்.

“பாராளும் பண்டிதரின் ஆணவம் - எதற்கும் எவரையும் நான்சென்ஸ் என்றும், அறிவும் அனுபவமும் மிக்க தலைவர்களைப் பித்தர்கள் என்றும், மூதறிஞர்களை ஆற்றல் மிக்கோரை முட்டாள்கள் என்றும், இன எழுச்சி ஊட்டுவோரை கட்டு மிராண்டிகள் என்றும், தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றிடும் பெரியார் ஈவெராவை மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு ஓடச் சொல்லும்படியும் பேசும் பண்டித நேரு – பஞ்சம் பேக்கினாரா ? பட்டினி துடைத்தாரா ? விலை ஏற்றம் போக்கினாரா ? செல்வம் வளரச் செய்தாரா ? எதைச் சாதித்துத் தந்தார் இந்நாட்டு மக்களுக்கு ?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி எல்லாத் தலைவர்களையும் ஏசித் தமிழரின் மனம் புண்படச் செய்யும் பண்டித நேரு பவனி வருகிறார்.

பம்பாய் போல் பயங்கரம் வேண்டாம். குஜராத் போல் கலகம் வேண்டாம். கண்ணியமான முறையில் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டாமா நாம் ? தமிழர்களே… ! உங்கள் நாடு சீரியது. உமது வரலாறு புகழ்மிக்கது. உமது தலைவர்கள் ஆற்றல் மிக்கோர்.   எனினும் ஏசுகிறார் நேறு !

ஆந்திரர் தமது உரிமையைப் பெற ரயிலை கவிழ்த்தனர். தபாலுக்குத் தீயிட்டனர்.

ஆமதாபாத்தில் கதர்சசட்டையை காந்தி குல்லாயைத் தீயிட்டனர். அந்த விதமான அநாகரிகம் வேண்டாம். அகில உலகில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நாகரிக முறையான கறுப்புக் கொடி காட்டுவது என்பதைச் செய்யவுமா வகையற்றுப் போனீர்கள் என்று இந்த வையகம் கேட்கும்.

தையலர் சிரிப்பர். பின் சந்ததியும் ஏசும். எனவே எல்லோரும் வாருங்கள். ஏசிப்பேசும் நேரு பண்டிதருக்கு காட்டுவோம் கருப்புக் கொடி.”

எப்படி இருக்கிறது தீர்மானம் ? அனல் பறக்கவில்லை ?

கனிமொழி குற்றப் பத்திரிக்கை நகலை வாங்க டெல்லி செல்கிறார் என்றதும், உங்கள் கட்சி எம்பிக்கள் அத்தனை பேரையும் டெல்லிக்கு அனுப்பினீர்கள். உங்கள் உள்துறைச் செயலாளரை அனுப்பினீர்கள். அனைவரையும், மகளோடு ஆதரவாக இருக்கச் செய்தீர்கள். உங்களால் தகத்தகாய கதிரவன் என்று அழைக்கப் பட்ட ராசாவை சிபிஐ விசாரணைக்கு அனுப்பிய போது, ஏன் உங்கள் கட்சி எம்பிக்களை அனுப்பவில்லை ?   தலித் இனத்தின் தன்னிகரில்லாத தலைவனல்லவா ராசா ? பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கிய பூச்செடி இல்லையா ராசா ?
 rajacourt_20110210
இதையெல்லாம் விட நீங்கள் செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், உங்கள் மகளுக்காக ராம் ஜெத்மலானி செய்த வாதம்.   கைது செய்யப் பட்டதனாலேயே ஒருவர் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக ஆகாது என்று பேசி விட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜெத்மலானியை தவறு செய்தவர் ராசாதான், கனிமொழிக்கு பொறுப்பில்லை என்று பேச வைத்தீர்கள் ? இதை விட ஒரு மனிதனின் முதுகில் குத்த முடியுமா ? ராசா யாருக்காக கொள்ளையடித்தார் கருணாநிதி ? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்காகவும் தானே ? ஆயிரக்கணக்கான கோடிகளை உங்களுக்காக ராசா கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுத்த போது ராசா இனித்தாரா ? ராசா அப்ரூவராக மாறினால், தள்ளு வண்டியோடு நீங்களும் திஹார் செல்ல வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை ?
 dmk6
இனி உங்கள் வாயில் இருந்து வரும் ஒரு வார்தையைக் கூட யாரும் நம்பப் போவதில்லை கருணாநிதி.   இனியாவது எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்துங்கள்.   உங்கள் பொய்யுரைகளும், புனை சுருட்டும் இனியும் நம்பப் படாது.  உங்களுக்கு மான உணர்ச்சியெல்லாம் இல்லை என்பது நன்கு தெரியும். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் பெரியார்.   உங்களை நீங்கள் மனிதனாக கருதினால், உடனடியாக பதவி விலகுங்கள். உங்களுக்குப் பிறகு திமுகவில் தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு ஒருவருக்குக் கூட தகுதி இருப்பதாக சவுக்கு கருதவில்லை. தகுதி இல்லை என்று சொல்வது, திறமை இல்லை என்பதற்காக அல்ல ? நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து, உங்கள் மகளுக்கு பாதுகாவலனாக டெல்லி சென்று காத்துக் கிடப்பவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமையான திருச்சி சிவா உட்பட.
 அதனால், உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் ஊழல் கறை படியாமல் இருப்பது, கனிமொழியின் மகன் ஆதித்யா தான். அதனால் ஆதித்யாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைப்பதை பற்றி சிந்தியுங்கள்.
 27cm7
அய்யன் வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று நினைவிருக்கிறதா ?
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.

நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

நன்றி எழுத்தாளர் சவுக்கு

இறுதிக்கட்ட போரின் மேற்குலகின் பங்கு: விக்கி லீக்ஸ் அதிரடித்தகவல் !




இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் எவ்வாறு முனைப்புடன் செயற்பட்டனர் என்பது தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் கசிந்த விடயங்களையும் விக்கலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது அனைத்துலகின் கண்டனங்களுக்கும் போர் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் இட்டுச் செல்லுமென றொபர்ட் ஓ பிளேக் இலங்கையின் அன்றைய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது 2009 மார்ச் மாதம் எச்சரித்துள்ளார். அதேவேளை போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் அழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரேயொரு மேற்குலக நாடான நோர்வே இராஜதந்திரிகள் விடுதலைப்புலிகளிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

இரத்த ஆற்றைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் முடிந்ததைச் செய்ததாக நாம் உணர்கின்றோம். எனினும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பார்க்கும்போது விரக்தியாக இருந்தது என்று இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் தெரிவித்துள்ளார். 2009 மே மாதம் போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்தக் கூற்று உண்மையல்ல என்பதையும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும் எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கக் தூதுவருக்குக் கிடைத்துள்ளன. அழிவுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிளேக் தொடர்பு கொண்டுள்ளார்.

காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என பசில் ராஜபக்ஸ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு தயாராக இருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உலங்கு வானூர்திகளை அனுப்புமாறு கோத்தபாய ராஜபக்ஸவிடம் கோரியபோது நாம் அதற்கான கட்டத்தை கடந்துவிட்டோம் என்று அவர் பதிலளித்துள்ளார். அழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த இராஜதந்திரிகள் கொண்டிருந்த கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண்டிருந்தனர். இவர்களில் நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர் ஜான் எக்லண்டும் ஒருவராவார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை நோர்வேயின் Aftenposten தொகுத்து வெளியிட்டுள்ளது.

5 பெப்ரவரி 2009 :

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது கடினமாகி வருவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

5 மார்ச் 2009 :

விடுதலைப் புலிகள் தாம் முறியடிக்கப்பட்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சரணடைவினை ஒரு தெரிவாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. பொது மக்கள் தங்கியுள்ள இடங்களை நோக்கி இலங்கைப் படைகள் ஆட்டிலறி தாக்குதல்களை மேற்கொள்வதை பசில் ராஜபக்ஸ ஆமோதிக்கிறார் போன்ற தகவல்களை டோர் ஹெட்ரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றார்.

19 மார்ச் 2009 :

அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களை பலியாக்க முனைவதாகவும் அவ்வாறு நிகழுமானால் அனைத்துலக கண்டனங்களுக்கும் போர் மீறல் குற்றச்சாட்டுகளுக்கும் அது இட்டுச் செல்லும் என அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை எச்சரிக்கிறார்.

27 ஏப்ரல் 2009 :

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளை சந்திப்பதற்கான அழைப்பினை விடுக்கிறார்.

இணைத்தலைமை நாடுகள் அங்கம் வகிக்கும் நோர்வே அழைக்கப்படவில்லை. இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக இனி நோர்வே பார்க்கப்படமாட்டாது என போகொல்லாகம தெரிவித்தார். ஏனைய மூன்று நாடுகளின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் தனது நிலைப் பாட்டை மாற்றுவதாக அவர் கூறினார்.

5 மே 2009 :

செய்மதி மூலம் பெறப்பட்ட ஒளிப்படங்கள் மகிந்த ராஜபக்ஸவிற்கு அமெரிக்காவினால் காட்டப்படுகின்றது.

போர்க்கள நிலைமை கள் தொடர்பாக தன்னைவிட அமெரிக்காவுக்கு அதிக தகவல்கள் தெரிந்திருப்பதாக மகிந்த ராஜபக்ஸ ஒப்புக்கொள்கிறார். அவரது ஜெனரல்களால் மேற்கொள்ளப்படும் படைநடவடிக் கைகள் தொடர்பாக ராஜபக்ஸவிற்கு எந்தளவுக்கு தெரியும் என அமெரிக்க ராஜதந்திரிகள் மத்தியில் கேள்வி எழுகின்றது.

7 மே 2009 :

தனது நேரத்தின் 60 விழுக் காட்டினை இலங்கை விவகாரங்களுக்கு செலவிடுவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவிக்கின்றார்.

13 மே 2009 :

இலங்கை அரசாங்கத்தை பொய்யர்கள் எனக் கூறிய மிலிப்பான்ட் தமிழ் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக அனைத்துலக சமூகம் குரல் எழுப்ப வேண்டும் என்கிறார்.

13 மே 2009 :

இலங்கை விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொள்ளாதுவிடின் அது ஒரு வரலாற்றுத்தவறு என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்துகின்றது.

பாதுகாப்பு அவையின் ஒரு அமர்வில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன தீர் மானம் நிறைவேற்ற முயன்றபோது சீன மற் றும் ரஷ்யா எதிர்க்கிறது.

15 மே 2009 :

போர்ப்பகுதியில் படைத் துறைத்தலைமை மேற்கொள்ளும் நடவடிக் கைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு சரியான முறையில் அறிவிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக இந்திய வெளியுறவு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தேகம் கொள்கிறார்.

17 மே 2009 :

பேரழிவைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பிளேக் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டார்.

காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதி அனைத்துலக செஞ் சிலுவைச் சங்கத்திற்கு வழங்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஸ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார்.

26 மே 2009 :

ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையிலிருந்து விடைபெறுகிறார். சமாதானத்தை வெல்லுமாறு தனது இறுதி வேண்டுதலில் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடையச் சென்றபோது சரணடைவை உறுதிப்படுத்த எதையுமே செய்யவில்லை என வெளியுறவு அரசியல் ஆலோசகர் பாலித ஹோகன்ன முன்னர் தெரிவித்தார். ஆனால் பிறிறொரு சந்தர்ப்பத்தில் அதற்கு முரணாக ஹோகன்ன கூறியமையை பிளேக் கவனத்தில் எடுத்துள்ளார்.

27 மே 2009 :

ஐக்கிய நாடுகளின் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இடம் பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டி ருந்த முகாம்களின் நிலைமைகள் மிக மோசமாக உள்ளதாக அவர் கூறுகிறார்.

01 யூன் 2009 :

அடுத்த ஐந்து ஆண்டு களில் படைத்துறை ஆளணிகளை இரட்டிப் பாக்கும் திட்டத்தினை அரசாங்கம் கொண்டி ருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் இரகசிய ஆவணத்திலிருந்து தெரியவருகின்றது.

15 யூலை 2009 :

அனைத்துலக மனி தாபிமான சட்டங்களை இலங்கை அரச படை கள் கடுமையாக மீறியதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. பொது மக்களுடன் கலந்திருந்ததாக விடுதலைப் புலிகள் கண்டிக்கப்படுகின்றனர். ஆனால் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினரா என்பது தொடர்பாக முடிபெடுப்பது கடினம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களை காயப்பட்டவர்களுக்கு மருந்து வழங்கும் மற்றும் குருதி செலுத்தும் பணிகளை முன்னெடுக்க விடாது அரசாங்கம் தடுத்துள்ளது. எனவே இறந்த சிறுவர்களின் தொகையை கணக்கிடுவதை தாம் கைவிட்டதாக செஞ்சிலு வைச் சங்கத்தின் தெற்காசியத் தலைவர் கூறுகிறார்.

31 ஓகஸ்ட் 2009 : அமெரிக்க வெளியு றவு அமைச்சகத்தைச் சேர்ந்த போர்க்குற்றங் களுக்கான பொறுப்பதிகாரி கிளின் வில்லி யம்சனுக்கும் நோர்வேக்கும் இடையில் ஒஸ்லோவில் சந்திப்பு நிகழ்கிறது.

போர்ப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாதிருந்தமையால் போர் மீறல்கள் தொடர்பான தடயங்கள்-சாட்சியங்களை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறிய கிளின் வில்லியம்சன் இறுதி நாளில் நடந்தவை தொடர்பான தகவல்களை நோர்வேயிடம் கேட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை மீதான கொலைகள் சந்தேகத்திற்கிடமானவை என நோர்வே இராஜ தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

18 செப்ரம்பர் 2009 :

அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக தான் குழப்பம் அடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்ஸ விசனம் கொள்கிறார். பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு முதலில் கூறிய அமெரிக்கா, தான் அதைச் செய்து முடித்துள்ள போது விமர்சிப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ராஜபக்ஸ கூறுகிறார்.

26 ஓக்டோபர் 2009 :

போர் மீறல்கள் தொடர்பான அமெரிக்க செனட் அவையின் அறிக்கையைப் பெறுவதற்கு இலங்கை அர சாங்கத்தின் எந்தவொரு பிரதிநிதியும் முன் வரவில்லை.

17 டிசம்பர் 2009:

மகிந்த ராஜபக்ஸ நாட்டை தவறான பாதையில் இட்டுச்சென்றுவிட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டுகிறார்.

ராஜபக்ஸ குடும்பத்தினை படிப்பறிவற்ற � பண்பாடற்ற பாதகர்கள் என வர்ணிக்கிறார். நாட் டின் அரசியல் காலநிலை பழிவாங்கல் அச் சுறுத்தல் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் எவருமே அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலையில் இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றார்.

2 பெப்ரவரி 2010 :

சரணடைய முனைந்த போது விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதான குற்றச் சாட்டு பொய்யானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். போன்ற தகவல்களை Aftenposten தொகுத்து வழங்கியுள்ளது.

நன்றி :தமிழ் சி.என்.என்

சனி, 7 மே, 2011

தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்! – சமநிலைச்சமுதாயம் (மே இதழ்)

தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்! – சமநிலைச்சமுதாயம் (மே இதழ்)

தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் தமிழ் தேசியவாதிகள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்று சமநிலைச்சமுதாயம் மே இதழில் ஆளூர் ஷாநவாஸ்...
தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் தமிழ் தேசியவாதிகள் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை என்று சமநிலைச்சமுதாயம் மே இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதியுள்ளார். சீமான்…
பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப் பட்டிருப்பவர்.
ஈழ மண்ணின் விடுதலைக்காக ஒலிக்கும் குரலாகவும்,
ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும் காட்சியளிப்பவர்.
எளிய குடும்பத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் ஓர் திரைக் கலைஞர்.
எளியவர்கள் பலர் திரைத்துறையில் எழுச்சி பெறுவதற்கு காரணமானவர்.
தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சிறைகளைக் கண்டவர்.
தன் இனத்தின் மீட்சிக்காக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்.
பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் உச்சரிப்பும்,
பிறர் மொழியைக் களங்கப்படுத்தாத உயர்பண்பும் உடையவர்.
தான் உச்சரிக்கும் மொழியாலும், தன் உடல் மொழியாலும்
தமிழுலகை வசீகரிக்கும் மேடை நாயகர்.
இத்தனைப் பெருமைகளையும், சிறப்புகளையும் உடைய சீமான், இப்போது ‘இந்தியாவின் மரண வியாபாரி’ நரேந்திர மோடியைப் புகழும் ஒரு நாலாந்திர அரசியல் வாதியாகச் சிறுமைப்பட்டு நிற்கிறார்.
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன் என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு, கலைஞரின் தலைமையிலான திமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார். ‘கலைஞரை விமர்சிக்கிறேன் பேர்வழி’ என்று கிளம்பியவர் அத்தோடு நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்ததைத் தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
நரேந்திர மோடி…
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன்; பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.
ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு தலைமையேற்ற ராசபக்சேவைப் போலவே, குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை ஏற்றவன்.
இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு, உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன். அவன் வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்கிறபோது, பெரியாரின் மண்ணிலிருந்து ஒருவர் அவனை முன்மாதிரியாகக் காட்டுவது எத்தனைப் பெரிய துரோகம்?
குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் கிடைக்கிறதாம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம். மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறாராம். இப்படி அடிக்கிக்கொண்டே போகிறார் சீமான்.
இத்தோடு நிறுத்தவில்லை அவர். ‘அதிமுக ஆட்சியமைத்தால் அது எப்படியிருக்கும்? என்று ஒரு ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ‘திமுக ஆட்சியைவிட மோசமாகக் கூட இருக்கலாம்; அல்லது நரேந்திர மோடி மாதிரி ஒரு நல்ல நிர்வாகத்தைத் தரவும் ஜெயலலிதா முயற்சிக்கலாம்’. என்று பதிலளித்துள்ளார் சீமான்.
ஐயா பெரியாரின் பேரனே..எது நல்ல நிர்வாகம்?
ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின் சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட வைத்திருக்கிறானே நரேந்திர மோடி. அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?
தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?
அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?
‘தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் உள்ள குஜராத்’ என மோடியை வானளாவப் புகழும் சீமானுக்கு, அந்த குஜராத்தின் உண்மை முகம் தெரியுமா? மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்கங்கள் அவருக்குப் புரியுமா? ’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க இந்துக்களுக்கு மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதை சீமான் அறிவாரா?
குஜராத்தில் நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஒ.பி.சி பிரிவினரைவிட இது 50 சதவீதம் அதிகம் என்றும், கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60 சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை அறிவித்த போது, குஜராத் அரசு அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது என்றும், இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம் சிறுபான்மை சமூக மாணவர்கள் கல்வி உதவித்தொகையை இழந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட குஜராத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம் தயாரித்தல்,அகர்பத்தி தயாரித்தல், கை ரிக்‌ஷா இழுத்தல் போன்ற குறைந்த வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யும் விளிம்பு நிலை மக்களாக இருப்பதையும் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.
குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக் கணக்கில் 89 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம் செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.
குஜராத்தில் மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது அவுட்லுக்கின் அறிக்கை.
இப்போது சொல்லுங்கள் சீமான் அவர்களே! இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?
மோடியின் கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப் பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து வருகின்றனர் இந்துத்துவ சக்திகள். மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன், குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின் நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள் ஒவ்வொன்றையும் ‘செய்தி’யாக்குகின்றனர்.
நாடு முழுவதும் மோடியின் புகழைப் பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக் குத்தகையையும் ‘துக்ளக் சோ’ எடுத்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் மோடியின் புகழ் பாடித் திரிகிறார். கலைஞரைத் திட்டுவதற்கும், ஜெயலலிதாவை தட்டி எழுப்புவதற்கும் மோடியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.
‘ஜெயலலிதா வந்தால் நரேந்திர மோடியைப் போல நல்லாட்சி தருவார்’ என்று, இத்தனை நாளும் சோ சொல்லி வந்ததைத்தான் இப்போது சீமானும் சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இனி மோடியின் குஜராத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகக் காட்டுவதற்கு இல.கணேசனும், எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும், சோவும், இராம.கோபாலனும் சீமானின் கருத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். ‘மோடி நல்லவர் என்று நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை; இதோ பெரியாரின் பேரனே சொல்கிறார் பாருங்கள்’ என்று மக்களை உசுப்புவார்கள்.
‘இலங்கையில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி, அதன் மூலம் உலகக் கலைஞர்களை இலங்கைக்கு வருத்தி, உலக அரங்கில் இலங்கை மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்த ராசபக்சே முயல்கிறார். ஆகவே இந்திய திரைக் கலைஞர்களே இலங்கைக்கு செல்லாதீர்கள். ராசபக்சே மீதான போர்க் குற்றத்தை போக்கத் துணை போகாதீர்கள்’ என்றெல்லாம் கொந்தளித்து, கமலுக்கு கடிதம் எழுதி, அமிதாப் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீமான் தான் இன்று மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறார்.
திரைப்பட விழா மூலம் தன் மீதான ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராசபக்சேவைப் போலத்தான், மோடியும் தடையில்லா மின்சாரம் மூலமும், மதுவிலக்குச் சட்டத்தின் மூலமும் தன் மீதான ரத்தக்கறையை மறைக்க முயல்கிறார். அதற்கு சீமான் துணை போகலாமா?
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?
ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக் கூட மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள். தமிழ் மண்ணுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின் அருகிலிருக்கும் ‘தமிழ் முழக்கம் சாகுல் அமீது’வே நிகழ்கால சான்று. அத்தகைய விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும் போது எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?
‘மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்’ என்கிறார் சீமான். ஏன் ராசபக்சே கூட அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்தான். சிங்களர்களின் மேன்மைக்காகவே அவன் பல திட்டங்களை செயல்படுத்துகிறான். மோடியைப் போலவே பன்னாட்டு முதலீடுகளை இலங்கையை நோக்கித் திருப்புகிறான். அதற்காக ராசபக்சேயை ‘நல்லாட்சி தருபவர்’ என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டினால் சீமான் சும்மா இருப்பாரா?
ராசபக்சேயை தமது நண்பர் என்று சொல்லி புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலி மீது பாய்ந்து வருகிறார் சீமான். ஹசன் அலி ராசபக்சேயைப் புகழ்ந்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், அவர் ராசபக்சேவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர். ராசபக்சேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைமையின் கீழ் இயங்குபவர்.
அதிகாரத்தில் இருக்கும் அவர் தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான் ராசபக்சேவை புகழ்ந்து வருகிறார் என்பதை பாமரனால் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், அதிகாரத்தின் வாசனையைக் கூட நுகராத சீமான் மோடியை புகழ்ந்து பேசியதன் பின்னணியைத் தான் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதிகாரத்தில் இல்லாத போதே சீமான் இப்படி தடுமாறுகிறார் என்றால், ஹசன் அலியைப் போல அதிகாரத்தைச் சுவைக்கும் நிலைக்கு சீமான் வருகிறபோது எப்படி மாறுவாரோ தெரியவில்லை.
சீமானின் பேச்சு சர்ச்சையானவுடன், ‘சீமான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை; மோடியின் நிர்வாகத்தில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சுட்டிக் காட்டினார்; சீமான் எப்போதுமே மதவெறி எதிர்ப்பாளர்தான்’ என்றெல்லாம் வலிந்து விளக்கம் அளிக்கின்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர். அவர்களின் வாதப்படியே பார்த்தாலும் நல்ல விசயம் மோடியிடம் மட்டும் இல்லையே. இவர்கள் முழு மூச்சாக எதிர்க்கும் கலைஞரிடம் கூடத்தான் நல்ல பல விசயங்கள் இருக்கிறது. அதற்காக சீமான் கலைஞரைப் பராட்டுவாரா?
மோடியின் மதவெறியைக் கழித்துவிட்டு, அவரது நிர்வாகத்தில் உள்ள தடையில்லா மின்சாரத்தையும், மதுவிலக்குச் சட்டத்தையும் ஊன்றி கவனிக்கத் தெரிந்த சீமானுக்கு, கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை கழித்து விட்டு, அவரது நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அருந்ததியர் இட ஒதுக்கீட்டையும், முஸ்லிம் இட ஒதுக்கீட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி சட்டத்தையும் கவனிக்கத் தெரியவில்லையே ஏன்?
இத்தகைய நல்ல சட்டங்களை கொண்டு வந்ததால் மட்டுமே சீமானின் பார்வையில், எப்படி கலைஞர் ஒரு முன்மாதிரி முதல்வர் ஆகமாட்டாரோ, அதைப் போலவே சில நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே மோடியும் முன்மாதிரி முதல்வர் ஆகிவிடமாட்டார். இந்த உண்மைகளெல்லாம் நன்றாகத் தெரிந்தும் கூட சீமான் ஒரு முடிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்.
பால்தாக்கரேயில் தொடங்கிய சீமானின் பயணம், இப்போது மோடியில் தொடர்கிறது. அனேகமாக அது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் போய் முடியும்போல் தெரிகிறது.
சீமான் தெளிவற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது பேச்சும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இனம்காட்டி வருகின்றன.
‘வீரநடை’ திரைப்படத்தின் படுதோல்விக்குப் பிறகு, முடங்கிக் கிடந்த சீமானை பெரியார் திராவிடர் கழகத்தின் மேடைகள்தான் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தன. அந்த மேடைகளில் பேசுவதற்காக பெரியாரையும், அவரது தத்துவங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிய அவரை, சுப.வீரபாண்டியன், தியாகு, பெ.மணியரசன், திருமாவளன், ராமதாஸ், கி.வீரமணி போன்ற பெரியாரியவாதிகள் ஆரத்தழுவி வரவேற்றனர்.
பெரியாரியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சீமான், வளர்ந்த உடன் செய்த முதல் வேலை, பெரியாரின் திராவிடத்தை மறுத்தார். பெரியாரின் மொழிக் கொள்கையை எதிர்த்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை இந்துத்துவத்திற்கு எதிராகக் களமாடிய பெரியாரின் வழியைத் தவிர்த்தார். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கிய பெரியாரை மறந்தார்.
சீமான் இப்போது திராவிடத்தைப் பேசுவதில்லை; பெரியாரியத்தைப் பரப்புவதில்லை; இந்துத்துவத்தை தோலுரிப்பதில்லை; சாதி ஒழிப்பு பற்றி மூச்சு விடுவதில்லை. மாறாக, ஆரியத்தை வேரோடு வீழ்த்திய திராவிடத்தை எதிர்க்கிறார். மும்பையில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த பால்தாக்கரேயையும், குஜராத்தில் அதைவிட மேலான பயங்கரத்தை நிகழ்த்திய நரேந்திர மோடியையும் புகழ்ந்துரைக்கிறார். இந்துத்துவச் சிந்தனை கொண்ட சாதி வெறியரான முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு சராசரி அரசியல்வாதியாக காட்சி தருகிறார். கேட்டால் தமிழ்த் தேசியம்; தமிழ்த் தேசியம் என்கிறார்.
சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது.
தமிழராய் பிறந்து, தமிழராய் வாழும் மக்கள் பல்வேறு சமூகக் குழுக்களாக இருக்கிறார்கள். அந்தந்த சமூகக் குழுக்களுக்கென்று தனித் தனியான அடையாளங்களும், கலாச்சார நடவடிக்கைகளும், பண்பாட்டு அசைவுகளும், வட்டார வழக்குகளும் உள்ளன. அதையெல்லாம் மறுத்துவிட்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க சீமான் முயல்கிறார்.
அந்தந்த சமூகங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களின் உணர்வுகளுக்கும், அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காமல், ‘பாட்டன் சொத்து அடமானத்திலிருக்கிறது; மீட்ட பிறகு பேசுவோம்’ என்று சீமான் சொல்லித் திரிவது சிறுபிள்ளைத் தனமானது. இது, ‘நாடு அடைந்த பிறகு தலித் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசுவோம்’ என்று சொல்லி அம்பேத்கரை ஏமாற்றிய காங்கிரஸ் உயர்சாதியினரின் துரோகத்தைப் போன்றது.
சீமான் தமிழ்த் தேசியத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசுகிறாரே தவிர, தமிழ்த் தேசியத்தின் உட்பிரிவுகளாய் இருக்கின்ற தலித்துகளின் பிரச்சனைகளையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ- முஸ்லிம்களின் பிரச்சனைகளையும், இதர தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சனைகளையும் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. விளிம்பு நிலை மக்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் வாழ்நிலை பற்றி அவருக்குப் போதிய புரிதல் இல்லை.
சீமான் எடுக்கும் அரசியல் முடிவுகளும் குழப்பமானதாகவே இருக்கிறது. பிரபாகரனை வீழ்த்த இலங்கை அரசுக்கு கருவிகள் கொடுத்த காங்கிரஸ் அரசையும், அந்த அரசுக்குத் துணை நின்ற கலைஞர் அரசையும் காய்ச்சி எடுத்தவர், ‘பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவையும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரசையும், கலைஞரையும் எதிர்த்த அவர் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஆதரிக்காமலாவது இருந்திருக்கலாம். அவரோ ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சொல்லி ஈழ விடுதலைக்கு புது வழியைக் காட்டினார். 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈழம் என்ற வார்த்தையைக் கூட ஜெயலலிதா உச்சரிப்பதில்லை என்பது தனிக் கதை.
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட அதிமுக அணிக்கு ஆதரவு என்ற போக்கையே சீமான் கடைபிடித்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளவோ, மரியாதை நிமித்தமாக சந்திக்கவோ கூட ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. பின்னர் அதிமுக அணியில் வைகோவுக்கு ஏற்பட்ட கதி சீமானின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியது. வம்பே வேண்டாம் எனக்கருதி, காங்கிரஸ் எதிர்ப்போடு தன் தேர்தல் கடமையை முடித்துக் கொண்டார். அதனால் தான் இம்முறை அவர், இலை மலர்ந்தால் அது மலரும், இது மலரும் என்று எந்த ஆரூடமும் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள். கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்.
முஸ்லிம்கள் என்றால் அவர்களை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது, தலித்துகள் என்றால் அவர்களை சாதிக் கண்ணோட்டத்தோடு அணுகுவது என்ற வகையிலேயே வைகோ போன்றவர்களின் அணுகுமுறை உள்ளது. இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் என்ற வகையில் தலித்துகளையும், முஸ்லிம்களையும் இவர்கள் அணுகுவதில்லை. ஆனால், முதல் வகை தமிழ்த் தேசியவாதிகள் அந்தச் சமூகங்களின் உணர்வுகளை உள்வாங்கியவர்களாகக் களமாடி வருகின்றனர்.
பாஜக வுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, குஜராத் கலவரம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது மோடிக்கு ஆதரவாக முழங்கினார் வைகோ. வாஜ்பாயையும், அத்வானியையும் வானளாவப் புகழும் இயல்புடையவராகவும் அவர் இருக்கிறார். இது பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, ‘பெரியாரும் ராஜாஜியும் போலவே நானும் வாஜ்பேயும்’ என்று விளக்கம் அளித்தார் வைகோ.
இப்போது பால்தாக்கரேயையும், மோடியையும் சீமான் புகழ்ந்தது குறித்து, நாம் தமிழர் இயக்கத்தினரிடம் கேட்டால் அவர்களும் வைகோவைப் போலவே பதிலளிக்கின்றனர்.
பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவைப் போன்றது தானா, ‘வைகோவுக்கும் வாஜ்பேயிக்குமான உறவு; சீமானுக்கும் மோடிக்குமான உறவு’ என்பதை பெரியாரிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.
வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், ஊழலை எதிர்ப்பதிலும், குடும்ப அரசியலை வீழ்த்துவதிலும் காட்டுகிற முனைப்பில் எள் முனையளவு கூட, சாதிவெறியை ஒழிப்பதிலோ மதவெறியை எதிர்ப்பதிலோ காட்டுவதில்லை. மூத்த தமிழ்த் தேசியவாதிகளான வைகோவும், நெடுமாறனும் பயணித்த அதே வழித்தடத்தில்தான் இப்போது, இளைய தமிழ்த் தேசியவாதியான சீமானும் பயணித்து வருகிறார். இப்படியே அவர் போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலில் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும் ஏற்பட்ட நிலைதான் சீமானுக்கும் ஏற்படும்.
இயக்கம் கட்டவும், புகழ் பெறவும் எது பயன்படுமோ அதையெல்லாம் பயன்படுத்துவது என்ற குறுகிய சிந்தனைக்கு சீமான் உள்ளாகியிருக்கிறார். மும்பையில் ‘நாம் தமிழர்’ இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும், தென் மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காகச் சென்ற குறிப்பிட்ட சாதியினர் என்றும், அவர்கள் ஏற்கனவே சிவசேனாவில் அங்கம் வகிப்பவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகையவர்கள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டுமெனில், பால்தாக்கரேயை புகழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதனாலேயே, சீமான் பால்தாக்கரேயை புகழ்ந்தார் என்றும் தெரிய வருகிறது.
சீமானைப் போலவே, மோடியைப் பாராட்டிய அன்னா ஹசாரேயை எதிர்த்து, மூத்த சமூக சேவகர் மேதா பட்கர் இப்படி கூறினார்: ”அன்னா ஹசாரே குஜராத்தில் முஸ்லிம்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடியை ஊழலற்ற நிர்வாகம் தருகிறார் என பாராட்டுகிறார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா நல்ல கட்சி என இந்துத்துவா வாதத்தை முன்வைக்கிறார். ஊழல் என்பது களவு.அதை விடக் கொடுமையான, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட உடந்தையாக இருந்த மோடியைப் பாராட்டும் ஹசாரே, எப்படி சிறந்தவர்?”
அன்னா ஹசாரேயை நோக்கிய மேதா பட்கரின் இந்தக் கேள்வி இந்த சீமானுக்கும் பொருந்தும்.
[சமநிலைச் சமுதாயம் மே-2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]
  • 1
    1
    1
    1
    1
    1
    1
    1
    1
  • 1
    1
    1
    1
    1
    1
    1
    1
    1