வெள்ளி, 3 ஜூன், 2011

தமிழக மக்கள் குடியாட்சி அமைப்போம்!




தமிழகத்தில் இன்னமும் மக்கள் குடியாட்சி முறை நடைமுறைக்கு வரவில்லை. நடைபெற்றுக் கொண்டிருப்பது மக்களுக்கான குடியாட்சியும் இல்லை. நடந்து கொண்டிருக்கிற இப்போதைய ஆட்சி முறை குடியாட்சி முறைதானே என்று பெரும் பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கலாம். அரசும் இதைத்தான் குடியாட்சி என்று பரப்புகிறது. மக்களும் அதையே நம்புகின்றனர்.
வாக்குப் போடுவதன் வழிதானே மக்கள் தங்களை ஆளுகிற அரசைத் தேர்ந்தெடுத்துள்னர். அதன் வழி இது மக்கள் குடியாட்சிதானே என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். அப்படியானால் அரசு என்பதே மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டமன்றமும், நாடாளுமன்றமும் ஆக மட்டுமல்லவா இருக்க வேண்டும். ஆனால் அரசு என்பது அவை மட்டுமா? சட்ட மன்றமும், நாடா ளு மன்றமும் மட் டும் இருந்தால் அரசு இயங்கி விடுமா? அவை இல்லாமலேயே அரசு இயங்கு கிறதே எப்படி?
சட்டமன்ற, நாடாளுமன்றம் மட்டுமே அரசு இல்லை. நீதித் துறையும், ஆளுகைத் துறைகளும் சட்டமன்ற நாடாளுமன்றங்களோடு இணைந்ததே அரசு. சட்டமன்றங்கள் இயங்காமலேயே நீதித்துறையும் நிர்வாகத்துறையும் மட்டுமேஇணைந்து அரசாக இயங்க முடிகிறது. ஆனால் அவை இரண்டும் இயங்காமல் சட்டமன்ற மும், நாடாளுமன்றமும் மட்டுமே அரசாக இயங்க முடியாது. ஆக, இன்றைக்கு இருக்கிற அரசு என்பது அவை மூன்றும் இணைந்ததாகவே இருக்கின்றது.
குடியாட்சிக்கு மூன்று தூண்களாக அவை அடையாளப்படுத்தப்படுகின்றன. நான்காவது தூணாக ஊடகங்களும், இதழியல் துறைகளும் சொல்லப்பட்டாலும், அது ஆட்சி செய்கிற அரசின் துறையில்லை. ஆக அந்தமூன்று துறைகளில் சட்டமன்ற, நாடாளு மன்றத்திற்கு மட்டும்தாம் தேர்தல் நடக்கின்றனவே அல்லாமல் நீதித் துறைக்கும், ஆளுகைத் துறைக்கும் தேர்தல் நடத்தப்படுவதில்லை.
அவற்றில் யார் நீதித் துறை நடுவராக வரவேண்டும், ஆளுகைத் துறையில் அதிகாரிகளாக வரவேண்டும் என்பதையெல்லாம் அந்தந்தத் துறையின் உயர் அதிகாரிகளாக உள்ளோர்தாம் தீர்மானிக்கிறார்கள். அவர்கள், அவரவர்களுக்குச் சார்பானவர்களையும், சாதி, வகுப்புத் தொடர்பினரையுமே தேர்வு செய்து கொள்கின்றனர்.
அவை ஒருபுறம் இருக்க ஒருவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தல் வழி வெற்றி பெற வேண்டுமானாலோ, கோடிக் கணக்கில் பணத்தைச் செலவழிக்க வேண்டியிருப்பதாகவே இன்றைய தேர்தல் நடைமுறைகள் உள்ளன. அப்படிக் கோடிக் கணக்காகச் செலவழிக்கத் தகுந்தவர்தான் போட்டி போட முடிகிறது. அவ்வாறு தொகை செலவழிக்க இயலாதவர், பிற வகையில் செல்வாக்குப் பெற்றிருப்பாரேயானால் அவருக்கு அந்தத் தொகுதியில் உள்ள பணமுதலைகள், முதலாளிகள் பணம் செலவழிக்கத் தாமாகஙேவ முன்வருகின்றனர்.
அத்தகையவருக்கு ஆதரவாகப் பணம் செலவழிக்கிற அந்த ஆளுமையர்கள் அதற்கு மாற்றாகப் பெரும் பெரும் பயன்களை எதிர்நோக்கித்தான் செலவழிக்கிறார்களே அல்லாமல் வெறுமனே செலவழித்திடுவதில்லை.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர் வாகிற வரைத் தனக்கு இசைவானவராக இருக்கும் படியே அந்தத் தொகுதியில் உள்ள பெரும் பெரும் பணமுதலைகளும் பணக்காரர்களும் செய்கின்றனர். எனவே, சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளு மன்ற உறுப்பினராகவோ வெற்றியடைபவர் தொகுதி யில் உள்ள மேற்படி பண முதலைகளுக்கு பணிகிற வராகவும், அவர்களின் தேவைகளை நிறைவு செய்பவராகவுமே செயல்படுகிறார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக வருபவர்கள் அப்பகுதியிலுள்ள பண முதலைகளுக்கு ஆட்படுகின்றனர் என்றால், அமைச்சராகவும், முதலமைச்சராகவும், தலைமை அமைச்சராகவும் வருபவர்கள் நாடு முழுவதுமாகக் கொள்ளையடிக்கும் முதலைகளிடமே தவம் கிடக்கின்றனர். ஆக, மிகப் பெரும் தொழில் முதலைகள், பன்னாட் டுத் தொழில் முதலீட் டாளர்கள் ஆகியோ ரெல்லாம் தங்களுக்கு இணக்கமானவரையே அல்லது இணக்க மான கட்சியையே வெற்றி பெறச் செய்கின்றனர். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர். வெற்றி பெற்றபின் அவர்களின் தேவைக்கேற்ப, வாய்ப்புக் கேற்ப நாட்டின் சமூக, பொருளியல் நிலை களையெல்லாம் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர்.
அரசு திட்டமிடுகிற வரவு செலவுத் திட்ட அறிக்கைகள் கூட அத்தகைய பெரும் பண முதலைகள், பன்னாட்டு நிறுவன ஆண்டைகளின் கலந்தாய்விலேயே நிறைவேற்றப் படுகிறது. ஆக, இன்றைய அளவில் நடக்கிற ஆட்சி முறையை முதலாளிகளின் பண முதலைகளின் நலன்களையே அடிப்படையாகக் கொண்டு ஆட்சி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைய ஆட்சி அமைப்பு வெளி வேடத்தில் தேர்தல் நடத்தப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்படுவதான குடிநாயக ஆட்சிபோல காட்டப்பட்டாலும் அது உண்மையில் மக்களுக்கான குடியாட்சியாக இல்லை. அது முதலாளிகளுக்கான குடியாட்சியாகவே இருக்கிறது. ஆக, குடியாட்சி அமைப்பு முறை என்பதையே இரண்டு தன்மைகளில் பிரித்து உணர வேண்டும்.
ஒன்று, முதலாளிய தலைமையிலான குடியாட்சி அமைப்பு.
மற்றது மக்கள் அனைவருக்குமான மக்கள் குடியாட்சி அமைப்பு.
இந்த இரண்டு வேறுபாடுகளையும் சற்று விளக்க மாக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதை விளக்கமாக விளங்கிக் கொள்ளுகிற போதுதான் மக்கள் தேவைக்குரிய குடியாட்சி அமைப்பு என்பது என்ன? அதை எப்படி நிறுவது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கான இலக்கு நோக்கிச் செயல்பட முடியும்.
இன்றைக்கு அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், இந்தியாவில் எனஇங்கெல்லாம் நடை பெறுகிற ஆட்சி முறை முதலாளியக் குடியாட்சி முறையே. அதாவது அந்தந்தநாடுகளின் பண முதலைகளின் நலன்சார்ந்தது மட்டுமல்லாமல் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கு வழியமைத்துத் தரும் நோக்கில் அமைக்கப் பட்டிருப்பதே அந்த ஆட்சி முறை.
மக்களின் அடிப்படைத் தேவைகள், அன்றாட வாழ்க்கைத் தேவைக்குரிய அனைத்தையும் முதலாளி களே தீர்மானி“கிற வகையான அரசமைப்பாகவே அந்த அரசமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் உடமையாக, அரசுடமையாக இருந்த பல துறைகளை, தொழிலகங்களை, கனிம வளங்களை யெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் முதலாளிகளைக் கொழுக்க வைக்கின்றன. இன்றைக்குள்ள அத்தகைய அரசுகள்.
எளிய தொழில்கள், வணிகங்கள் எல்லாம் கூட நசுக்கப்பட்டு கொழுத்த முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளுமே அவற்றைத் தங்களின் கைகளி லெடுத்து வளம் கொழிக்கின்றன. உலகமயமாக்கம், தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம் எனும் பெயர்களில் பன்னாட்டுக் கொள்ளையர்களும் கொள்ளையடிக்கின்றனர். இப்படியான கொள்ளையடிப்புக்குத் தகுந்த வகை யான அரசாகவே அவர்களின் அரசு அமைக்கப் பட்டிருக்கிறது. ஆக, இத்தகைய குடியசராட்சியை இங்குநிறுவிய வர்கள் யார் என்று அறிந்தால் அது யாருக்கான குடியரசு என்பதை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பெல்லாம் குடியாட்சி முறைகளே நிலவின. பழந்தமிழகம் தொடங்கியே முடியாட்சி முறைகள் நடந்துவந்ததை அறியலாம். தொடக்கத்தில் ஆநிரைக் கவர்தலுக்குரிய குக்குலப் போர்கள் நடந்து அதில் வெற்றி பெறுகிற குக்குலங் களின் தலைமைக்குரியதாகவே அரசுகள் இருந்தன. பின்னர் காடுகளில் பயிரிட்டு முறையாக வளர்ந்த குலவாழ்க்கையும், தொல்குடி போர்களாக உருவெடுத்து, நிலைத்த படை கொண்டும் போரிட்ட அரசு வாழ்க்கை உருவெடுத்தது. அதன் பின்னர் நாடுபிடி போராகவும், பிற நாட்டு வீரர்களைப் பிடித்து வந்து அடிமைகளாக்கி அவர்களை நில அடிமைகளாக்கிய கிழாரிய ஆட்சி முறையும் எனப் பழந்தமிழ் அரசு முறைகள் யாவும் படிப்படியாக அரசு பேரரசு முறைகளாக வளர்ந்து வந்தன.
அப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்த தமிழ்க் குமுகம் வந்தேறிய வேற்றின அரசுகளுக்கு அடிமைப் பட்டது. களப்பிரர் தொடங்கிய பல்லவர், வடுகக் கலப்புற்ற பிற்காலச் சோழர்கள், விசயநகர நாயக்கர்கள், நவாப்புகள், மராட்டியர்கள் என்று தொடங்கி பல்வேறு வேற்றின நாடு பிடி முடியாட்சியின் கீழ்த் தமிழகம் முடங்கிப் போனது. எனவே, நிலக்கிழமை என்பது முற்றும் முழுமையாக நிலக்கிழமையாக அல்லாமல் வேற்றின ஆட்சிகளால் காத்து வளர்க்கப்பட்ட வைதீகம் கற்றுத் தந்த வருண வேறுபாட்டு கடைபிடிகளோடான சாதிய நிலவுடைமையாகவே அதிகாரம் செய்தது.
எனவே, வேளாண்மை மற்றும் தொழில் மீத்தங்களி லிருந்து உருக் கொண்டவணிக வேளாண்மை தோன்ற இயலாமல், இயற்கை விளைப்புப் பொருள்களான சந்தனம், தேக்கு, மிளகு, வாசனைப் பொருள்கள், முத்து, பவளம் உள்ளிட்ட மணிகள் என்பவையே வணிகப் பொருள்களாக இருக்க அன்றைய அம் முடியரசாட்சிக்கு அடங்கியே வணிகங்களும் இருந்தன.
தமிழர்தம் மெய்யியல் கருத்துத் தழுவலோடு வடக்கே வளர்ந்து தமிழகம் நுழைந்த புத்த, சமணத் தோடு கிளர்ந்தெழுந்த வணிக எழுச்சிகளும், பிற்கால நில ஆளுமை மேலாண்மைகளால் நசுக்கப்பட்டன. எனவே தமிழகத்தில் தொழில் பெருக்கத்திற்கான வழிகள் இல்லாமல் போனது. இந்தச் சூழலில் ஐரோப்பியர் சந்தை வணிகர்களாக உள் நுழைந்து, படிப்படியே தொழில்களைப் பெருக்கத் தொடங்கியதோடு, வன்முறையால் தங்கள் அரசுகளையும் அமைத்தனர். அவர்களின் வல்லாட்சிகள், அக்கால நிலவுடை மையாளர்களால் எதிர்க்கப்படவே, அவர்களை அடக்கியும், பணிய வைத்தும் ஆங்கில வல்லரசு கற்றுத் தந்த அரசு முறையே இன்றைக்கு இருக்கிற குடியாட்சி அரசாட்சி முறை. அதாவது இக் கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்த வகையில் நீதித்துறை, நிர்வாகத் துறையுடன் கூடிய சட்டமன்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமான முதலாளியச் சார்புடைய தேர்தல் முறை.
அன்றைய ஆங்கில வல்லாட்சியினர் மக்களிடம் தாங்கள் மக்களாட்சி முறையில் நடப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகச் சட்டமன்றங்களையும், நாடாளுமன் றத்தையும் அமைத்தார்கள். தொடக்கத்தில் அத்தகைய சட்டமன்ற, நாடாளு மன்றங்களிலும் கூட யார் வேண்டுமானாலும் உறுப்பினர்களாகி விட முடியாது. நிலவுடைமை யாளர்களும், கல்வி கற்றோருமே உறுப்பினராகவும், வாக்கு போடவுமான தகுதியாளர்களாக ஏற்கப் பட்டனர். பின்னர் சீக்கியர்களும், இசுலாமியர்களும் போராடி இடஒதுக்கீடு பெற்றனர். தொடர்ந்து தாழ்த்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடும், பெண்கள் பங்கேற்கவுமான இசைவுகளும் பெற முடிந்தது. இறுதியாக 21 அகவையான அனைவரும் வாக்குரிமை பெற போராடித் தகுதி பெற முடிந்தது. பின்னர் இக்கால் அது 18 அகவை ஆனது.
அவ்வாறு வாக்குரிமை அளிக்கப் பெற்றாலும், உறுப்பினராகியிருந்தாலும், ஆட்சியில் பங்கேற்றிருந்தாலும், ஒரு சட்டத்தை நிறைவேற்ற அது சட்டமன்ற நாடாளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்டி ருந்தாலும், அனைத்து முன்வரைவுகளையும் ஆளுநரின், குடியரசுத் தலைவரின் இசைவோடேயே சட்டமாக நிறைவேற்ற முடியும் எனத் தீர்மானித்திருந்தனர். அதன்படி ஆளுநரும், குடியரசுத் தலைவருமாக ஆங்கிலேயர்களோ அமர்ந்திருக்கும்படி அமைத்துக் கொண்டனர். ஆக, அன்றைக்கு ஆங்கிலேய வல்லரசிய ஆளுமை நலனுக்காக அமைக்கப்பட்ட ஆட்சி முறையினையே சிறிதும் மாற்றமில்லாமல் ஆங்கில அதிகாரிகளிடம் இருந்து கற்றுக் கொண்டு இந்திய ஆண்டைகள் தொடரலாயினர்.
இந்நிலையில், இன்றைக்கு இந்தியக் குடியரசாட்சியின் கீழ் இருப்பதாகச் சொல்வதும், மக்கள் நாயக நெறியோடு இயங்குவதாகக் காட்டிக் கொள்வதும் யார் வகுத்த குடியரசமைப்பு? யார் பேசிய மக்கள் நாயக நெறி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அன்றைய ஆங்கிலேய வல்லரசு ஆண்டைகளின் நலன்களுக்கு மட்டுமாக இருந்த அந்தக் குடியாட்சி அமைப்பு முறை இன்றைக்குப் பன்னாட்டு முதலாளி களுக்கும், வல்லரசுகள் பலவற்றுக்குமாக நலன்களுக் கான அமைப்பாக இருந்து கொண்டே இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய வல்லரசு அடிமைக் குடியாட்சி முறையில் தேர்தல்கள் நடத்தப் படுவதே ஏதோ குடியாட்சியின் சிறப்பு என்று வேடம் போட்டுக் காட்டுகிறது இந்தியா. அதே வகையிலேயே குடியாட்சி வேடமிட்டுக் கொண்டிருக்கிறது அமெரிக்காவும். உலகின் எளிய நாடுகளையெல்லாம் நசுக்கிப் பிழைத்துக் கொண்டி ருக்கும் அமெரிக்காவின் ஆட்சி முறை முழுக்க முழுக்க முதலாளிய நலன்களுக்கான குடியாட்சி முறையே அல்லாமல் வேறல்ல.
இந்நிலையில் அமெரிக்காவானது ஏதோ குடியாட்சியில் தளைப்பதாய்ப் பசப்புகிறது. இந்தியாவும் குடியாட்சி நடைபெறும் மிகப் பெரும் நாடென நடிக்கிறது. அண்மையில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் லிபியாவுக்குள் நடக்கும் மக்கள் எழுச்சி யைக் கண்டு குடியாட்சி அமைப்பு முறைக்கான பயிற்சி கொடுக்க இந்தியாவிலிருந்து அதிகாரிகளின் குழு ஒன்று லிபியாவுக்குச் சென்றதுதான். ஆக, குடியாட்சி எனும் பெயரில் முதலாளியத்தால் நடத்தப்படும் நாடகங்களைச் சரிவர விளங்கிக் கொண்டாக வேண்டும்.
இந்நிலையில் குடியாட்சி என்பது எப்படியாக வெல்லாம் வெவ்வேறுபட்ட நிலைகளில் அமைக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சுருக்கமாகவேனும் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக அவர்களால் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் முதலாளியக் குடியாட்சி முறை ஒருவகை. (அதை விரிவாகப் பார்த்தோம்)
முழுக்க முழக்க உழைக்கும் மக்களின் விடுதலை உரிமைகளைத் தலைமைப்படுத்தி அனைத்து மக்களுக்குமான அமைப்பு முறையை உருவாக்கப் போராடிப் பெற வேண்டுமென குடியாட்சி முறை மற்றொரு வகை. மக்கள் குமுகத்திலிருக்கும் விடுதலைத் தேவைக்குரிய பல்வேறுபட்ட வகுப்பினர்களின் நிகராளியரையெல்லாம் இணைத்து ஒரு கூட்டுத் தலைமையை உருவாக்கிப் போராடி அதன் வழி ஒரு குடியரசாட்சி அமைப்புமுறை நிறுவப்படுவது இன்னொரு வகை. ஆக, இந்த மூன்று வகைகளில் எந்த வகை மக்களாட்சி முறை இக்கால் தமிழகத்திற்குத் தேவை என்பதை ஆய்ந்தாக வேண்டும்.
இன்றைய தமிழகம் இந்திய அரசின் கீழும் பன்னாட்டு நிறுவனங்களின் கீழும் அடிமைப்பட்டி ருக்கிறது. அவ்வாறு அடிமைப்பட்டிருப்பதோடு, தமிழகத் தில் நடைபெறுகிற குடியரசு ஆட்சி முறை என்பதோ இந்திய ஆண்டை அதிகாரத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்காகவும், ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளியக் குடியாட்சி முறை கொண்டதாக இருப்பதை அறிந்தோம்.
இத்தகைய அரசமைப்பு முறை பன்னாட்டு மற்றும் இந்திய முதலைகளின் கொள்ளைக்கும், சுரண்டல் களுக்கும் வழியமைத்துத் தருகிற அரசமைப்பு முறையாக இருப்பதால் அதை உண்மையான மக்களாட்சி முறையாக ஏற்க முடியாது.
அடுத்து, உழைக்கம் மக்களின் தலைமையில் அமைக்கப்படும் குடியாட்சி முறை தமிழக நிலையின் இன்றைய தேவைக்குரியதாக இல்லை. இன்றைய தமிழகம் இந்திய அரசிடமிருந்தும், பன்னாட்டு வல்லரசுகளின் ஆளுமை மற்றும் சுரண்டல்களிலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டுவதே முதல் பணியாக இருக்கிறது. இந்த விடுதலை தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்கு மட்டுமே தேவையான விடுதலை இல்லை. மேலும், உழைக்கும் மக்கள் தங்கள் தலைமையின் கீழ் முன்னெடுக்கும் குடியாட்சி அமைப்போ ஓர் ஒப்புறவிய (சோசலிச)க் குமுகத்தைப் படைப்பதற் கான தேவையையும் கொண்டது. ஆனால் தமிழகத்தின் இன்றைய இலக்கு, இந்திய அரசிடமிருந்தும், பன்னாட்டுக் கொள்ளையிலிருந்து மான விடுதலையை நோக்கியதாகவே இருக்கிறது. அதன் அடுத்தக் கட்டமே ஓர் ஒப்புரவிய இலக்கு நோக்கியதாக இருக்க முடியும்.
எனவே, விடுதலை இலக்கைத் தேவை நோக்க மாகக் கொண்ட அனைத்து வகுப்புகளையும், இணைத்து அவ் விடுதலையைநோக்கி வழி நடத்திச் செல்லக் கூடிய ஒரு கூட்டுத் தலைமையே இன்றைக்குத் தேவையாக இருக்கிறது. தொழிலாளர்கள், உழவர்கள், சிறு நிலவுடை மையாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், தேசிய முதலாளிகள், உதிரித் தொழிலாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல நிலை வகுப்பினரையும் முதன்மை இலக்கு நோக்கி இணைக்க வேண்டியிருக்கிறது.
இந்திய அரசாங்கத்திற்குரிய அதிகாரங்கள் உடைமைகள் மட்டுமல்லாது பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் உடைமைகள் அனைத்தையும் தமிழகத்திற்குரியதாக ஆக்க வேண்டியதே முதல் கடமை ஆகிறது. இந்திய அரசதிகாரத்தின் காலூன்றல்களை அறுத்தெறிவதும், வெளிநாட்டுக் கொள்ளையர்களை வெளியேற்றுவதும் என்பதே முதல் பணிகளாகின்றன. மற்றபடி, ஒப்பரவிய நோக்கில் பொதுப்பட முதலாளியத்திற்கு எதிராகவோ, தனிச் சொத்துட மைக்கு எதிராகவோ ஆன நோக்கங்கள் யாவும் இரண்டாவது மூன்றாவது எனத்தொடர் நிலைப் பணிகளாகத்தான் இருக்குமே அல்லாமல் அவற்றை இன்றைய முதல் பணிகளாக எண்ண முடி யாது.
இந்நிலையில், இன்றைய முதல் நிலைத் தேவைக் குரிய கூட்டுத் தலைமை குறித் தும் அதன் வழி நிறுவத் திட்ட மிடப்படும் மக்கள் குடியாட்சி அமைப்பு குறித்தும் மேலும் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தேசத்தை விடுதலை செய்வது என்பதே அந்தத் தேசத்தின் புரட்சி மயக் கட்சியின் இலக்கு எல்லையாக இருக்க முடியாது.
விதலையைப் பெற்றெடுப்பது எவ்வாறு என்று திட்டமிடுவதும், திட்டமிட்ட வகையில் தேசத்தை விடுதலை செய்வதும், விடுதலை செய்த தேசத்தைக் காப்பாற்றுவதும், காப்பாற்றப்படும் தேசத்தில் உண்மையான மக்களாட்சியை நிறுவுவதும், மக்க ளாட்சி நிறுவப்பட்ட தேசத்தில் தனிச் சொத்துடமை யைப் படிப்படியாக மறுத்து ஓர் ஒப்புரவிய (சோசலிச) அரசருவாக்கத்தை நிறுவுவதும், தொடர்ந்து பொதுவுடைமைக் குமுகு அமைப்பு வளர்ச்சி கொள்ள அடித்தளமிடுவதுமான வரை அந்தத் தேசப் புரட்சிமயக் கட்சிக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு.
எனவே, புரட்சிமயக் கட்சி செய்ய வேண்டிய பணிகள் என்ன? அவற்றை யார் யாரைக் கொண்டெல்லாம் செய்வது? இலக்கு எல்லைக் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? அவற்றை எப்படி, யாரைக் கொண்டு செய்வது என்பவற்றில் எல்லாம் மிகத் தெளிவோடு இயங்கியாக வேண்டும். ஏற்கனவே பார்த்த வகையில் ஒரு தேசத்தின் விடுதலை அந்தத் தேசத்தில் உள்ள பரந்துபட்ட பெரும்பான்மை மக்களின் தேவைக்குரியதாகவே இருக்கிறது. பல்வேறுபட்ட வகுப்பினர் ஒவ்வொருவரின் விடுதலைத் தேவை அளவீடும், அதற்காக அவர்கள் பங்காற்றும் அளவும் வெவ்வேறு பட்டவையாக இருக்கின்றன. எனவே அவற்றையெல்லாம் அறிந்து அனைத்து வகுப்பு (வர்க்க) சார்ந்த மக்களையும் அணி அணியாக இணைத்துக் கூட்டுத் தலைமைக்குரிய புரிதலோடும், பண்போடும் தேச விடுதலைக்கென அளாவிய ஒரு முன்னணியைக் கட்டி எழுப்பியாக வேண்டும்.
அவ்வாறு முகாமை வாய்ந்த அந்த முன்னணியை நீண்ட காலத் திட்டத்தோடும் அக்கறையோடும் கட்டுகிற பொறுப்பும் கடமையும் அத் தேசத்தின் புரட்சிமயக் கட்சிக்கு இருக்க வேண்டும். மாறாக, அப்புரட்சிமயக் கட்சி தன்னளவில் அது உறுதியாகக் கொண்டுள்ள ஒப்புரவியக் காலத் தேவைக்காக உழைக்கும் மக்களின் தலைமை அரசியல்தான் தேவை என்பதாகத் தேச விடுதலைக் குரிய முதற்கட்டச் சூழலிலேயே அதைவலியுறுத்து வதும் நடைமுறைப்படுத்த முனைவதும், புரட்சிக்கு மட்டுமன்று, விடுதலைக்கும் முட்டுக்கட்டைப் போடவே செய்யும்.
மற்றபடி தேச விடுதலைக்கான கூட்டுத் தலைமை என்பதை உழைக்கும் மக்களின் (பாட்டாளியத்) தலைமைக்குரிய நெறியோடு கொண்டு செலுத்துவது என்பது வேறு, உழைக்கம் மக்களின் தலைமையையே வலியுறுத்துவது என்பது வேறு. எனவே, அத்தகைய உழைக்கும் மக்களின் தலைமைக்குரிய அரசியல் நெறியோடு தேச விடுதலையை முன்னெடுக்க வேண்டுமானால் தேச விடுதலையை முன்னெடுத்துப் போராட முனைகிற அனைத்து வகுப்புகளின் (வர்க்கங்களின்) கூட்டுத் தலைமையோடான முன்னணியை உருவாக்க வேண்டுவதே கட்டாயமாகின்றது. அத்தகைய முன்னணி வழியான முயற்சியாலேயே உண்மையான தமிழக மக்கள் குடியரசை நிறுவுவதற்கான தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் நடந்தேற முடியும்.
தமிழ்த் தேச மக்கள் குடியரசு 
அவ்வகை முயற்சியுனூடாக நிறுவப்படுகிற தமிழ்த் தேச மக்கள் குடியரசு, இன்றைய முதலாளியக் குடியாட்சி அமைப்பிலிருந்து எவ்வகையிலெல்லாம் வேறுபட்டதாக இருக்கும் என்பதையும் மேலோட்ட மாகவாவது தெரிந்திருக்க வேண்டும். இந்திய அரசிடமிருந்து தமிழகம் முழுமையாக விடுதலை பெற்று விடுவதால் தமிழ்த் தேசம் முற்றுரிமைகொண்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.
ஒரு முதலாளியக் குடியாட்சியில் இருக்கிறபடி நடுவப்படுத்தப்பட்ட வகையில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்காமல், அனைத்துத் துறைகளிலும், அனைத்து உரிமைகளும் பரவலாக்கப்படும்.
நடுவப்படுத்தப்பட்ட சட்டமன்றம், நடுவப்படுத் தப்பட்ட தேர்தல் முறைகள் அவற்றில் நடக்கும் ஊழல்கள் என்றில்லாமல், ஒவ்வொரு நகரம், வட்டாரம், மாவட்டம் எனும் அரங்குகளிலே தேர்தல் களும் அதிகார நடுவங்களும் நிறுவப்படும். அவற்றிலிருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் நடுவக் குழுக்களே நடுவப் பணிகளில் பொறுப்பேற்கும்.
நீதிமன்றங்கள் தனி ஒருவரின் தீர்ப்புக்குரியதாக இல்லாமல் மக்கள் அணிகளும் உள்ளடக்கப்பட்ட குழுக்கள் வழியான மக்கள் நீதிமன்றங்களாகவே செயல்படும். நடுவே குவிக்கப்பட்ட மேலிருந்து கீழான நிலையுள்ள நிர்வாகத் துறை மாற்றி அமைக்கப்பட்டு கீழிருந்து மேலான நிலையில் அதிகாரம் பரவலாக்கப்படடு விரிவுபடுத்தப்படும். வானூர்தி, கப்பல், தொடர்வண்டி, பேருந்து போக்குவரத்துகள், தொலைத் தொடர்புகள், தொழில்கள், கனிம வளங்கள், உள்ளிட்டவை படிப்படியாக தனியார் துறையிலிருந்து முழுக்க மக்களாட்சிக்குரிய அரசுத் துறையாக்கப்படும். மருத்துவத்தில் தமிழ் மருத்துவத்தின் மரபு சார்பு நிலைக்கும் பிற மாற்று மருத்துவ முறைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு முழுக்க முழுக்க இலவயமாக அரசாலேயே ஏற்கப்படும்.
அனைவருக்கும் ஒரே தரமான இலவயக் கல்வி என்கிற வகையில் உயர் தரமான தாய்மொழிக் கல்வியைத் தர அரசே பொறுப்பேற்கும். நில உச்சவரம்புகள் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு கூட்டுப் பண்ணை முறையில் உழவு முறைகள் பேணப்படவும் முதன்மை நிலைத் தொழிலாக மதிக்கப்பட்டு உற்பத்தி உயர்த்தப்படவும் செய்யும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் எல்லாம் அரசின் முழுக் கட்டுப்பப்டடில் முதன்மைக்கொடுக்கப் பட்டுப் பேணப்படவும் அனைவர் தேவைக்கும் உரிய வகையில் நீர்த் தேக்கங்கள் ஒழுங்கமைக்கப்படும். தமிழகத்தின் உழவு மற்றும் தொழில் உற்பத்திகள் இயற்கை வளங்கள் என அனைத்தும் முழுக்க முழுக்கத் தமிழகத்திற்கே என ஆக்கப்படுவதால் தமிழகம் முழுமையான வகையில் தன்னிறைவு பெறும்.
தமிழக மக்களின் முழுத் தேவைகளுக்கும் முதலுரிமை கொடுக்கும் நிலையில் அனைத்து உற்பத்திப் பொருளும் அளவிடப்பட்டு எஞ்சிய வையே பல நாடுகளுக்கும் வணிகப் பொருளாக்கப் பட்டு, தமிழகத்திற்குத் தேவையானவை பெறப்படும்.
பன்னாட்டு நிறுவனங்களின் மூலப் பணத் தொழில்கள், பொருளியல் மண்டலக் கொள்ளை யடிப்புகள், ஆழ்கடல் மீன்பிடிப்புகள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் எவ்வகை உடன்பாடுகளுக்கும் ஆட்படாமல் நீக்கப்பட்டு, தமிழகத்திற்கே உரிமையாக்கப்படும். அவற்றில் தமிழகத்திற்குக் கேடான அணுமின் நிலையங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு நிறுத்தப்படும்.
தமிழகத்தின் வாழ்வியல் முறைகளைப் பாழடித்துக் கொண்டிருக்கிற இந்தியப் பார்ப்பனிய மற்றும் வல்லரசிய வக்கிர வெறியூட்டல் கொண்ட பண்பாடுகள் முற்றாகத் தடை செய்யப்படும். மது உள்ளிட்ட உடல் நலக் கேடான மயக்கப் பொருள்கள் அனைத்தும் தடை செய்யப்படும். முதலாளிய ஆண்டைகளுக்குரியதாக இல்லாமல் மக்களின் வாழ்வியல் தேவைக்கான அறிவியல் ஆக்கங்கள் பெருமளவில் வளர்க்கப்படும்.
ஆக, இதன்படி மக்கள் குடியாட்சி மாண்பு காக்கும் வகையில் மக்கள் அணிகளின் படி நிகராளிகளைக் கொண்ட மக்கள் பேராயங்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக மக்கள் குடியாட்சி தமிழகத்தில் நிறுவப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக