தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்கள் உள்ளன, அரசியல்க்கட்சிகள் எல்லாமே தேர்தலுக்கான தத்தமது வியூகங்களை மிகவும் இரகசியமாக அமைத்துக்கொண்டிருக்கின்றன. ஆளும் திராவிடமுன்னேற்றக்கழகம் மட்டும் புதிதாக எந்த மாற்றமுமில்லாமல் ஏற்கெனவே கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது.

2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டமைத்து தேர்தலை சந்தித்திருந்த மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளிமக்கள் கட்சி, நடப்பு ஆட்சியில் பங்கு வேண்டாம் எனக்கூறிக்கொண்டபோதும் வேறு சலுகைகளை பெற்றுக்கொண்டு தனது இருப்பையும் உறுப்பினர் தொகைகளையும் உறுதிப்படுத்திக்கொண்டார்.,  இடையில் 2009ல் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஈழ இறுதியுத்தத்தின்போது காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுப்போகும் என்ற பரவலான கருத்தை மனதில்க்கொண்டு  நடந்த பாராளுமன்றத்தேர்தலின்போது அ,அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்டு பாமக படுதோல்வியடைந்திருந்தது. இன்று மீண்டும் திமுகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடத்தயாராக இருப்பது தெரிகிறது.

எது எப்படியிருப்பினும் வரும் சட்டசபைத்தேர்தலின் வெற்றி தோல்வியை இலங்கைப்பிரச்சினைதான் தீர்மானிக்கும் என்பதை எல்லாக்கட்சிகளும் நன்கு அறிந்தே இருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் திமுக மட்டும் தனது இனாம்களையும் இலவசங்களையும் சாதனைகளையும் பிரச்சாரம் செய்தே வெல்லவேண்டிய நிலையில் இருக்கிறது. கருணாநிதி தனது இலவசத்திட்டங்களும்  தேர்தல்காலத்தில் ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணமும்  பொலிஸாரின் அடக்குமுறைகளையும் சேர்ந்து தனது கட்சியை வெற்றிபெற வைக்கும் என்று நம்புகிறார். அதற்கான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நகரப்புறங்களிலுள்ள மக்கள்தான் ஈழ இன அழிப்பை உணர்ந்து அறிந்திருக்கின்றனர். கிராமப்புறங்களில் அப்படியல்ல, விகிதாசாரப்படி பார்த்தால் 20/30 விழுக்காடு மக்கள் தொகையினர்தான் நகரப்பகுதிகளில் ஈழப்பிரச்சினையை அறிந்துணர்ந்து ஆளும் கட்சியை எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர். கிராமப்புறமக்கள் பலருக்கு ஈழ படுகொலைகள் பற்றித்தெரிந்திருந்தாலும், வறுமையும் வாழ்க்கைப்போராட்டமும் கால ஓட்டமும் கட்சிக்காரர்களின் மூளைச்சலவையும் அவர்களை தடுமாறவைத்து செய்வதறியாது திகைக்க வைத்திருக்கிறது.

கருணாநிதியின் குறியெல்லாம்  செம்மொழி மாநாடு, மானாட மயிலாட, சினிமா விழாக்கள், பாசத்தலைவனின் பாராட்டுவிழா, இலவசங்கள், இளைஞன் திரைப்படம் போன்றவற்றால் மூடி மறக்கவைக்கப்பட்டிருக்கும் ஈழப்பிரச்சினையை, எவரும் எக்காரணங்கொண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்தக்கூடாது என்பதுதான்.   மறக்கடிக்கப்பட்டிருக்கும் அந்த படுகொலைகளை ஞாகபப்படுத்தினால் புதிதாக புறப்பட்ட ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டும் சேர்ந்து தனது இருப்புக்கு குந்தகமாக அமையும் என்பதே கருணாநிதியின் பயமெல்லாம். அதன் எதிர்த்தாக்கம்தான் ஈழ ஆதரவாளர்களின்மேல் பொலீஸை ஏவி தனது இரும்புப்பிடியை தொடர்ந்து இறுக்கிக்கொண்டிருக்கிறார். சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபெறும் பேரணிகள் கூட்டங்களை ஊடகங்களின் நெருக்கடி காரணமாக ஓரளவுக்கு அனுமதிக்கும் கருணாநிதி கிராமப்புறங்களில் எந்த ஒரு சிறு அசைவையும் அனுமதிக்க மறுப்பதைக்காணலாம்.

ஈழ ஆதரவாளரான பேராசிரியர் கல்யாணி அவர்கள் கடலூரில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தியதற்காக 22 ம் திகதி சனி, கடலூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட பலபேரை கைது செய்த காவல்துறை, பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட முக்கியமான 10 பேரை சிறையில் அடைத்துள்ளது.   அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டது, கலவரத்தை வேண்டுமென்றே தூண்டுவது, பொது ஊழியரின் உத்தரவை மீறுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்திற்கு ஆரம்பத்தில் கருணாநிதியின் அரசால் உள்நோக்கத்தோடு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றபின்னே கல்யாணி அவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார். இருப்பினும் வேண்டாப்பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்பதுபோல கருணாநிதியின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

கருணாநிதியும், மத்திய அரசும், தமிழக மக்கள்மீதும் மீனவர்கள்மீதும். மாற்றான்தாய் மனப்பாண்மையுடன் வேண்டாவெறுப்பாக நடந்துகொள்ளும் விதத்தைப்பார்த்த இலங்கை அரசும்  படையினரும் தமது பங்கிற்கு கிள்ளுக்கீரைகளாக அடுத்தடுத்து கடலில் தமிழக மீனவர்களை கேட்பாரற்று கொன்று கொண்டிருக்கின்றனர், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் உலகில் எங்கும் நிகழாத தொடர்கதையாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டி சமீபத்தில் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி கண்துடைப்பு கண்டனம் தெரிவித்து.   பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வழக்கம்போல் கடிதம் எழுதினார்.  . இந்தநிலையில் சிங்கள கடற்படை கொடூர தாக்குதலுக்கு வேதாரண்யம் மீனவர் ஒருவர் மீண்டும் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவக்கிராமத்தை சேர்ந்த ஊனமுற்றவரான ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கிறார்.

22 ம் திகதி சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கடலில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது மோதிச்சேதப்படுத்திய சிங்கள படையினர். மீனவர்களை அடித்து துன்புறுத்தி கடலில் தள்ளிவிட்டு நீந்தத்தெரியாது என்று கடலில் குதிக்க மறுத்த ஊனமுற்றவரான ஜெயக்குமார், என்ற 28 வயதான இளைஞரை கயிற்றால் கட்டி கழுத்தை இறுக்கி கொடூரமாக கொன்று கடலில் வீசிவிட்டு சென்றிருக்கின்றனர்.

வழமைபோல மீடியாக்களுக்கு படங்காட்டிய மத்தியமந்திரி பிரணாப் முகர்ஜி, வழமைபோல இதுபோல் இனிமேல் நடக்காது என்றுகூறி வரும்சட்டசபை தேர்தல் தொகுதிப்பங்கீடு பற்றி கரிசனையுடன் கருணாநிதியோடு பேசிவிட்டு சென்றிருக்கிறார். கருணாநிதியும் மன்மோஹனுக்கு கடிதம் எழுதிவிட்டு, தனது கதை வசனத்தில் உருவாகி குஷ்பு, மீராஜஸ்மின், நமீதா, ஆகியோர் நடித்த இளைஞன் படத்திற்காக தனக்கு பாராட்டு விழா நடத்தும்படிகேட்டு அதற்கு தன்னை தயார்செய்துகொண்டிருக்கிறார். ஆனால் ஏழை மீனவப்பெண்ணான முருகேஸ்வரி தாலியறுக்கப்பட்டு விதவையாக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்து மீனவர்களின் துன்பம் கண்டு துடித்த குற்றத்திற்காக, செந்தமிழன் சீமான் ஐந்து மாதங்கள் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார், இப்போ சீமான் வெளியே வந்திருந்தாலும் அவர் எந்தவிதத்திலும் மக்களை கிளர்ச்சி ஏற்படும் வகையில் கூட்டம் கூட்டி பேசக்கூடாதென்ற நிபந்தனை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது,  இந்த நிலையில் குரல் கொடுப்பதற்கும் தமிழர்மத்தியில் எவரும் முன் வரமுடியாது. இடியமீனின் ஆட்சியில் நடந்த அராஜகம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் பதவி வெறியும் மக்கள் விரோதமும் சிலவருடங்களாக எல்லைமீறி தொடர்கிறது, கருணாநிதியின் வயோதிபமும் சிந்தனை ஆற்றல் குறைவும் குழந்தை தனத்திற்கு இட்டுச்சென்றிருப்பதாக சில ஊடகங்கள் பூடகமாகத்தெரிவிக்கின்றன. வெளிப்படையாக சொல்ல பலர் அஞ்சுவதும் தெரிகிறது,

திமுக வை சுற்றிப்படர்ந்திருக்கும் ஸ்பெக்ரம் ஊழல்க்குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக்கப்பட்ட ஆ. ராசா, மற்றும் பாதிரி ஜெகத் கஸ்பர், ஆகியோருடன் மகள் கனிமொழியின் தவறான உறவுகள் பற்றி மகன்மார்களான அழகிரி, ஸ்ராலின் ஆகியோரின் கண்டிப்பு, கட்சிக்குள் அழகிரியின் மீறிய தலையீடு, வயோதிபம், மீண்டும் முதலமைச்சராகாமல் தோற்று, பதவி பறிக்கப்பட்டபின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக சிறை செல்ல நேர்ந்துவிடுவோமோ, என்றபயம், எல்லாம் சேர்த்து கருணாநிதியை சிலநாட்களாக உறக்கமில்லாமல் செய்திருக்கிறது, இந்த நேரத்தில் தனது கதை வசனத்தில் சமீபத்தில் உருவான இளைஞன் திரைப்படத்தை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டு உறக்கமில்லாமல் இருந்திருக்கிறார், இதன் பலன் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து தடுமாறியிருக்கிறார், எப்போதும் ஒன்றாக இருந்து நகைச்சுவையை அள்ளிவிடும் துரைமுருகனுக்கும் கேட்கும் திறன் கெட்டுப்போயிருக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் முதல்வரின் நடவடிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அன்பழகன் கருணாநிதியையும் விஞ்சிய முதுமை காரணமாக எதையும் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை, கருணாநிதியின் பிடிவாதமும் மந்தமான போக்கும் மகன்மார்களான அழகிரி, ஸ்ராலின், ஆகியோரை அச்சப்படுத்தியிருக்கிறது இருந்தும் தேர்தல்வரை எதையும் வெளியில் கசியாமலிருப்பதற்காக அவர்கள் கருணாநிதியுடன் விவாதிப்பதையும் மீடியாக்களின் பார்வையை தவிர்ப்பதற்கும் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் அணுகுமுறை, மத்திய அரசுமீதும் மானில அரசுமீதும், மக்களை என்றுமில்லாத விரக்திநிலைக்கு தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் இந்தியர்கள்தானா?,  இந்தியாவில்த்தான் இருக்கிறோமா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனிடமும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது, தமிழ் நாட்டைப்பொறுத்தவரை பிரிவினைக்கான சாதகமான புறச்சூழ்நிலை குறைவாகக்காணப்பட்டாலும், நடைபெறும் அராஜகங்களும் கடல்ப்படுகொளைகளும்  மக்கள் இந்தியாவிலிருந்து பிரிந்திருப்பவர்களாகவே உணரத்தலைப்பட்டுள்ளனர், சில கட்சிகள் பிரிவினைவாதத்தை நோக்கியகருத்துக்களை வெளிப்படையாகவே பேசுகின்றன. இரும்புத்திரை நாடு எனப்பெயர்பெற்ற உலகப்பெரும் வல்லரசான சோவியத் ஒன்றியமே மகா ரஷ்யர்களின் மாற்றந்தாய் மனப்பாண்மையால் உடைந்துபோன வரலாறுகள் உண்டு.

சிலவருடங்களாக வல்லரசுக்கனவில்  மக்களை வைத்திருக்கும் இந்திய அரசியல்க்கட்சிகள், வல்லரசுக்கான தகுதிகள் என்ன என்பதை அறிந்தவர்களாக இல்லை, வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் தாராள பொருளாதாரக்கொள்கை காரணமாக, இந்தியா ஒரு நல்ல இடத்தில் இருக்கின்றதென்பது உண்மை, இந்தியாவிற்குள் படையெடுத்திருக்கும் பன்நாட்டுக்கொம்பனிகளின் சலசலப்பை தனது வளர்ச்சியாக மக்களுக்கு காட்டிக்கொள்ள ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். நாட்டின் கல்வி, திட்டமிடல், வறுமை ஒழிப்பு எதற்கும் முக்கியத்துவம் காணப்படவில்லை, இவற்றுடன் இந்தியப்பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை, 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிரத்து 175 விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர். தமிழகத்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். இவையனைத்தும் ஆளும் அரசின் கையாலாகாத்தனமாகவே நோக்கலாம்,

இந்திய நீதித்துறை சாகும் தறுவாயில் இருக்கிறது, சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய காவல் துறை ஆட்சியாளர்களின் அடியாட்களாகவும், மக்களிடம் பறித்து தின்னுபவர்களாகவும் அச்சமூட்டுகின்றனர், கல்விக்கூடங்கள் பெருத்த அரசியல்வாதிகளின் வியாபர மையங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன, , இந்தியாவின் எந்தத்துறையை நோக்கினாலும் ஊழல், லஞ்சம், இந்நிலையில் அப்துல் கலாம் அவிழ்த்துவிட்ட வல்லரசு கனவு பட்டிமன்றங்களிலும் மக்கள் அரங்கங்களிலும் வெற்றிகரமாக விவாதிக்கப்படுகிறது, சில இடங்களில் சில அப்பாவிமக்கள் இந்தியாவா சீனாவா அடுத்தவல்லரசு என்றும் விவாதிப்பதைக்காணலாம்.

சீனா ஏற்கெனவே பலவருடங்களுக்கு முன் வல்லரசாகி (வீடோ) நிராகரிக்கும் அதிகாரம் கொண்ட  அதி உச்சத்திலிருக்கும் நாடு என்பதை பலர் அறியாமலே இருக்கின்றனர், சீனாவின் சட்டங்கள் இந்தியாவின் உழுத்துப்போன 17ம் நூற்றாண்டுச்சட்டங்களைப்போலல்லாமல் மிகவும் கூர்மையானவை, லஞ்சம் ஊழல் சீனாவில் கொலைக்குற்றத்திற்கு சமமாக பார்க்கப்படுகிறது, இந்தியாவின் சட்டங்களும் நீதித்துறையின் லட்சணங்களும் கருணாநிதியின் குடும்ப அரசியலிலும், சோனியாவின் சவாதிகார ஆட்சியிலும், லல்லு பிரசாத் யாதவ்வின் மாட்டுத்தீவனத்திலும் தெரிந்து கொள்ளக்கூடியதே.

டில்லி, மும்பாய், கல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, போன்ற பெருநகரங்களைத்தவிர, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்குள்ளும் 7 யூனியன் பிரதேசங்களுக்குள்ளேயும் ஏகப்பட்ட வளற்சியற்ற பழங்குடிகளும் ஏழைகளும் படிப்பறிவில்லாதவர்களுமுண்டு.  அவர்களின் வாழ்க்கை காட்டுவாசிகளை ஒத்ததாகவே பாம்புடனும், பல்லி, ஓணான், போன்றவற்றுடனும் தொடர்வு கொண்டதாகவே காணலாம், சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் நான்கு ஐந்து வளர்ச்சியடைந்த மானிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் படித்தவர்களையும் காட்டி இதுதான் இந்தியாவென அரசியல்வாதிகள் காட்ட முயலுவதுண்டு, பரந்துபட்ட வளம் குறைந்த ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் நிலப்பரப்புக்களிலும் தமிழ்நாடு கொங்குமலைப்பகுதிகளிலும் வறியவர்களும் பழங்குடியினரும்,  போக்குவரத்துக்கான தெரு வசதிகூட இல்லாமல் காட்டுவாசிகளின் வாழ்க்கை வாழ்வதைக் காணலாம், அந்த இடங்களில் வாழும் மக்களுக்கு தமது கிராமங்களைத்தவிர வேறு எதுவும் தெரியாது, இந்தியா என்றொரு அரசு இருப்பதுகூட பலர் அறிந்திருக்கவில்லை.newsnews

அப்படிப்பழக்கப்பட்ட மக்கள்தான் இந்தியாவில் அதிகம் வாழுகின்றனர். இவற்றுள் உண்மையான பழங்குடியினர் 8 விழுக்காட்டினர் இருப்பதாக் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகையில் 42 சதவீதம்பேர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகவும். 12 சதவீத மக்கள் வாழ்வுக்கான ஆதாரமற்று இருப்பதாகவும். இன்னும்பலர் நகரங்களில் வறுமையுடன் இருப்பதாகவும் அறியப்படுகிறது. உலக சனத்தொகையில் 3 ல் ஒருபகுதி வறுமையானவர்கள் இந்தியாவில்த்தான் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இந்தநிலையில் இந்தியாவின் வல்லரசுக்கனவு நகைச்சுவையான ஒன்று மட்டுமே.

நடைமுறை அப்படியிருக்கும்போது ஏன் இந்திய அரசியல்வாதிகள் 2020 ல் இந்தியா வல்லரசு என்று கதை கட்டிவிட்டுக்கொண்டிருக்கின்றனர், என்று எண்ணத்தோன்றும். நாட்டின் வறுமையும் சாதிக்கொடுமைகளும், பொருளாதார ஏற்ற இறக்கங்களும், ஒவ்வொரு மானிலங்களுக்கும் அடுத்தமானிலங்களால் உண்டாகும் நீர் பரிவர்த்தன தடை, வளங்கள் பகிர்ந்துகொள்ளமுடியாத இன மொழிப்பகை, ஆகியவற்றை வைத்து ஒவ்வொரு மானிலமும் பிரிந்துபோக எத்தனிக்கலாம். இந்த எண்ணம் ஒருமானிலத்தில் கருக்கொண்டுவிட்டால் படிப்படியாக எல்லா மானிலங்களையும் பற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு. அந்த எண்ணத்தை நீர்த்துப்போக உருவாக்கப்பட்ட மாயமான்தான், இந்திய வல்லரசு,

வல்லரசு ஆகிறது என்ற மாயையைத்தோற்றுவித்து காலத்துக்கு காலம் சில றொக்கற்றுக்களையும் ஏவி, பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் சீனா? போன்ற நாடுகளை நாங்களும் ஆயுதபலத்தில் ஸ்டெடியாக இருக்கிறோம் எனக்காட்டுவதோடு, இந்திய பாமரனுக்கு நம்பிக்கையை கொடுப்பதுபோன்ற ஏமாற்றுத்திட்டம்தான் வருகிறது வல்லரசு என்ற மாயை எனக்கொள்ளமுடியும்,

இலங்கை இந்தியக்கடற்பரப்பில் நேற்றுவரை கொல்லப்பட்ட மீனவர்களின் தொகை கிட்டத்தட்ட 540 க்கு மேலாகிவிட்டது தமிழக அரசாங்கத்தாலோ இந்திய மத்திய அரசாங்கத்தாலோ அந்தக்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் ஏனென்று கேட்கும் திராணி கூட இல்லை, குறைந்தபட்சம் ராஜபக்க்ஷவையோ, அந்தநாட்டின் வெளியுறவு அமைச்சரையோ, இன்னும் கீழேபோய் ஸ்ரீலங்கவுக்கான தூதுவரையோ கண்டித்து விசாரணை செய்யக்கூடிய தைரியம் இந்தியாவுக்கு இருப்பதாகத்தெரியவுமில்லை,

சிறிய ஒரு நாடானாலும் ராஜபக்க்ஷவின் துணிச்சல் இந்திய அரசியல்வாதிகள் எவருக்கும் இல்லை என்பதே வெளிப்படையாகத்தெரிகிறது, இவ்வளவு இனப்படுகொலைகளை புரிந்துவிட்டு கடற்பரப்பில் இந்தியநாட்டு மக்களை கொன்றொழித்துவிட்டு எந்தச்சலனமுமில்லாமல் இந்தியாவுக்குள் வந்து சுவாமிதரிசனமும் சுற்றுலாவும் செய்துகொண்டு போகிறான் ராஜபக்க்ஷவும் அவனது சகோதரர்களும், இந்தியா பல்லைக்காட்டிக்கொண்டு பேயறைந்ததுபோல் நிற்கிறது,

இந்தப்போக்கை தமிழகத்து மக்கள் தொடர்ந்தும் சகிக்கத்தயாராகவில்லை. பிரிவினை நோக்கிய எண்ணம் பல அரசியற் கட்சிகளிடமும் மக்களிடமும் தோன்றிவிட்டது, கையாலாகாத அரசுடன் இருந்து எல்லாவழிகளிலும் அழிவதிலும் பார்க்க தனித்து இருந்து சுய பலத்தில் மக்களை காக்கமுடியும் என பெரும்பான்மையானவர்கள் விரும்புகின்றனர். உடனடியாக இந்தக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும் இல்லயேல் இலங்கையில் உண்டான பிரிவினை இந்தியாவின் நிம்மதியைக்கெடுக்கலாம் என்பது எவராலும் தடுக்கமுடியாது,

நன்றி:ஈழதேசம்