திங்கள், 31 அக்டோபர், 2011

பிரபாகரன் கடல்வழியாகத் தப்பினால் பிடிக்க உதவுவேன்: அமெரிக்க தெரிவித்தது:



இறுதிப்போரில் தேசிய தலைவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றால் அவரைப் பிடிக்க தான் உதவுவேன் என்று அமெரிக்க என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே 15 நாள் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான கேபிள் செய்தி ஒன்றை இடைமறித்துள்ள விக்கி லீக்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளது. ரோபேட் ஓ பிளேக் உடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தாம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் ஆனால் தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் திரு பொட்டு அம்மானுக்கும் தாம் மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடல் அமெரிக்க தூதரகத்தால் சரியான முறையில் டைப் செய்யப்பட்டு அதன் நகல் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் இணைப்பு)

இதன்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கையை விட்டு தேசிய தலைவர் தப்பிச் சென்றால் தாம் அதனைக் கண்காணித்து தகவல்களை உங்களுக்கு சொல்லட்டுமா என்ற விண்ணப்பமும் அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க ஒரு நாட்டை வேவு பார்க்க பயன்படுத்தும் செய்மதி அல்லது ஆளில்லா விமனம் போன்ற உதவிகளை அந் நாடு இலங்கைக்கு வழங்கத் தயாராக இருந்திருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகிறது. அமெரிக்கா பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருப்பதால் ஆளில்லா விமானம் சாத்தியமாகது. எனவே செய்மதி மூலம் முள்ளிவாய்க்காலை கண்காணித்து அங்கிருந்து புலிகளின் தலைவர்கள் தப்பிச் சென்றால் ஆதனை இலங்கைக்கு பரிமாற அமெரிக்கா தயாராக இருந்திருக்கிறது. ஆனால் அதே மே மாதம் 2009ம் ஆண்டு இலங்கை மனித உரிமைகளை மீறுவதாகவும் அமெரிக்கா பாட்டுப்பாடியுள்ளது.

அதுமட்டுமல்லாது பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தமது கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றை அனுப்பி காயப்பட்ட பொதுமக்களையும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களை வெளியே எடுக்கவும் தாம் தயார உள்ளதாக இரகசிய சமிஞ்சைகளையும் அது வெளியிட்டது. பின்னர் நடந்த சந்திப்பு ஒன்றில் கோத்தபாய ராஜபக்ஷ தேசிய தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் மன்னிப்பு வழங்க விரும்புவதாகவும் அவர்கள் இருவரையும் தாம் காப்பாற்ற நினைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என ரோபேட் ஓ பிளேக் குறிப்பிடுகிறார். முதலில் தேசிய தலைவர் மற்றும் பொட்டு அம்மான் கொல்லப்படவேண்டும் என நினைத்த கோத்தபாய பின்னர் அவர்கள் தப்பிக்கவைக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்கிறார் ரோபேட் ஓ பிளேக் அவர்கள்.

அதாவது ஒரு சிறிய வட்டத்துக்குள் அகப்பட்ட பல புலிகளின் தலைவர்களை அமெரிக்காவின் உதவியுடன் சரண்டையச் செய்து அவர்களை உயிரோடு பிடிக்கும் நோக்குடனேயே கோத்தபாய செயல்பட்டுள்ளார் என்பது அவர் 2வதாக கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் குறிப்புகளில் இருந்து தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஆனால் சரணடைவு முயற்சிகள் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். வெள்ளைக்கொடியுடன் சென்ற இரண்டாம் நிலை தலைவர்கள் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. எனவே தேசிய தலைமை என்ன முடிவெடுத்திருப்பார்கள் என்பதும் தமது தாக்குதல் வியூகங்களை எவ்வாறு வழிநடத்தியிருப்பார்கள் என்பதனையும் நாம் சொல்லத்தேவை இல்லை. இவர்களை நம்பி அங்கே எந்தக் காய் நகர்த்தல்களும் இடம்பெற்றிருக்காது. போர் முடிவுற்ற பின்னர் முள்ளிவாய்க்காலில் பேரழிவு இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்ததும், செய்மதிப் புகைப்படங்களைக் காண்பித்ததும் அமெரிக்காவின் ரெட்டை நிலையை உணர்த்தி அதன் முகமூடியையும் கிழித்துள்ளது.

ஆனால் சம்பந்தன் ஐயா தொடக்கம் சில தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்கள் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை என்ன ? இல்லை தமிழர்கள் போராட்டம் சுயநிர்ணய உரிமை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்ன எனத் தெரியாத இவர்கள் என்ன பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வல்லரசான அமெரிக்க கூப்பிட்டால் உடனே சென்றிவிடவேண்டும் என பாடப் புத்தகத்தில் படித்துவிட்டார்கள் போலும் !

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீ பரவட்டும்...!

இளங்கோவன்



பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.
சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.
'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ஏழைகளைக் கண்டால் எட்டி உதைக்கும்'. என்ற அண்ணல் அம்பேத்கரின் பார்வையோடு மரணதண்டனைத் தீர்ப்புகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்தியாவில் ஆகஸ்ட் 2004 இல் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி “நீதி பணம் படைத்தவர் களுக்கானது இன்னொருமுறை நான் பிறக்க நேரிட்டால் ஒரு பணக்காரனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்று சாவதற்கு முன் சொன்ன சொற்கள் இதனை உறுதிசெய்கின்றன. ஒரு பள்ளிச்சிறுமியைக் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்ததாக அவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு இந்தத் தூக்கு வழங்கப் பட்டது.
1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு ஒரு வாழ்நாள் தண்டனையை அதாவது சற்றேறக் குறைய 14 ஆண்டுகளை கழித்த பின் அந்த ஏழை மனிதன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்.
பாலியல் வல்லுறவு வழக்குகளில் செய்யப் படுகிற மரபணு ஆய்வு தனஞ்செய் வழக்கில் செய்யப்படவில்லை என்றும் தக்க சட்ட உதவி தனஞ்செய்க்குக் கிடைக்கவில்லை என்றும் அவ்வாறு கிடைத்திருந்தால் தீர்ப்பு வேறாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் தனஞ்செய் தரப்பில் தூக்கு நாளுக்கு முந்தைய நாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட செய்திகள் ஏதும் நீதிமன்றங்களின் காதுகளில் விழவில்லை. இறுதியாக 2004 ஆகஸ்ட் 14 இல் அந்த ஏழைச்சிறையாளியை தூக்கிலிட்டு தன் பணியை முடித்துவிட்டு அவர்பொருட்டு இறைவனிடம் பிரார்த்தனைபுரிந்துவிட்டு அந்த 72 அகவைக் கிழவரான தூக்கிலிடும் பணியாளர் தீரா மன உளைச்சலுடன் ஒதுங்கிக்கொண்டார்
எண்ணாயிரம் மனிதர்களை கழுவிலேற்றிப் பதைக்கப் பதைக்கக் கொன்ற மரபு நம்முடையது. எளிய திருட்டு வழக்குக்கு கோவலனை நேரிய விசாரணை ஏதுமின்றிக் கொன்ற நீதி தமிழர் நீதி. கணைக்கால் இரும்பொறை மன்னனுக்கே ஒரு குவளைத்தண்ணீர் தரத் திமிர்பேசிய சிறைப்பண்பாடு சங்கத்தமிழர் பண்பாடு. மூத்த தமிழ்க்குடிக்கு மனித உரிமை, மரணதண்டனை ஒழிப்பு என்பதெல்லாம் புரியவே புரியாத விந்தைகள் என்பதை நாம் அறிவோம்.
ராசீவ் காந்தி படுகொலை சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயன் “என்றாவது மரணதண்டனை இந்தியாவில் ஒழிக்கப்படும்'' என்று தன் அவாவை வெளிப்படுத்துகிற அதே காலத்தில் "சிறைக்குள் புகுந்து ராசீவ் கொலை சிறையாளிகளைக் கொன்றிருக்க வேண்டும்' என்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் சீறலும் வெளிப்படுகிற காரணம் நமக்குத் தெரிகிறது.
ஒரு துளிக் கண்ணீரிலும் ஒரு துளிச் செந்நீரிலும் ஏன் ஒரு துளி விந்திலும் கூட அரசியல் கலந்தோடும் காலம் நமது காலம். பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் சாந்தனுக்கும் உருகி யோடும் தமிழ் மனச்சான்று அப்சல் குருவுக்கும் நாளை கசாப்புக்கும் உருகியாகவேண்டும். இது மனிதநேயச் சிக்கலில்லை என்றும் நீதி குறித்த நாகரிக சமூகத்தின் பார்வைச் சிக்கல் என்றும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், மனிதநேயப் பார்வையின் ஈரம் கூடச் சுரக்காத நெஞ்சில் மனித உரிமைக்கான ஆழ்ந்த போர்க்குணம் உருவாவ தில்லை.
130நாடுகளுக்கும் மேலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட ஒரு தண்டனைக்கு நாம் எதிராகப் போர்க்கொடியை உயர்த்துகையில் மரணதண்டனைக்கு ஆதரவான வர்களால் எந்த வெட்கமும் இன்றி அரசியல் அம்மண ஆட்டம் களத்தில் தொடங்கப்படுகிறது. வாருங்கள் அனைவரும் வாருங்கள் மரணதண்டனை குறித்த உணர்ச்சிப்பெருக்கற்று அறிவார்ந்த விவாதங்களைத்தொடங்குவோம்.
“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' மரண தண்டனை வழங்கப்படலாம் என்ற இந்திய நீதித்துறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருது கோள் வேண்டும் பொழுதெல்லாம் வளைத்துப் பொருள்கொள்ளத்தக்க ஒரு ரப்பர் கூற்றாக மாறி நெடுநாட்களாகிவிட்டன. இதனை உலக மன்னிப்புக்கழகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் உறுதிசெய்த கவலை தோய்ந்த பரிந்துரைகள் நிறையக்கிடக்கின்றன.
“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' என்ற சொற்றொடரில் எந்த வழக்கையும் எளிதாக இணைத்துப் பொருள்சொல்ல நீதிமான்கள் மலிந்து கிடக்கும் சூழலில் மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்தின் அறம்சார்ந்த அடிப் படைகள் வலுப்படட்டும்.
மரணதண்டனை என்பது திரும்பப்பெற முடியாத தீவினை மரணதண்டனை என்பது தண்டனை அல்ல கொலை. மரணதண்டனை என்பது குற்றவாளி திருந்தும் வாய்ப்பைத் தடுக்கும்நோக்குகொண்டது.
மரணதண்டனை என்பது கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்பது போன்ற பழிவாங்கும் செயல்பாட்டை ஒத்தது. மரணதண்டனை மனிதரின் வாழ்வுரிமைக்கு எதிரானது. மரண தண்டனை ஒருபோதும் குற்றங்களைக் குறைப்பதில்லை.
இக்கூற்றுகள் எல்லாம் தொடர்ந்த தருக்கங் களில் நிறுவப்பட்டும் இன்று மரணதண்டனை தொடர்வதன் காரணம் எளிமையானதன்று.
ஈவிகேஎஸ் இளங்கோவன் நிகழ்த்தும் சாகச அரசியல் வித்தைகளைப் போன்று அது விளையாட்டானதும் அன்று.
காலங்காலமாய் அரசியற்சமூகத்தில் நிலவுகிற பகைவன்மத்தின் வேர்கள் ஆழப் பரவியிருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தின் அரசியற் போர்க்களத்தில் மரணதண்டனை ஒரு கூரிய போர்வாள்.
ராசீவ் காந்தியின் கொலைவழக்கு ஆதாரங் களில் நுழைந்து நுழைந்து செல்லும் எந்த ஒரு எளிய வாசகரும் அனைத்து ஆதாரங்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவதையும் அவற்றின் சுட்டுவிரல் ராசீவ் காந்தியைக் கொடூரமாக கொன்ற கொலையாளியாக சோனியா காந்தியை முதல் குற்றவாளியாகக் கருதச் செய்வதையும் உய்த்துணரமுடியும்
காவு கொடுக்கப்படுகிற மெலிந்த ஆடுகள் நம் குருதி வெறியைத் தணிக்கின்றன. பீறிட்டுக் கிளம்பும் ஆடுகளின் குருதியில் பொதுச் சமூகத்தின் மூச்சுக்காற்று குமிழியிட்டு மறைகிறது. ஒரு பெருமூச்சு மேலெழும்புகிறது.
அப்பாவிகளின் உயிர்களை ஒரு வெறிக்கடியில் குடித்தபிறகு அரசியல் ஓநாய் இளைப்பாறுகிறது. ஆகப்பெரிய புத்தகங்களில் ஒரு பெருங்கதையின் முடிவுரையை எழுதிமுடித்தபின் அடுத்த வேட்டைக்கு அது கிளம்புகிறது.
அரசியல் கயிற்றில் ஆடும் பொம்மைகளாய் தூக்குதண்டனைச் சிறையாளிகளாக பேரறி வாளன் சாந்தன் முருகன் ஆகியோர் முகங்கள் தென்படுகின்றன.
சொந்தவலியிலிருந்து இன்னபிறரின் வலியை அறிந்து கிளர்வதே மக்கள் அரசியலின் அறம்.
சதாம் உசேனைத் தூக்கிலேற்றிய அமெரிக்க அறம், பேரறிவாளன் உள்ளிட்டோரைத் தூக்கி லேற்றத் துடிக்கும் இந்திய அறம் என எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தினவோடும் திமிரோடும்தான் இருக்கிறோம்.
நமது மானுட அறத்தின் திருப்பெயரால் சொல்கிறோம்.
மரணதண்டனை ஒழியட்டும்!
அப்பாவிகளுக்கு மட்டுமல்ல! குற்றவாளிகளுக்கும் சேர்த்தே சொல்கிறோம் !
மரணதண்டனை ஒழியட்டும்!
குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் மனப்பிறழ்வு மனிதர்களுக்கும், கயர்லாஞ்சிப் படுகொலைக்குக் காரணமான ஆதிக்கச்சாதி வெறியேறிய மனிதர்களுக்கும் நாம் கற்பிக்கவேண்டிய மானுட அறம் நிறைய உள்ளது.
எந்த உணர்ச்சிக் கலப்பும் இல்லாத அறிவார்ந்த சொற்களால் ஆன இம்முழக்கத்தை முன்னெடுப் போம்!
மரணதண்டனை ஒழியட்டும்! மானுட அறம் வெல்லட்டும்!

நமக்களிக்கப்படும் தண்டனைகளே நாம் ஏந்தும் கருவிகளை தீர்மானிக்கின்றன!


இந்தியா நம் எதிரி நாடு! இந்தியர்கள் அனைவரும் நம் எதிரி! இந்திய விடுதலை நாள் நம் துக்க நாள்! எனும் முழக்கத்தோடு தமிழ் நாட்டை வென்றெடுக்க களத்தில் முனைப்புடன் செயலாற்றும் நாம், தோழர்களின் மரணத்தின் மூலமாக பல்வேறு அச்சுறுத்தல்களை இவ் ஏகாதிபத்திய அடிவருடிகள் வரலாற்றின் வழி எங்கும் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டிக் கொண்டே வருவதின் மூலமாக தேசிய இன விடுதலைக் கருத்தியலை பொதுமக்களின் மனம் நாடாமல் செய்யும் கருவியாகப் பயன்படுத்தி வருவதைக் காணலாம். அவற்றில் முதன்மையான தாக போலி மோதல் படுகொலையும், அரசப் பயங்கரவாதத்தின் மற்றொரு வகையான தூக்கு தண்டனையும் ஆகும்.
தற்போது போலி மோதல் படுகொலைக்கெதிராக பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், வழக்கு மன்றங்களும் தலையிட்டு போராடி கண்டிப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பூதம் எப்போது அரசதிகாரத்திற்கு தேவைப்படு கிறதோ அப்போது திடீரெனக் கிளம்பும். இது இவ்வாறிருக்க தற்போது உலகில் 136 நாடுகளில் தூக்குத் தண்டனையை நிறுத்தி விட்டாலும், இன்னமும் ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடி களும், அவர்களுக்கெதிராக பொதுமக்களும், போராளிகளும் கிளர்ந்தெழும்போது அவர்களை அச்சுறுத்தி அடக்குவதற்கு தூக்கு எனும் அரசப் படுகொலையை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு செய்யப்படும் கொலைகளில் ஒரு சிலவற்றின் உண்மைகளை அன்றைக்கு எவ்வாறு யார் யார் பார்த்தனர் என்றும் இன்று எவ்வாறு யார் யார் பார்க்கின்றனர் என்றும் பார்த்தோமானால் மிகவும் பிரமிப்பாகவும், தூக்கிலிடும்போது பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவார்கள்.
அதே நிகழ்வு காலம் மாறும்போது அவர் இன்றைய அரசு அமைப்பதற்கான போராளியாகவும் ஈகியர்களாகவும் வரலாற்றுப் பாட நாயகர்களாகவும் போற்றப்பட்டு கற்பிக்கப்படுவார்கள்.
ஆனால் அவ்வாறு போற்றப்படுகிற அந்த நாயகர்களின் வழியில் நாளைய அரசமைப்பதற்கும் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாத்து நிலைநிறுத் தப்பட வேண்டுமென்பதற்காகவும் இன்று அரச பயங்கரவாதிகள் உண்மையானவர்களைப் பயங்கர வாதிகளாகவும், தீண்டத்தாகதவராகவும் பொதுமக் களிடமிருந்து பிரித்து முந்தைய ஏகாதிபத்தியம் என்ன செய்ததோ அதையே இவர்களும் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டாக இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போரில் தனது இளம் வயதில் ஈடுபட்டு வெள்ளை அதிகாரியை தனது துமுக்கியால் சுட்டு வீழ்த்தி தனது 23ம் அகவையில் ஏகாதிபத்திய தூக்கு கயிறை முத்தமிட்ட தோழர்கள் திருவாளர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோர் இன்று இந்திய ஒன்றியத்தில் ஒப்பற்ற விடுதலை வீரராகவும், உலகப் போராளிகள் போற்றப்படும் போராளியாகவும், போற்றப்படுகிறார்கள்.
ஆனால் இன்று ஈழத்தில் தங்கள் இன வழி தேசியத்திற்காக தனது வாழ் நாளை அர்ப்பணித்து போராடி வந்த தோழர்கள் சாந்தனும், முருகனும், தாயக தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவத் திலும் ஈடபடா நோக்குடன் தனது தலைமைக் கட்டளையை ஏற்று தமிழகம் வழியாக வெளிநாடு செல்ல வந்த சாந்தனும், பெயர் குழப்பத்தினாலும் (திருச்சியில் இறந்த சாந்தன் எனும் போராளியின் செயல்களையெல்லாம் இவர் மீது சுமத்தி சென்னை போன்ற ஒரு பெருநகரில் பழக வேண்டும் என்பதற்காக பயிற்சி யெடுக்க சென்னை வந்த முருகனும், திராவிட கழக மரபில் வந்து இயற்கையிலேயே தமிழ் தமிழர் ஆதரவாளராக வளர்ந்த ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டு இளைஞர் தோழர் பேரறிவாளனும் சோனியாவின் கணவன் இராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு மொத்தமாக 21 ஆண்டுகளாக தனிமைச் சிறை கொட்டடியில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தின் குடியரசு தலைவர்களான திருவாளர்கள் கே.ஆர். நாராயணன், ஏ.பி.சே. அப்துல் கலாமாலும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து நடுவணரசு சிபாரிசை புறக்கணித்து தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்பியதால் 2வது முறையாக ஏ.பி.சே. அப்துல் கலாமை குடியரசு தலைவராக தேர்ந் தெடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்பினாலும்,
எங்கு அவர் வந்தால் தங்களது ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று கருதி மராட்டிய மாநிலத்தி லிருந்து தங்கள் சொல்லைத் தட்டாத திருமதி பிரதீபா பாட்டீலை இந்திய ஒன்றியத்தின் முதல் மகளாக்கி அவரின் மூலம் தங்களின் ஆசையான நம் தோழர் களின் உயிரை சட்டத்தின் மூலம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கச் செய்து விட்டு அமெரிக்கா சென்று ஓய்வெடுத்துள்ளார்கள் தாய் சோனியாவும், மகன் இராகுலும். நாமோ தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து தூக்கு தண்டனையை நிறுத்தச் சொல்லியும், தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியும் கூக்குரலிடுகிறோம்.
கண்ணாடி மாளிகையில் இருக்கும் அவர்களுக்கு நம் கூக்குரல் எங்கே கேட்கப் போகிறது. மேலும் நம் எதிர்ப்பலையைக் கண்டு எங்கு திருவாளர், கலைஞர் அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் இன்று நேர்ந்துள்ள கதி நாளை நமக்கும் நம் தோழி குடும்பத்திற்கும் நேர்ந்துவிடக் கூடாது எனக் கருதி, பல்வேறு சட்ட நிபுணர்களும் தூக்கி நிறுத்த, இரத்து செய்ய தமிழக மக்கள் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என பல சட்டப் பிரிவுகளையும், பல முன் மாதிரிகளையும் கூறியப் பிறகும், செவிடன் காதில் ஊதிய சங்காக தமிழக மக்கள் மன்றத்தின் விதி எண் 110 ன் கீழ் தனக்கு அதிகாரமில்லை எனும் பார்ப்பனிய நயவஞ்சகத்தோடு அறிவிக்கிறார் மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்கள்.
ஆனால் மறுநாளே நமது தோழி செல்வி செங்கொடி ஏற்றிய பெரு நெருப்பில் எங்கு நாம் எரிக்கப்பட்டு விடுவோமோ எனப் பயந்து சட்டமன்றத்தில் ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டு அனுப்பி விட்டு என் கடமை முடிந்து விட்டது என உட்கார்ந்து விட்டார். ஏனெனில் கடந்த காலங்களில் போட்ட தமிழக மக்கள் மன்றத் தீர்மானத்தின் மதிப்பு தெரியாதவரா அவர்.
ஆனால் அத் தீர்மானத்தை விட அமைச்சரவை தீர்மானம் மிக முக்கியம் என பல நிபுணர்கள் கூறிய போதிலும் அதைப் பற்றி இன்றுவரை வாய் திறக்க வில்லை. நாமும் ஒற்றை சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் விடிவு கிடைத்து விடும் என்றெண்ணி, அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டோம். இது போதாதா பார்ப்பன பனியா கும்பலுக்கு.
சரி கண்ணாடி மாளிகையில் மயக்கத்திலிருக்கம் கோமாளிகளிடமிருந்து நம் கண் முன்னே சாவின் விளிம்பில் இருக்கும் தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் உயிரையுமாகட்டும், அல்லது இனி வரும் காலங்களில் நம் தோழர்களின் உயிரை எடுக்க எவரும் எண்ணாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென சிந்தித்த வேளையில் கிடைத்த ஓர் தகவல் என்னவெனில்,
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வெள்ளைய ஏகாதிபத்தியம் நாள் குறித்த செய்தி கேட்டவுடன் அவர்களின் உயிரை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்து கிளம்பிய மக்கள் பெரு வெள்ளம் ஏகாதிபத்திய அடக்கு முறைக் கருவிகளால் பலமான கருவியான சிறைக் கொட்டடி மதில் சுவர்களை தகர்த்து கொட்டடி இரும்புப் பூட்டுகளை சிதறடிக்கப் போகிறது எனும் செய்தி ஏகாதிபத்திய காதுகளை எட்டியவுடன், உடனே அவசர அவசரமாக தோழர்கள் மூவரையும் நயவஞ்சகமாகக் குறித்த நாளுக்கு முந்தைய மார்ச் 23ம் நாளில் தூக்கின் மூலம் கொலை செய்யப்பட்டனர். இது அன்று அவர்களுக்கு தண்டனை நமக்கு கொலை.
அதேதான் இன்று தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் நிலையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் சிறிது ஏமாந்தாலும் ஏமாற்றப்படுவோம். அதனால் தோழர்களே சிறைக் கொட்டியை நோக்கி பயணித்து அதன் மதில் களையும், திமிர்களையும் தகர்த்தெறிந்து நம் தோழர்களைக் காப்போம்.
சரி இது வன்முறை செயல் என்று சில அதி மேதாவிகள் பொய் அரசியல் பேசலாம். ஆனால் வரலாற்றின் அடிப்படையில் அது வன்முறையா என்றால் இல்லை. ஏன் இல்லை என்றால், இதை நாம் சொல்லவில்லை இந்திய ஏகாதிபத்திய மகாத்மா என்று போற்றப்படுகிற கரம்சந்த் மோகன்ராம் காந்தி அவர்கள் சொல்கிறார்கள். இதோ அவர் கூறுவதைப் பார்ப்போம்.
1942ம் ஆண்டு நடைபெற்ற ஆகத்துப் புரட்சிக்கு முன்பு தனது ஏடான அரிசனில் அகிம்சையின் தந்தை எனும் திருவாளர் காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தது என்னவென்றால், முடிந்தவரை இப்போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவே நான் முயற்சிப் பேன். ஆனால் பிரிட்டிசு அரசை இப்போராட்டம் கவரத் தவறினால் அதன்பின் இந்தியாவில் நடைபெறுகின்ற காரியங்களுக்கு நான் பொறுப்பல்ல என்கிறார். அதே ஏட்டில் அவர்களின் மாணவரான திரு. கிசோரிலால் மக்ரூவாலா என்பவர் சதி செயல்களும், பாலங்களை தகர்ப்பதும், தந்தி தபால் தொடர்புகளை துண்டிப்பது சாத்வீக போராட்டத் திற்கு உட்பட்டது தான் என்று எழுதுகிறார்.
ஆகத்து 7ல் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் திருவாளர் காந்தி அவர்கள் அரசு என்னை முன் கூட்டியே கைது செய்தால் பலாத்கார செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். வன்முறை புரட்சி ஏற்பட்டால் நான் அதைக் கட்டுப்படுத்த மாட்டேன் என்றும் மேலும் நியூசு(ஸ்) கிரானிக்கல் எனும் பத்திரிகையில் பொதுமக்கள் இயக்கத்தில் வன்முறை போராட்டங்கள் உட்பட்டவைதான் அங்கீகரிக்கப்பட் டவைதான் என உறுதிபட கூறுகிறார்.
மேலும் காந்தியின் நெருங்கிய நண்பர் பட்டாபி சீத்தாரமையா ஆந்திர சுற்றறிக்கை எனும் ஓர் அறிக்கையை அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி அதில் கூறப்பட்டுள்ள போராட்ட வழிமுறைகளான தந்தி கம்பிகளை அறுக்கவும், தபால் நிலையங்களை கைப்பற்றவும், தண்டவாளங்களையும், பாலங்களை யும் வெடி வைத்து தகர்க்கவும் எனவும், அதை அனுமதிக்குமாறும் காங்கிரசு தலைவர்களுக்கு அனுப்பினார்.
ஆகத்து 8 அன்று காந்தி கைது செய்யப்பட்டவுடன் கோவை விமான நிலையம் கொளுத்தப்பட்டன. காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. தாலுகா அலுவ லகங்கள், தொடர் வண்டி நிலையங்கள் கைப்பற்றப் பட்டன. வழக்கு மன்றங்கள் கைப்பற்றப்பட்டு வெள்ளைய நடுவர்கள் துரத்தப்பட்டனர். போராட்ட வீரர்களே நடுவர்களாக அமர்ந்து வெள்ளை நடுவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரித்தனர். வீடுகள் தோறும் வெடிகுண்டுகள் தயாராயின.
கொல்லு பட்டறையில் துமுக்கிகள் தயாரிக்கப் பட்டு போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. தந்திக் கம்பங்கள் தபால் அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பெருமைமிகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறைக் கொட்டடி மதில்கள் உடைக்கப்பட்டு கொட்டடி இரும்புக் கம்பிகள் தகர்க்கப்பட்டு போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆக ஒரு இன விடுதலைப் போராட்டத்தில் பொய்யான நவீன பார்ப்பனர்கள் பேசும் அகிம்சை வழிப் போராட்டத்தினால் நம் தேச விடுதலையும் கண் முன் உள்ள தோழர்களையும், இனிவரும் தோழர்களையும் காக்க முடியாது. அவ்வாறு காக்கத் தவறினால் நம் போராட்டத்தை நடத்தவோ, இலக்கை அடையவோ முடியாது.
ஆகவே தோழர், தமிழரசன் வழிகாட்டியுள்ளார் என்று கூறி தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க ஓர் வழியை மகா ஆத்மா வழங்கி உள்ளது. ஆகவே மேலே அவர் காட்டிய சிறை உடைப்பு தகர்ப்புப் போராட்டத்தினால் நமது நாட்டை நமதாக்கி, நம் விடுதலைப் பூட்டை நாமே திறப்போம்.
தோழர்களே! விடுதலை என்பது கெஞ்சி பெறுவதில்லை. மிஞ்சி பெறுவது எனும் தொடரை நெஞ்சிலேற்றி விடுதலை கனலை மூட்டுவோம்! மூன்று தமிழர் உயிரை மீட்போம்!

மூன்று தமிழர்களைக் காப்பதே முதல் வேலை!



  இந்தியப் பேராதிக்கத்தின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களையும் தூக்கில் போட துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.
செய்யாத குற்றத்திற்காக 21 ஆண்டுகள் தனிமைச் சிறைக் கடுங்காவலில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போதாது இவர்களை தூக்கில் போட்டு கொன்றால் தான் எங்கள் வெறி அடங்கும் என்பது காங்கிரஸ் காரர்கள் வேறு வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தமிழர்கள். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்பதை தவிர இம் மூவரும் வேறு என்ன குற்றம் செய்தார்கள்?
ராஜீவ்காந்தி கொலைக்கும் இம்மூவருக்கும் நேரடியான எந்த சம்பந்தமும் இல்லை. ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் சிவராசன், தனு, சுபா ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்தளவிற்கு கொலைத் திட்டம் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனைக் கொடுத்த நடுவர்களே தங்களின் தீர்ப்புரையில் மாறி மாறி குறிப்பிட்டுள்ளனர். ஆக வழக்குப்படி ராஜீவ் காந்தி கொலை இம்மூவருக்கும் தெரியாத ஒரு நிகழ்வு. இந்நிலையில் இவர்கள் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும்?
அடுத்து தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையிலும், அன்றைய அரசு தடா சட்டத்தையே திரும்பப் பெற்று விட்ட சூழலிலும், தடா சட்டிடத்தின்அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தும், இதன் வழி ஜோடிக்கப்பட்ட சாட்சிகளை வைத்தும் அதே நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது நீதியா?
குறிப்பாக பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட வழக்கு என்பது சட்ட அறிவு இல்லாத சாதாரண மக்களால் கூட ஏற்க முடியாதது. இராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கான "பெல்ட் பாம்' செய்வதற்கு பேரறிவாளன் உதவியாக இருந்தாராம். இதற்கு ஆதாரம் பெட்டிக் கடையில் 9 வோல்ட் பேட்டரி வாங்கினார் என்பதும் இவர் மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பட்டயப் படிப்பு படித்தவர் என்பதும்தான் இதற்கு ஆதாரம். இதற்காகத்தான் இவருக்குத் தூக்குத் தண்டனை.
இதில் கொடுமை என்னவென்றால், இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தலைமைப் புலனாய்வு அதிகாரியான இராகோத்தமன், பணிஓய்வு பெற்ற பிறகு அவர் எழுதிய நூலிலும், அவர் கொடுத்த பேட்டியிலும், அவர் சொன்னஉண்மைஎன்னவென்றால், “இராஜீவ் கொலை வழக்கில் எங்களால் (சிபிஐ) கண்டு பிடிக்க முடியாதது எதுவென்றால் இராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட "பெல்ட் பாம்மை யார் செய்தார்கள் என்று இறுதிவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறியிருக்கிறார்.
ஆக "பெல்ட் பாம்பை' யார் செய்தார்கள்? யாரிடமிருந்து வாங்கப்பட்டது? அதில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எதுவுமே தெரியாத நிலையில் நீதிமன்றத்திலும் இதுகுறித்து ஆவணப்படுத்தாத நிலையில், பேரறிவாளன் பெல்ட் பாம் செய்வதற்கு உதவினார் என்று கொட்டடையில் அடைத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுஞ் செயல்.
இராஜீவ் கொலையில் உள்நாட்டு வெளிநாட்டுச் சதி இருக்கிறது. குறிப்பாக சந்திராசாமிக்கும், சோனியாகாந்திக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அழுத்தமான வாதங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டது. இதை மூடி மறைக்க அன்றைய நரசிம்மராவ் அரசு ஜெயின் ஆணையம் ஒன்றையும் உருவாக்கியது. விசாரணை நடத்திய ஜெயின் ஆணையம், இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி இந்திய அரசு பல் நோக்கு விசாரணை அமைப்பை ஒன்றை நிறுவி விசாரிக்கப்பட்டு தடா நீதிமன்றத்தில் மூடி சீலிடப்பட்டு அறிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றுவரை சீல் திறக்கப்படவும் இல்லை, பல் நோக்கில் ஒரு நோக்கும் தெரியவில்லை.
மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜெயின் கமிசன் பிரதமர் அலுவலகத்திலும் கோரியது. ஆனால் பிரதமர் அலுவலகம் தர மறுத்ததோடு நில்லாமல், ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டது என்று மடல் வேறு கொடுத்திருக்கிறது. இறுதியாக வைத்த வர்மா கமிசன் அறிக்கையும் காணவில்லை. இதன் போக்கு ராஜீவ் கொலை விசாரணை முழுமையாக இல்லை என்பதும், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை.
சிபிஐ 26 பேர்களை பொய்யாக இராஜீவ் கொலையில் இணைத்தது. 28.1.1998 ஆம் ஆண்டு தடா சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றதில் 22 பேர்களுக்கு தூக்கை இரத்து செய்தது. இதில் 19 பேர்களை எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்று தீர்ப்புக் கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இராபட் பயாஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தூக்கு என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் பங்கேற்றனர். இம்மூவரும் ஏகமனதாக தீர்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நளினிக்கு தூக்கு தண்டனை கூடாது என்று நீதிபதி கே.டி. தாமசும், இராபட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரும் குற்றமற்றவர்கள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதி வாத்வா அவர்களும் தங்களின் தீர்ப்புரையில் கூறியுள்ளனர். இருந்த போதிலும் பெரும்பான்மை அடிப்படையில் அனைவருக்கும் தண்டனை உறுதி செய்யப் பட்டது. ஆக 26 பேருக்கான தூக்கை 4 பேராக குறைத்ததும், அதிலும் மாறுபட்ட தீர்ப்புரைகளும் எதைக் காட்டுகிறது என்றால் வழக்கில் சிறிதளவும் உண்மை தன்மை இல்லை என்பதையும் கொல்லப்பட்டவர் இந்தியாவின் பிரதமர் என்பதால் யாருக்காவது தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வாதத்திற்காக ஒருவேளை இம்மூவரும் இராஜீவ் கொலைக்கு மறைமுகமாக உதவினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இதற்கான தண்டனையாக இவர்கள்இதுவரை சிறையில் இருந்த 21 ஆண்டுகள் அதாவது இரண்டு ஆயுள் தண்டனை போதாதா? இவர்கள் கணக்குப்படி குற்றவாளிகளான இம்மூவரும் 21 ஆண்டுகள் சிறையில் இருந்தும் இன்னும் திருந்தவே இல்லையா? அல்லது இவர்கள் திருந்தவே மாட்டார்களா? அப்படியானால் உங்கள் சிறை குற்றவாளிகளை திருந்துவதற்கு வாய்ப்பளிக்காதா?
இந்தியாவின் தேச பிதாவாக அழைக்கப்பட்ட காந்தியின் கொலை வழக்கில் நாதுராம் கோட்சேவுடன் இணைந்து காந்தி கொலையில் பங்கு கொண்ட கோபால் கோட்சே என்பார் ஆயுள் தண்டனைப் பெற்று 16 ஆண்டுகளில் விடுதலையாகி விட்டார். வெளியில் வந்த கோபால் கோட்சே ஆங்கில டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், "காந்தியைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவுமில்லை. இதற்காக யாரிடமும் நான் மன்னிப்புக் கேட்கவுமில்லை' என்று கூறியுள்ளார். ஆக காந்தியைநான் கொன்றதற்காக வருத்தப்படவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்த கோபால் கோட்சே 16 ஆண்டுகளில் விடுதலை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை, நாங்கள் நிரபராதிகள் என்று கூறுபவர்களுக்கு 21 ஆண்டுகள் தண்டனை முடிந்தபிறகு இப்போது தூசு தட்டி எடுத்து தூக்கில் போட துடிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழின விரோத போக்குதானே?
சிறிதளவும் உண்மையில்லாத குற்றத்திற்காக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதின் நோக்கம் மிகவும் கேடானது. இது இந்தியப் பார்ப்பனிய ஆதிக்க வெறியின் வெளிப்படையான செயல். சிங்கள வெறியன் இராஜபக்சேவின் விருப்பமும் இதுதான்.
எனவே இந்தியாவின் இத்தகைய போக்கு தமிழ்த் தேசிய இனத்தின் மீது நடத்தப்படும் ஒடுக்கு முறையே! மூன்று தமிழர்களைப் பாதுகாப்பதுஎன்பது மூன்று உயிர்களை பாதுகாப்பது என்ற பொருள் மட்டுமல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையாகவே நாம் கருதவேண்டும். இதுதமிழ்த் தேசிய இனத்திற்கு விடப்பட்ட சவால். எனவே மூன்று தமிழர்களை பார்ப்பதுமுதன்மை வேலையாக்குவோம்!