திங்கள், 31 அக்டோபர், 2011

பிரபாகரன் கடல்வழியாகத் தப்பினால் பிடிக்க உதவுவேன்: அமெரிக்க தெரிவித்தது:



இறுதிப்போரில் தேசிய தலைவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றால் அவரைப் பிடிக்க தான் உதவுவேன் என்று அமெரிக்க என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே 15 நாள் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான கேபிள் செய்தி ஒன்றை இடைமறித்துள்ள விக்கி லீக்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளது. ரோபேட் ஓ பிளேக் உடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தாம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் ஆனால் தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் திரு பொட்டு அம்மானுக்கும் தாம் மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடல் அமெரிக்க தூதரகத்தால் சரியான முறையில் டைப் செய்யப்பட்டு அதன் நகல் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் இணைப்பு)

இதன்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கையை விட்டு தேசிய தலைவர் தப்பிச் சென்றால் தாம் அதனைக் கண்காணித்து தகவல்களை உங்களுக்கு சொல்லட்டுமா என்ற விண்ணப்பமும் அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க ஒரு நாட்டை வேவு பார்க்க பயன்படுத்தும் செய்மதி அல்லது ஆளில்லா விமனம் போன்ற உதவிகளை அந் நாடு இலங்கைக்கு வழங்கத் தயாராக இருந்திருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகிறது. அமெரிக்கா பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருப்பதால் ஆளில்லா விமானம் சாத்தியமாகது. எனவே செய்மதி மூலம் முள்ளிவாய்க்காலை கண்காணித்து அங்கிருந்து புலிகளின் தலைவர்கள் தப்பிச் சென்றால் ஆதனை இலங்கைக்கு பரிமாற அமெரிக்கா தயாராக இருந்திருக்கிறது. ஆனால் அதே மே மாதம் 2009ம் ஆண்டு இலங்கை மனித உரிமைகளை மீறுவதாகவும் அமெரிக்கா பாட்டுப்பாடியுள்ளது.

அதுமட்டுமல்லாது பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தமது கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றை அனுப்பி காயப்பட்ட பொதுமக்களையும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களை வெளியே எடுக்கவும் தாம் தயார உள்ளதாக இரகசிய சமிஞ்சைகளையும் அது வெளியிட்டது. பின்னர் நடந்த சந்திப்பு ஒன்றில் கோத்தபாய ராஜபக்ஷ தேசிய தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் மன்னிப்பு வழங்க விரும்புவதாகவும் அவர்கள் இருவரையும் தாம் காப்பாற்ற நினைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என ரோபேட் ஓ பிளேக் குறிப்பிடுகிறார். முதலில் தேசிய தலைவர் மற்றும் பொட்டு அம்மான் கொல்லப்படவேண்டும் என நினைத்த கோத்தபாய பின்னர் அவர்கள் தப்பிக்கவைக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்கிறார் ரோபேட் ஓ பிளேக் அவர்கள்.

அதாவது ஒரு சிறிய வட்டத்துக்குள் அகப்பட்ட பல புலிகளின் தலைவர்களை அமெரிக்காவின் உதவியுடன் சரண்டையச் செய்து அவர்களை உயிரோடு பிடிக்கும் நோக்குடனேயே கோத்தபாய செயல்பட்டுள்ளார் என்பது அவர் 2வதாக கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் குறிப்புகளில் இருந்து தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஆனால் சரணடைவு முயற்சிகள் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். வெள்ளைக்கொடியுடன் சென்ற இரண்டாம் நிலை தலைவர்கள் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. எனவே தேசிய தலைமை என்ன முடிவெடுத்திருப்பார்கள் என்பதும் தமது தாக்குதல் வியூகங்களை எவ்வாறு வழிநடத்தியிருப்பார்கள் என்பதனையும் நாம் சொல்லத்தேவை இல்லை. இவர்களை நம்பி அங்கே எந்தக் காய் நகர்த்தல்களும் இடம்பெற்றிருக்காது. போர் முடிவுற்ற பின்னர் முள்ளிவாய்க்காலில் பேரழிவு இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்ததும், செய்மதிப் புகைப்படங்களைக் காண்பித்ததும் அமெரிக்காவின் ரெட்டை நிலையை உணர்த்தி அதன் முகமூடியையும் கிழித்துள்ளது.

ஆனால் சம்பந்தன் ஐயா தொடக்கம் சில தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்கள் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை என்ன ? இல்லை தமிழர்கள் போராட்டம் சுயநிர்ணய உரிமை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்ன எனத் தெரியாத இவர்கள் என்ன பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வல்லரசான அமெரிக்க கூப்பிட்டால் உடனே சென்றிவிடவேண்டும் என பாடப் புத்தகத்தில் படித்துவிட்டார்கள் போலும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக