சனி, 23 ஏப்ரல், 2011

கருணை இல்லாத கருணாநிதியே….


அன்புள்ள கருணாநிதிக்கு, ஈழத்தில் பிறந்த பாவப்பட்ட, உலகத்தாலும், உன்னாலும் வஞ்சிக்கப் பட்ட ஒரு ஈழத் தமிழன் எழுதும் கடிதம்.   உன்னை ஒருமையில் தான் அழைக்க முடியும். ஏனென்றால், ராஜபக்ஷேவை விட, எங்களுக்கு துரோகம் இழைத்தது நீதான்.

எங்களில் பலர், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் பல ஆண்டுகளாக அடைபட்டு உள்ளது நீ ஒன்றும் அறியாதது அல்ல.   ஏனென்றால், எங்களை அடைக்க உத்தரவிட்டதே நீதான்.   தமிழனாகப் பிறந்ததைத் தவிர, வேறு எந்தப் பாவமும் செய்யாதவர்கள் நாங்கள்.
 Photo00083
நீயும் உன் குடும்பமும், ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது, நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தோம்.   அடிமைப் பட்டுக் கிடந்த எம் தமிழினத்தை விடுவிக்கப் போராடிய ஒரே குற்றத்திற்காக, எம்மையும், எம் குழந்தைகளையும், ராஜபக்ஷே கொத்துக் குண்டுகள் போட்டு அழித்தான் என்றால், நீ எங்களை முதுகில் குத்தி அழித்தாய்.

தாய்த் தமிழகத்துக்கு வந்தால், எங்கள் உறவுகள் எங்களை ஏந்திக் கொள்வார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் தமிழகம் வந்த எங்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருவது உனது காவல்துறை.

நாங்கள் செய்தது மூன்று குற்றங்கள். முதல் குற்றம், தமிழனாய் பிறந்தது. இரண்டாவது குற்றம், இலங்கையில் பிறந்தது. மூன்றாவது குற்றம், தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் எங்களுக்கு,

பல முறை நீதிமன்றம் மூலமாகவும், பல்வேறு போராட்டங்கள் மூலமாகவும், மற்ற முகாம்களில் உள்ள எங்கள் குடும்பத்தினரோடு எங்களை சேர்ந்து வாழ விடு என்று தானே உன்னிடம் கேட்டோம் ? வேறு என்ன கேட்டோம் ?

இந்த ஒரே காரணத்திற்காக செங்கல்பட்டில், ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராசாவிடமும், சாதிக் பாட்சாவிடமும், எச்சில் இலை பொறுக்கிய ப்ரேம் ஆனந்த் சின்ஹாவும், சேவியர் தனராஜ் என்ற உதவிக் கண்காணிப்பாளரும், தடியடி நடத்தி, எங்கள் கை கால்களை உடைத்தார்கள். இது எங்கள் தாய் வீட்டிலா இது நடக்கிறது என்று எங்களை மலைக்க வைத்து, எங்கள் இதயத்தை துடிதுடிக்க வைத்தது நீதான்.

உனது நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம்.   இப்போது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

நாங்கள் எங்களை விடுவித்து கட்டுப்பாடுகள் இல்லாமல், விடக் கோரவில்லை. ஏற்கனவே பல்வேறு கட்டுப் பாடுகள் இருக்கும், மற்ற அகதி முகாம்களில் இருக்கும் எங்கள் உறவுகளோடு எங்களை சேர்த்து வாழ விடு என்றுதான் கேட்கிறோம்.

எங்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதால், எங்களை வெளியில் விடுவதற்கு, நீ தேர்தல் ஆணையத்தின் அனுமதியைக் கூட கேட்க வேண்டியதில்லை.

இப்போதாவது, எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

உன் மீது துளியும் அன்பில்லாத

ஈழத்தில் பிறந்த பாவப்பட்ட தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக